
திமுக பிரமுகர் செய்தியாளர்களைத் தரக்குறைவாக வசைபாடி தாக்க முயன்ற சம்பவம் கண்டனத்திற்குரியது என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள கண்டன அறிக்கையில்,
சென்னை அசோக் நகரில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களைத் திமுக பிரமுகர் ஒருவர் தரக்குறைவாக வசைபாடி மிரட்டல் விடுத்ததுடன் தாக்க முயன்றது கண்டனத்திற்குரியது. அதிலும் ஆட்சியைப் பற்றி நல்ல செய்திகளை மட்டுமே வெளியிட வேண்டும் என்று திமுக பிரமுகர் வெளிப்படையாக நிர்பந்திப்பது ஒட்டுமொத்த திமுக அரசின் சர்வாதிகாரப் போக்கை வெளிப்படுத்துகிறது.
வடகிழக்குப் பருவ மழை துவங்கவிருக்கும் வேளையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விடுத்து, விளம்பரத்தில் ஈடுபடுவதோடு, உண்மையை வெளிபடுத்துவோரை மிரட்டுவது அவர்களை முடக்கப் பார்க்கும் திராவிட மாடல் அரசின் முயற்சிகள் இனியும் செல்லுபடியாகாது.
திராவிட மாடலின் அடக்குமுறையை எதிர்த்து பத்திரிகை சுதந்திரத்திற்காக தமிழக பாஜக வீதியில் இறங்கிப் போராடவும் தயங்காது என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
சொன்னீங்களே செஞ்சீங்களா?
மற்றொரு பதிவில், அங்கன்வாடி ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கப்படும் என்று சொன்னீங்களே செஞ்சீங்களா?
சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்குவதற்கு கசக்கிறதா? என கேள்வி எழுப்பியுள்ள நயினார், வரும் பேரவைத் தேர்தலில் திமுக அரசை துரத்தியடிக்கப் போவது நிச்சயம் என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.