

கர்னூல்: ஆந்திரத்தில் ஹைதராபாத்-பெங்களூரு தனியார் ஆம்னி பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 15 பேர் பலியாகினர். 12 பேர் அவசரகால வழி மற்றும் ஜன்னல்களை உடைத்துக்கொண்டு லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.
ஆந்திரம் மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை சின்னதேகுரு கிராமத்திற்கு அருகே வெள்ளிக்கிழமை அதிகாலை தனியார் ஆம்னி பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததில் 15 பயணிகள் பலியானதாகவும் மற்றும் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
முதற்கட்ட தகவல்களின்படி, ஹைதராபாத்தில் இருந்து பெங்களூரு நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் ஆம்னி பேருந்து வெள்ளிக்கிழமை அதிகாலை 3:30 மணியளவில் ஒரு மோட்டார் சைக்கிளில் மோதியது. இதில் சிறிது தூரம் மோட்டார் சைக்கிள் சிறிது தூரம் இழுத்துச் சென்றதில் மோட்டார் சைக்கிள் பேருந்துக்கு அடியில் சென்றதில் பேருந்து தீப்பிடித்து எரிந்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தின் போது பேருந்தில் சுமார் 42 பேர் இருந்ததாகவும், அதிகாலை நேரம் என்பதால் நல்ல உறக்கத்தில் இருந்த பயணிகள் திடீரென கண்விழித்து பார்த்தபோது பேருந்து தீப்பிடித்து எரிவதை பார்த்து கூச்சலிட்டுள்ளனர். இதையடுத்து பேருந்தில் இருந்தவர்கள் கூச்சலிட்டவாறு பேருந்தின் அவசரகால வழி மற்றும் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்துக் கொண்டு வெளியேறியுள்ளனர். இதில் 12 பயணிகள் சிறு காயங்களுடன் தப்பினர் மற்றும் 15 பேர் பேருந்து தீயில் சிக்கி பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது. பேருந்தில் 42 பேர் இருந்ததாக கூறப்படும் நிலையில் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
தகவல் அறிந்து சம்மவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு கர்னூல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இருப்பினும், அந்த பகுதியில் பெய்த கனமழையால் மீட்புப் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
பேருந்து தீப்பிடித்த உடனேயே பேருந்து ஓட்டுநர் உள்பட பேருந்து ஊழியர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.
இந்த விபத்தால் தேசிய நெடுஞ்சாலையில் பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மணிக்கணக்கில் வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலையிலே காத்திருந்தன.
பேருந்து தீ விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
முதல்வர் சந்திரபாபு நாயுடு இரங்கல்
தற்போது அரசுமுறை பயணமாக துபைக்கு சென்றுள்ள முதலமைச்சர் என். சந்திரபாபு நாயுடு, பெங்களூரு நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் ஆம்னி பேருந்து கர்னூலில் இருசக்கர வானத்தில் மோதியதில் பேருந்து தீப்பிடித்து எரிந்து விசாரணையில் தெரியவந்தது. இந்த துயர சம்பவம் குறித்து அறிந்து நான் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
விபத்து குறித்து தலைமைச் செயலாளர் மற்றும் மூத்த அதிகாரிகளிடம் மேலும் விளக்கம் கேட்டுள்ளேன். மேலும் மாவட்ட உயர் நிர்வாகப் பணியாளர்களை விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்பார்வையிட உத்தரவிட்டுள்ளேன். .
காயமடைந்த மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவிகளையும் வழங்கவும், குடும்பத்தினரை இழந்து வாடும் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறவும் அறிவுறுத்தியுள்ளார். மேலும் உயிரிழப்புகளைத் தடுக்க விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார், மேலும் இந்த கடினமான நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் துணை நிற்கும் என்று உறுதியளித்துள்ளார்.
அமைச்சர்கள் பி.சி. ஜனார்தன் ரெட்டி மற்றும் கே. அச்சன்நாயுடு ஆகியோர் இந்த சம்பவம் குறித்து அதிர்ச்சி அடைந்ததாகவும், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.