

சென்னை: ஜிஎஸ்டி சீர்திருத்தம் ஒவ்வொரு குடிமகனுக்கும் கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடந்த ஜிஎஸ்டி விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்று ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் குறித்து பேசினார்.
அப்போது, ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டபோது வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 65 லட்சமாக இருந்தது. ஆனால் 8 ஆண்டுகளுக்குப் பிறகு 1.50 கோடியாக உயர்ந்துள்ளது. இது மிகப்பெரிய வெற்றி. ஒரு நாள் பிரதமர் மோடி என்னை அழைத்து ஜிஎஸ்டி குறித்து பல்வேறு விமரிசனங்கள் வருகிறது. அதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என கூறினார்.
இதையடுத்து 8 மாதங்களாக எல்லாப் பொருள்களையும் ஆய்வு செய்து வரிகளை மாற்று அமைத்தோம்.
நாடு முழுவதும் பெருமளவில் கொண்டாடும் பண்டிகைகளான நவராத்திரிக்கும் தீபாவளிக்கும் முன்பு சீரமைக்கப்பட்ட வரிவிதிப்பு முறை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடியின் உத்தரவிட்டிருந்த நிலையில், நவராத்திரிக்கு முன்பே ஜிஎஸ்டி வரியை குறைத்துவிட்டோம். இதன் மூலம் 140 கோடி பேர் பயன்படுத்தும் பல்வேறு பொருள்களின் மதிப்பு குறைந்து, அவர்களின் மீதான வரிச்சுமை குறைந்து சேமிப்பு அதிகரிக்கும். இது ஒவ்வொரு குடிமகனுக்கும் கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்றார்.
56 ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று, ஜிஎஸ்டி வரி சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும், இது மாநிலங்களுடன் இணைந்து எடுக்கப்பட்ட முடிவு. இந்த வரி சீர்திருத்தங்கள் மக்களுடன் சேர்த்து மாநிலங்களுக்கும் பயனளிக்கும். ஜிஎஸ்டி வரியால் ஒரு மாதத்திற்கு ரூ.1.9 லட்சம் கோடி வரி கிடைக்கிறது. அதில் 23 சதவீதம் மத்திய அரசுக்கு கிடைக்கும், 77 சதவீதம் மாநிலங்களுக்குதான் பகிரிந்தளிக்கப்படுகிறது என்று கூறிய நிர்மலா சீதாராமன், ஆனால் பிரதமரை பாராட்டுவதற்கு சிலருக்கு மனம் இல்லை என்றார்.
ஜிஎஸ்டி சீர்திருத்தங்களின் சலுகைகள் இப்போது மக்களின் அன்றாட வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் தொடுவதாக தெரிவித்தார்.
புதிய ஜிஎஸ்டியான 5% மற்றும் 18% என்ற இரண்டு விகிதங்களை மட்டுமே கொண்டிருக்கும். சில ஆடம்பரப் பொருட்கள் மற்றும் சிகரெட், பான் மசாலா போன்றவை மீது 40 சதவீதம் என்ற உயா்ந்த வரிவிகிதம் தொடா்கிறது. அதே சமயம், அத்தியாவசிய பொருட்கள், விவசாய உபகரணங்கள், உயிா் காப்பு மருந்துகள், சோப்பு, பற்பசை, பிஸ்கட், பால் சாா்ந்த பொருட்கள், அன்றாட உணவுப்பொருட்கள் போன்றவற்றுக்கு குறைந்த விகிதம் 5 சதவீதம் அல்லது முற்றிலுமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தொலைக்காட்சி, குளிா்சாதன பெட்டி, சிறிய காா்கள் போன்ற நுகா்வோா் பொருட்களுக்கான வரி விகிதம் முந்தைய 28 சதவிகிதத்திலிருந்து 18% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவக் காப்பீடுகளுக்கு ஜிஎஸ்டியிலிருந்து முழுமையான வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஆடைகள், காலணிகள், மோட்டாா் சைக்கிள்கள் ஆகியவற்றிற்கான வரிவிகிதம் 28% இல் இருந்து 18% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. விவசாயக் கருவிகள், டிராக்டா்கள், உரங்கள், விதைகள் போன்றவை குறைவான வரிக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. பூச்சிக்கொல்லிகள், வேளாண் உள்ளீடுகள் அனைத்தும் குறைந்த விகிதத்திற்கு மாற்றப்பட்டுள்ளன. இந்த புதிய வரி குறைப்பு நவராத்திரியின் முதல் நாளான செப்டம்பர் 22 முதல் நடைமுறைக்கு வரும். இந்த புதிய வரி குறைப்பு தொழிலாளர், விவசாயம், சுகாதாரம் சார்ந்த துறைகளுக்கு பெரும் நிவாரணம் அளிக்கும் என நிர்மலா சீதாராமன் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.