ரகசிய ஆவணங்கள் பதுக்கல்: இந்திய வம்சாவளி ஆலோசகர் கைது

அமெரிக்க விமானப் படை தொடர்பான ரகசிய ஆவணங்களை பதுக்கியதாகவும், சீன அரசு அதிகாரிகளுடன் ரகசிய தொடர்புகள் வைத்திருந்ததாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக...
அமெரிக்க ஆய்வாளரும், தெற்காசிய வெளியுறவுக் கொள்கை ஆலோசகருமான ஆஷ்லே டெல்லிஸ்.
அமெரிக்க ஆய்வாளரும், தெற்காசிய வெளியுறவுக் கொள்கை ஆலோசகருமான ஆஷ்லே டெல்லிஸ்.
Published on
Updated on
2 min read

வாஷிங்டன்: அமெரிக்க விமானப் படை தொடர்பான ரகசிய ஆவணங்களை பதுக்கியதாகவும், சீன அரசு அதிகாரிகளுடன் ரகசிய தொடர்புகள் வைத்திருந்ததாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக 64 வயதான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க ஆய்வாளரும், தெற்காசிய வெளியுறவுக் கொள்கை ஆலோசகருமான ஆஷ்லே டெல்லிஸ் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆயிரம் பக்கங்களுக்கு அதிகமான மிக ரகசிய மற்றும் ரகசிய ஆவணங்கள் அடங்கிய தேசிய பாதுகாப்பு தொடர்பான தகவல்களை சட்டவிரோதமாக வீட்டில் வைத்திருந்ததாக அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது.

மும்பையில் பிறந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆஷ்லே டெல்லிஸ், அமெரிக்க வெளியுறவுத்துறையின் ஆலோசகராக பணியாற்றி வருகிறார், மேலும் 2001 முதல் அமெரிக்க அரசில் பல குறிப்பிடத்தக்க பதவிகளை வகித்துள்ளார். இவர் அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் கீழ் தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் பணியாற்றியுள்ளார். அமெரிக்க வெளியுறவுத்துறையின் ஊதியம் பெறாத ஆலோசகராகவும், பாதுகாப்புத் துறையின் நிகர மதிப்பீட்டு அலுவலகத்தின் ஒப்பந்ததாரராகவும் பணியாற்றினார்.

இந்தியா மற்றும் தெற்காசிய விவகாரங்களில் நீண்டகாலமாக ஆலோசகராவும், நன்கு அறியப்பட்ட அமெரிக்க ஆய்வாளர். அமெரிக்க கொள்கை ஆய்வாளரான ஆஷ்லே டெல்லிஸ், அமெரிக்க விமானப் படை தொடர்பான ரகசிய ஆவணங்களை பதுக்கி வைத்திருந்ததாகவும், சீன அரசு அதிகாரிகளுடன் ரகசிய தொடர்புகள் வைத்துக் கொண்டு சந்தித்ததாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வர்ஜினியாவின் வியன்னாவில் உள்ள அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் போது, சட்டவிரோதமாக வைத்திருந்த ஆயிரம் பக்கங்களுக்கு அதிகமான தேசிய பாதுகாப்பு தொடர்பான மிக ரகசிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியதாக அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது.

2023 முதல் பாதுகாப்பான அலுவலகங்களிலிருந்து ரகசிய ஆவணங்களை எடுத்துக் கொண்டு சீன அதிகாரிகளைச் சந்தித்ததாக டெல்லிஸ் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் தெற்காசிய பிரச்னைகளில் ஆலோசகரான டெல்லிஸ் தற்போது மூலோபாய விவகாரங்களுக்கான டாடா தலைவராக உள்ளார் மற்றும் சர்வதேச அமைதிக்கான கார்னகி எண்டோமென்ட்டில் மூத்த உறுப்பினராக உள்ளார்.

நீதிமன்ற ஆவணங்களின்படி, கடந்த ஆண்டு செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத்துறை அலுவலகங்களிலிருந்து வகைப்படுத்தப்பட்ட கோப்புகளை டெல்லிஸ் எடுத்துச் சென்றுள்ளார். அமெரிக்க ராணுவ விமானப் படை தொடர்பான ரகசிய ஆவணங்களை எடுத்துச் செல்வதை அலுவலகங்களில் இருந்து பாதுகாப்பு கேமராக்களில் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக அக்டோபர் 11 ஆம் தேதி புலனாய்வுத் துறை அதிகாரிகள் அவரது வீட்டில் சோதனை செய்ததில், ​​பூட்டிய பெட்டிகளுக்குள் ரகசிய ஆவணங்களை பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.

மேலும், சமீப காலமாக சீன அரசு பிரதிநிதிகளை பல முறை சந்தித்ததாக டெல்லிஸ் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதால் இந்த வழக்கு மேலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

செப்டம்பர் 12 ஆம் தேதி, டெல்லிஸ் சக ஊழியர் ஒருவரிடன் பல ரகசிய ஆவணங்களை அச்சிடச் சொன்னதாகக் கூறப்படுகிறது. பின்னர், செப்டம்பர் 25 ஆம் தேதி, அமெரிக்க விமானப் படை தொடர்பான ரகசிய ஆவணங்களை அவரே அச்சிட்டதாகக் கூறப்படுகிறது.

2022 செப்டம்பரில் வர்ஜீனியாவில் உள்ள ஒரு உணவகத்தில் நடந்த சந்திப்பு உட்பட, டெல்லிஸ் பல சந்தர்ப்பங்களில் சீன அரசு பிரதிநிதிகளை சந்தித்ததாக வழக்குரைஞர்கள் கூறியுள்ளனர்.

இதுபோன்று 2023 ஏப்ரல் 11 ஆம் தேதி நடந்த மற்றொரு சந்திப்பின் போது, டெல்லிஸும் சீன பிரதிநிதிகளும் ஒரு உணவகத்தில் இரவு உணவுவின் போது, ​​ஈரானுடனான சீனாவின் உறவுகள் மற்றும் புதிய தொழில்நுட்ப மேம்பாடுகள் குறித்து விவாதித்ததை கேட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Summary

Who is Ashley Tellis?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com