

திருக்குவளை: திருக்குவளை அருகே கொடியாலத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சுமார் 300 ஏக்கர் சம்பா இளம் பயிர்களை மழைநீர் சூழ்ந்த நிலையில் அதனை வடிய வைக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கிய நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் மூன்று நாள்களாக கனமழை கொட்டி தீர்த்தது. தற்போது மாவட்டத்தில் மழை ஓய்ந்திருந்தாலும் வடிகாலாக நாகை மாவட்டம் இருப்பதால் தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த மழை நீர் தற்போது வடிந்து வருகிறது.
இந்த நிலையில், கீழ்வேளூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் நேரடி விதைப்பில் முளைத்த சம்பா இளம் நெற்பயிர்கள் முழுவதுமாக மழைநீரில் மூழ்கி உள்ளது.
மேடான ஒரு சில இடங்களில் உள்ள விளைநிலங்களில் தேங்கிய தண்ணீர் மற்றும் தற்போது வடிய தொடங்கியுள்ளது. குறிப்பாக கீழ்வேளூர் ஒன்றியத்திற்குட்பட்ட கொடியாலத்தூர், தென்சாரி, மயிலாப்பூர், கோவில்பத்து, வடபாதி, மணலூர், காக்கழனி, செருநல்லூர், தேவூர், வெண்மணி, ஆந்தக்குடி, காவலாக்குடி திருப்பஞ்சரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 5000-க்கும் மேலான நேரடி விதைப்பு மூலமாக முளைத்த சம்பா இளம் நெற்பயிர்கள் முழுவதுமாக மழை நீரில் மூழ்கியதால் அதன் வேர்ப்பகுதி பாதிக்கும் சூழலில் உள்ளது.
குறிப்பாக கொடியாலத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 300 ஏக்கருக்கும் அதிகமான பரப்பில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பயிர்களே தெரியாத அளவில் மழை நீர் சூழ்ந்து வெள்ளக்காடக காட்சியளித்த பகுதிகளில் மழைநீர் சற்று வடியத் தொடங்கியதால் விவசாயிகள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
விவசாயிகள் கோரிக்கை
உடனடியாக வேளாண்மைதுறை அதிகாரிகள் மூழ்கிய சம்பா பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும். அடுத்தகட்ட சாகுபடிக்கான ஆலோசனைகளை வேளாண்மைத் துறையினர் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்துள்ளனர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.