
ஜகார்த்தா: இந்தோனேசியாவின் ரியாவ் தீவுகள் மாகாணத்தில் புதன்கிழமை அதிகாலை எண்ணெய் கப்பல் ஒன்று பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது தீப்பிடித்ததில் 10 பேர் பலியாகினர் மற்றும் 18 பேர் காயமடைந்தனர் என்று உள்ளூர் போலீசார் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தோனேசியாவின் படாம் தீவில் உள்ள தன்ஜங்குன்காங் துறைமுகம் உள்ளது. அந்த துறைமுகத்தில் பாமாயில் எண்ணெய் கப்பல் ஒன்று பழுது பார்க்கும் பணிகளுக்காக நிறுத்தப்பட்டிருந்தது.
இந்தக் கப்பலில் செவ்வாய்க்கிழமை ஏராளமான பணியாளர்கள் பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இந்திய நேரப்படி புதன்கிழமை அதிகாலை 4 மணியளவில் கப்பலின் கியாஸ் டேங்கில் திடீரென தீப்பிடித்துள்ளது. இதை தொடர்ந்து கப்பலின் கியாஸ் டேங்க் பயங்கர சத்தத்துடன் வெடித்துள்ளது.
இந்த விபத்தில் புதன்கிழமை நிலவரப்படி, 10 பணியாளர்கள் தீயில் கருகி பலியாகியுள்ளனர். மேலும் இந்த விபத்தில் 18 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. பாதிக்கப்பட்ட அனைவரும் கப்பலை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள்.
தீப்பிடித்து எரிந்து கப்பலில் எண்ணெய் எடுத்துச் செல்லப்படவில்லை என்றும் கப்பலின் உரிமையாளர் யார் என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று கூறப்படுகிறது
கடந்த 2009 இல் கட்டப்பட்ட இந்தக் கப்பலில், கடந்த ஜூன் மாதம் படாமில் பழுதுபார்க்கும் போது தீ விபத்து ஏற்பட்டதில் நான்கு பேர் பலியாகினர், 9 பேர் காயமடைந்தனர். அந்த தீ விபத்து பாதுகாப்பு நடைமுறைகளை மீறியதாகவும், வெல்டிங் பணியின் போது ஏற்பட்ட தீப்பொறிகளால் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக 2 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், அதே கப்பலில் தற்போது மீண்டும் தீ விபத்து நிகழ்ந்துள்ளதற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
படாம் தீவு சிங்கப்பூரிலிருந்து கடல் வழியாக சுமார் 20 கிலோமீட்டர் (12.4 மைல்) தொலைவில்தான் உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.