
கர்நாடகம் மாநிலம் ஆலந்த் தொகுதியில் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம் செய்வதற்கு போலி விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டிருப்பதாதவும், அந்த விண்ணப்பம் ஒன்றிற்கு ரூ.80 செலுத்தப்பட்டிருக்கும் அதிர்ச்சி தகவலை சிறப்பு புலனாய்வு குழு வெளியிட்டுள்ளது.
ராகுல் காந்தி கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி நடத்திய பத்திரிகையாளா் சந்திப்பில், வாக்குத் திருட்டு தொடா்பான குற்றச்சாட்டை முன்வைத்து, அதற்கான ‘பிடிஎஃப்’ வடிவிலான ஆதாரத்தை ஆங்கிலம், ஹிந்தி மற்றும் கன்னட மொழிகளில் வலைதளத்தில் பதிவேற்றம் செய்தாா்.
மேலும், இந்த வாக்குத் திருட்டுக்கான கருப்பு-வெள்ளை ஆதாரங்களை தற்போது நாங்கள் வெளியிட்டுள்ளோம். வரும் நாள்களில், மிகுந்த சப்தத்துடன் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் வகையிலான வாக்குத் திருட்டு தொடா்பான ஆதாரங்கள் வெளியிடப்படும் என தெரிவித்தார்.
வாக்காளா் நீக்கத்துக்கான படிவம் 7-ஐ முறைகேடாக பயன்படுத்தி, ஆயிரக்கணக்கானோரின் வாக்குரிமை பறிக்கப்பட்டது. 5,994 மோசடி விண்ணப்பங்கள் கண்டறியப்பட்ட நிலையில், சிஐடி விசாரணைக்கு மாநில காங்கிரஸ் அரசு உத்தரவிட்டது.
இவ்வழக்கு விசாரணைக்குத் தேவையான ஆவணங்களில் ஒரு பகுதியை தோ்தல் ஆணையம் வழங்கிய நிலையில் முக்கிய ஆவணங்களை வழங்க மறுத்தது.
இதையடுத்து வாக்குத் திருட்டின் பின்னணியில் இருப்போரை தோ்தல் ஆணையம் பாதுகாக்கிறது.
முக்கிய ஆதாரங்களைத் தோ்தல் ஆணையம் திடீரென தடுத்து வைத்துள்ளது ஏன்? யாரைப் பாதுகாக்க தோ்தல் ஆணையம் இவ்வாறு செயல்படுகிறது? பாஜகவின் ‘வாக்குத் திருட்டு துறையாக’ தோ்தல் ஆணையம் மாறிவிட்டதா? பாஜகவின் அழுத்தத்துக்கு அடிபணிந்துவிட்டதா? மக்களின் வாக்குரிமை பாதுகாக்கப்பட வேண்டும்; நாட்டின் ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று காா்கே வலியுறுத்தியிருந்தார்.
இதனிடையே, சிறப்பு புலனாய்வுக் குழுவினர் உள்ளூரில் தர மையம் நடத்தி வந்த முகமது அஷ்பக்கிடம் ஆரம்ப முறைகேடுகளைக் கண்டறிந்தனர்.
இதுதொடர்பாக 2023 பிப்ரவரி மாதம் அஷ்பக்கிடம் விசாரணை நடத்தினர். ஆனால் அவர் தான் குற்றமற்றவர் என்று கூறி தன்னிடம் இருந்த மின்னணு சாதனங்களை ஒப்படைத்தார். அதன் அடிப்படையில் அஷ்பக் விடுவிக்கப்பட்டதை அடுத்து துபை தப்பிச் சென்றார்.
அவர் ஒப்படைத்த மின்னணு சாதனங்களை ஆய்வு செய்த சிறப்பு புலனாய்வுக் குழுவினர், அஷ்பக் கூட்டாளியான எம்.டி. அக்ரம் உள்ளிட்ட மூன்று பேருக்கும் தொடர்பு இருப்பதை கண்டறிந்தனர்.
இந்த நிலையில், கர்நாடகம் மாநிலம் கலபுரகி மாவட்டம் ஆலந்த் சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்காளர் பட்டியல் முறைகேடுகளை விசாரிக்கும் கர்நாடக காவல்துறை சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி), வாக்காளர் பட்டியலில் இருந்து பெயரை நீக்க போலி விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டிருப்பதாகவும், ஒவ்வொரு போலி விண்ணப்பத்திற்கும் ஒரு தரவு மையத்திற்கு ரூ.80 வீதம் செலுத்தப்பட்டிருக்கும் அதிர்ச்சி தகவலை சிறப்பு புலனாய்வு குழு வெளியிட்டுள்ளது.
சிறப்பு புலனாய்வு குழு அறிக்கையின்படி, 2022 டிசம்பர் முதல் 2023 பிப்ரவரி வரை வாக்காளர் பெயர் நீக்கத்திற்காக மொத்தம் 6,018 போலி விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன, இதற்கு மொத்தமாக ஒரு தரவு மையத்திற்கு ரூ.4.8 லட்சம் வரை வழங்கப்பட்டிருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், பெறப்பட்ட விண்ணப்பங்களில் 24 விண்ணப்பங்கள் மட்டுமே உண்மையானவை என்பதும், இடம் மாறுதல் காரணமாக பெயர் நீக்கம் கோரியவர்கள் என்பதும், மற்ற யாருக்கும் அவர்களின் பெயர் நீக்கம் தொடர்பாக எந்தத் தகவலும் தெரியாது என்பதும், இதற்காக 75 சிம்கார்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளதும் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணையில் தெரியவந்துள்ளது.
சுபாஷ் குட்டேதர் வீட்டில் சோதனை
வாக்காளர் பெயர் நீக்கம் தொடர்பாக, கடந்த வெள்ளிக்கிழமை(அக்.17) குட்டேதர், அவரது மகன்கள் ஹர்ஷனந்தா மற்றும் சந்தோஷ் மற்றும் அவர்களது ஆடிட்டர் மல்லிகார்ஜுன் மஹந்தகோல் ஆகியோரின் வீடுகளில் சோதனை நடத்தி விசாரணை மேற்கொண்டது.
இந்த சோதனையின் போது ஏழுக்கும் மேற்பட்ட மடிக்கணினிகள் மற்றும் பல செல்போன்களை பறிமுதல் செய்தனர், மேலும் பணம் செலுத்தப்பட்டதற்கான ஆதாரத்தையும் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் சிறப்பு புலனாய்வுக் குழுவினர் தெரிவித்தனர்.
அதே நேரம், போலியான சான்றுகளைப் பயன்படுத்தி தேர்தல் ஆணையத்தின் போர்ட்டலுக்குள் எவ்வாறு அணுமதி பெறப்பட்டது, எப்படி வாக்காளர் நீக்க கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த மோசடி குறித்து அதிகாரிகளுக்கோ அல்லது பாதிக்கப்பட்ட வாக்காளர்களுக்கோ தெரியாது என கூறப்படுகிறது.
இது தொடர்பாக பேசிய பாஜக முன்னாள் எம்எல்ஏ சுபாஷ் குட்டேதர், வாக்காளர் பெயர் நீக்கம் முயற்சிக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று மறுத்துள்ளார். காங்கிரஸ் எம்எல்ஏ பி.ஆர். பாட்டீல் தனிப்பட்ட மற்றும் அரசியல் ஆதாயத்திற்காக இதுபோன்ற குற்றச்சாட்டுகளை கூறுகிறார்.
மேலும், பி.ஆர். பாட்டீல் அமைச்சராக விரும்புவதாகவும், இதுபோன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்துவதன் மூலம் தேசிய அளவில் கவனம் பெறுவதற்காகவும், ராகுல்காந்தியின் செல்வாக்கை பெறுவதற்காக என்மீது இதுபோன்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்துவதாக கூறியுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாஜகவுக்கு எதிரான தனது 'வாக்குத் திருட்டு' குற்றச்சாட்டுகளில் ஆலந்த் தொகுதி வாக்காளர்கள் நீக்கம் குறித்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
வாக்காளர் பட்டியல் மோசடி வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.