
தமிழ்நாடு பேரவைத் தேர்தலையொட்டி உள்கட்சி பூசல்களைக் களைய வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர்களுக்கு அமைச்சர் அமித் ஷா அறிவுறுத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் கட்சிகள் தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளன.
கூட்டணியைப் பொருத்தவரை தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி மீண்டும் உருவாகியுள்ளது. ஆனால் இந்த கூட்டணி அறிவித்தது முதலே சில குழப்பங்கள் இருந்து வருகிறது.
அதிமுக - பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் 'ஆட்சியில் பங்கு' என பாஜக தலைவர்களும் 'பெரும்பான்மையுடன் தனித்து ஆட்சி அமைப்போம்' என அதிமுக தலைவர்களும் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே பாஜக கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் விலகினார்.
இந்த நிலையில் தில்லியில் இன்று(புதன்கிழமை) பாஜகவின் உயர்நிலைக் குழுக் கூட்டம் நடைபெற்றது.
தில்லி சென்றுள்ள பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், எச். ராஜா, வானதி சீனிவாசன், கேசவ விநாயகம் உள்ளிட்டோருடன் அமைச்சர் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர்.
கூட்டணியில் நிலவும் முரண்பாடுகள், தேர்தல் பணிகள், கூட்டணி விரிவாக்கம் ஆகியவை குறித்து பேசப்பட்டுள்ளது.
"தமிழ்நாட்டில் அடுத்தாண்டு பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பிரசாரத்தை தொடங்க வேண்டும், ஒவ்வொரு தொகுதிக்கும் பொறுப்பாளர்களை நியமிக்க வேண்டும், வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்திக்க வேண்டும், கூட்டணியை வலுப்படுத்த வேண்டும்" என்று அமித் ஷா ஆலோசனை கூறியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக பாஜகவில் உள்ள உள்கட்சி பூசல்களை களைய வேண்டும். உள்கட்சி பூசல் அதிகரித்து வருவது நல்லதல்ல, அடுத்தாண்டு தமிழ்நாட்டில் திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதே நோக்கம் என்று அமித் ஷா கூறியதாக சொல்லப்படுகிறது.
தில்லியில் இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை பங்கேற்கவில்லை. திருமண நிகழ்வுகள் மற்றும் அதிக வேலைகள் இருப்பதால் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று அண்ணாமலை கூறியிருக்கிறார். கூட்டத்தில் அண்ணாமலை பங்கேற்காதது அரசியலில் விவாதப்பொருளாக மாறியுள்ளது.
இதையும் படிக்க | அன்புமணிக்கு மீண்டும் கெடு விதித்த ராமதாஸ்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.