தமிழகத்தில் மீண்டும் ஃபோர்டு உற்பத்தி!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்று தமிழகத்தில் மீண்டும் தனது கார் உற்பத்தியை தொடங்குகிறது ஃபோர்டு நிறுவனம்.
ஃபோர்டு மோட்டார்ஸ் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
ஃபோர்டு மோட்டார்ஸ் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
Published on
Updated on
2 min read

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அமெரிக்க பயணத்தின் போது ஃபோர்டு நிறுவனம் உறுதியளித்தபடி ரூ.3250 கோடி முதலீட்டில் 600 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், மறைமலை நகரில் அடுத்த தலைமுறை வாகன இன்ஜின் உற்பத்தி மேற்கொள்வதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் வெள்ளிக்கிழமை(அக்.31) முதல்வர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.

முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் வெள்ளிக்கிழமை (அக்.31) தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமெரிக்க நாட்டைச் சேர்ந்த ஃபோர்டு நிறுவனத்தால் ரூ.3250 கோடி முதலீட்டில் 600 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகரில், அடுத்த தலைமுறை வாகன இன்ஜின் உற்பத்தி செய்வதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

தமிழ்நாடு, இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதாரமாகவும், பல்வேறு துறைகளில் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் முன்னணி மாநிலமாகவும் விளங்கி வருகிறது. முதலீடுகளை ஈர்ப்பதிலும், அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை, குறிப்பாக பெண்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்படுவதாக, 2024-25 ஆம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையில் புகழாரம் சூட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், 2030-க்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரம் 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு வளர்ச்சி பெறுவதற்கும், தேவையான முதலீடுகளை ஈர்ப்பதற்கும் தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்பான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.

ஃபோர்டு நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் அந்த வகையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், அமெரிக்காவிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்ட தமிழ்நாடு மு.க.ஸ்டாலின், ஃபோர்டு நிறுவனத்தின் உயர் அதிகாரிகளைச் சந்தித்து, தமிழ்நாட்டில் மீண்டும் செயல்பாடுகளைத் தொடங்கிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

அப்போது ஃபோர்டு நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் உறுதியளித்தபடி, ஃபோர்டு நிறுவனம், ரூ.3250 கோடி முதலீட்டில் 600 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், வாகன இன்ஜின் உற்பத்தித் திட்டத்தை மீண்டும் தொடங்க உள்ளது. அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் வெள்ளிக்கிழமை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி. ராஜா, தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை செயலாளர் வி. அருண் ராய், வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் மருத்துவர் தாரேஸ் அகமது, ஃபோர்டு நிறுனத்தின் உலகளாவிய இயக்குநர் மார்ட்டின் எவரிட், துணைத் தலைவர் மாத்யூ கோடிலூஸ்கி, தாய்லாந்து திட்டத்தின் மேலாண்மை இயக்குநர் சைமோநேட்டா வெர்டி, இயக்குநர் (உற்பத்தி) தீரஜ் தீக்சித், இயக்குநர் ஸ்ரீபாத் பட் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

2021 இல் இந்தியாவில் உள்நாட்டு கார் உற்பத்தியை நிறுத்தியது ஃபோர்டு.

Summary

Ford car production resumes in Tamil Nadu!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com