

கர்னூல்: ஆந்திரம் மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் ஹைதராபாத்-பெங்களூரு தனியார் ஆம்னி பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 23 பேர் பலியானதாகவும், 18 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கர்னூல் மாவட்ட ஆட்சியர் ஏ. சிறி கூறியுள்ளார்.
சில உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு கருகிவிட்டதால், பலியானவர்களை அடையாளம் காணும் முயற்சியில் டிஎன்ஏ மாதிரிகளை சேகரிக்கும் பணி தொடங்கியிருப்பதாக ஆந்திரம் மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆந்திரம் மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் உள்ள சின்னதேகுரு கிராமத்திற்கு அருகே தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை 2.45 மணியளவில் ஹைதராபாத்திலிருந்து பெங்களூருக்குச் சென்ற குளிர்சாதன வசதி கொண்ட தனியார் ஆம்னி பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததில் 23 பயணிகள் பலியாகினர் மற்றும் பலர் தீக்காயமடைந்தனர்.
இந்த கோர பேருந்து தீ விபத்து குறித்து கர்னூல் மாவட்ட ஆட்சியர் ஏ. சிறி கூறியதாவது:
ஹைதராபாத்தில் இருந்து பெங்களூரு நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் ஆம்னி பேருந்து வெள்ளிக்கிழமை அதிகாலை 2.45 மணியளவில் ஒரு மோட்டார் சைக்கிளில் மோதியது. இதில் சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்ட மோட்டார் சைக்கிள் பின்னர் பேருந்துக்கு அடியில் சென்று பேருந்தின் டீசல் டேங்கில் மோதியதில் பேருந்து தீப்பிடித்து எரிந்ததாக கூறப்படுகிறது. பேருந்து தீப்பிடித்த சில நிமிடங்களிலேயே பேருந்து முழுவதும் தீ பரவியது.
இந்த சம்பவத்தின் போது பேருந்தில் சுமார் 42 பேர் இருந்துள்ளனர். அவர்களில் 23 பேர் பலியாகினர், 18 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 11 பேரின் கருகிய உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. சில உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு கருகிவிட்டதால், பலியானவர்களை அடையாளம் காணும் முயற்சியில் டிஎன்ஏ மாதிரிகளை சேகரிக்கும் பணி நடந்து வருகிறது என்று விபத்து நடந்த இடத்தை நேரில் பார்வையிட்ட பிறகு அவர் கூறினார்.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த கர்னூல் மாவட்டம் தண்டரபாடு கிராமத்தை சேர்ந்த டிவி9 காலனியைச் சேர்ந்த கிரானைட் தொழிலாளி சிவசங்கர் (21) பலியாகியுள்ளார்.
தீ வேகமாக பரவியபோதிலும், பேருந்தில் சிக்கிக் கொண்டு கூச்சலிட்ட பயணிகள் உள்ளூர் மக்கள் மற்றும் காவல்துறையினர் விரைந்து செயல்பட்டு பல பயணிகளை மீட்டனர். தீயணைப்பு வீரர்கள், காவல்துறையினர் மற்றும் மருத்துவக் குழுக்களின் கூட்டு முயற்சியால் இரவு முழுவதும் மீட்புப் பணிகள் நடைபெற்றன, அவர்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்து காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும், விபத்துக்கான காரணம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
பேருந்தின் பாதுகாப்பு வழிமுறைகள், தீயை அணைக்கும் கருவிகள் இருந்ததா?, பயணத்தின் போது ஓட்டுநரின் விழிப்புணர்வு ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டதா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்ட வருகிறது.
தீ விபத்துக்கு பேருந்தின் டீசல் டேங்கில் மோட்டார் சைக்கிள் மோதியது தான் காரணமாக இருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன, இருப்பினும் தனியார் பேருந்த நிறுவனத்தின் பாதுகாப்பு தரக் குறைபாடுகளும் இந்த கோர விபத்துக்கு காரணங்களாக இருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
பிரமர் மோடி இரங்கல் மற்றும் நிதியுதவி அறிவிப்பு
ஆந்திரத்தில் தனியார் ஆம்னி பேருந்து கோர தீ விபத்தில் பலியானகளின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.இந்த விபத்தில் குடும்பத்தினரை இழந்த தவிக்கும் குடும்பத்தினருக்கு பிரதமர் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி இரங்கல்
தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளதுடன், ஆந்திரம் மாநில அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து தேவையான நிவாரண நடவடிக்கைகளை ஈடுபடுமாறு மாநில அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
இதையடுத்து பேருந்து விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு உதவுவதற்காக தெலங்கானா அரசு 9912919545, 9440854433 ஆகிய இரண்டு உதவி எண்களை அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.