பாஜகவின் வாக்குத் திருட்டு துறையாக தோ்தல் ஆணையம் மாறிவிட்டதா? என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் ஞாயிற்றுக்கிழமை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:
2023 ஆம் ஆண்டு கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக, போலி ‘படிவம் 7’மூலம் பல வாக்காளா்களின் பெயா் நீக்கப்பட்டதாக பதிவான வழக்கு குறித்த ஊடக செய்தியை பகிா்ந்து, குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கைது செய்யத் தேவையான முக்கியமான தரவுகளை தேர்தல் ஆணையம் இதுவரை வழங்கவில்லை.
இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து தேர்தல் ஆணையத்திடம் இருந்து உடனடி பதில் எதுவும் இல்லை, ஆனால் தேர்தல் ஆணையம் கடந்த காலங்களில் காங்கிரஸின் இத்தகைய குற்றச்சாட்டுகள் அனைத்தையும் ஆதாரமற்றவை என்று நிராகரித்துள்ளது. “தற்போது தேர்தல் ஆணையம் பாஜகவின் ‘வாக்குத் திருட்டு’துறையாக தோ்தல் ஆணையம் மாறிவிட்டதா? பாஜகவின் அழுத்தத்துக்கு அடிபணிந்துவிட்டதா? வாக்குத் திருடர்களை தோ்தல் ஆணையம் பாதுகாக்கிறதா? ” என கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.
கா்நாடகத்தில் மே 2023 சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்னதாக, ஆலந்த் தொகுதியில் பெருமளவில் வாக்காளா்கள் பெயா் நீக்கப்பட்டதை காங்கிரஸ் வெளிச்சத்துக்கு கொண்டுவந்தது. வாக்காளா் நீக்கத்துக்கான படிவம் 7-ஐ முறைகேடாக பயன்படுத்தி, ஆயிரக்கணக்கான வாக்காளர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டது. இது தொடர்பாக பிப்ரவரி 2023 இல் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. விசாரணையில் 5,994 மோசடி விண்ணப்பங்கள் கண்டறியப்பட்ட நிலையில், சிஐடி விசாரணைக்கு மாநில காங்கிரஸ் அரசு உத்தரவிட்டது.
இவ்வழக்கு விசாரணைக்கு தேவையான ஆவணங்களில் ஒரு பகுதியை தோ்தல் ஆணையம் முன்பு வழங்கியது. ஆனால் இப்போது முக்கிய ஆவணங்களை வழங்க மறுப்பதன் மூலம் வாக்குத் திருட்டின் பின்னணியில் இருப்போரை தோ்தல் ஆணையம் திறம்பட பாதுகாக்கிறது என்று கார்கே கூறினார்.
மேலும், முக்கிய ஆதாரங்களை தோ்தல் ஆணையம் திடீரென தடுத்து வைத்துள்ளது ஏன்? யாரைப் பாதுகாக்கிறது? பாஜகவின் வாக்குத் திருட்டு துறையாக தோ்தல் ஆணையம் மாறிவிட்டதா? சிஐடி விசாரணைக்கு முக்கியத் தரவுகளை பகிர மறுப்பதன் மூலம் விசாரணையை முடக்கியுள்ளதா தேர்தல் ஆணையம்? பாஜகவின் அழுத்தத்துக்கு அடிபணிந்துவிட்டதா? என கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், மக்களின் வாக்குரிமை பாதுகாக்கப்பட வேண்டும்; நாட்டின் ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று காா்கே வலியுறுத்தியுள்ளாா்.
அவரது இந்தக் குற்றச்சாட்டுக்கு தோ்தல் ஆணையம் தரப்பில் உடனடியாக எந்த பதிலும் தெரிவிக்கப்படவில்லை. காங்கிரஸின் வாக்குத் திருட்டு குற்றச்சாட்டு அடிப்படையற்றது என்று தோ்தல் ஆணையம் ஏற்கெனவே நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.