குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு!
மதுரை: பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழாவில் பங்கேற்பதற்காக மதுரை வந்துள்ள குடியரசு துணைத்தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனை, மதுரை அரசினர் விருந்தினர் மாளிகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார்.
குடியரசு துணைத் தலைவராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நான்கு நாள்கள் பயணமாக செவ்வாய்க்கிழமை தமிழகம் வந்துள்ள சி.பி.ராதாகிருஷ்ணன், கோவை, திருப்பூர் என பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
இதையடுத்து பசும்பொன்னில் வியாழக்கிழமை நடைபெறும் தேவர் குரு பூஜையில் கலந்து கொள்வதற்காக கோயம்புத்தூர் விமான நிலையத்திலிருந்து தனி விமானம் மூலம் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்தார்.
தமிழக அரசு சார்பில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், மாவட்ட ஆட்சியர் பிரவீன் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர். மேலும், பாஜக முக்கிய நிர்வாகிகள், விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் ஆகியோரும் அவரை வரவேற்றனர்.
இதனைத் தொடர்ந்து மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சி.பி. ராதாகிருஷ்ணன் தரிசனம் மேற்கொண்டார்.
பின்னர், ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள பசும்பொன்னில் வியாழக்கிழமை (அக். 30) நடைபெறும் முத்துராமலிங்கத் தேவா் குருபூஜை விழாவில் பங்கேற்பதற்காக, மதுரை அரசு சுற்றுலா மாளிகையில் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஓய்வு எடுத்து வந்தார்.
இந்நிலையில், மதுரை அரசு சுற்றுலா மாளிகையில் தங்கியிருந்த குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணனை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார். அப்போது தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி உடனிருந்தார்.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
நம் தமிழ்நாட்டில் பிறந்து நாட்டின் குடியரசுத் துணைத் தலைவராக உயர்ந்துள்ள சி.பி. ராதாகிருஷ்ணனை மாமதுரை மண்ணில் சந்தித்து உரையாடினேன். தமது சீரிய பணிகளால் அவர் நம் தமிழ்நாட்டுக்கும் இந்திய நாட்டுக்கும் பெருமை சேர்ப்பார்! என கூறியுள்ளார்.
Met our Hon’ble Vice-President CPR VP, on the historic soil of Madurai. A proud son of Tamil Nadu who has risen to one of the highest offices of our Republic, his wisdom and sense of duty will continue to bring honour to both Tamil Nadu and India!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

