ஊட்டச்சத்து நிறைந்த குழந்தைகள் உள்ள மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை இன்று (செப்.19) முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாநில அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் மாநில அளவிலான ஐந்தாவது ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
மாநில அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் மாநில அளவிலான ஆய்வுக் கூட்டங்களை தமிழ்நாடு அரசு தொடர்ந்து முறையாக நடத்தி வருகிறது. நமது அரசு பொறுப்பேற்ற பிறகு இது ஐந்தாவது கூட்டம். மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்துவதை கவனமுடன் கண்காணித்து வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றுவதில் அக்கறையோடு அரசு செயல்பட்டு வருகிறது.
இந்தக் கூட்டத்தில்,
* தீன்தயாள் அந்தியோதயா யோஜனா–தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம்,
* நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளூர் பகுதி மேம்பாட்டுத் திட்டம்,
* பிரதமரின் கிரிஷி சிஞ்சாயி திட்டம்,
* ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் போன்ற திட்டங்களின் செயல்பாடுகள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.
முத்தமிழறிஞர் கலைஞர் 1989 ஆம் ஆண்டு தருமபுரி மாவட்டத்தில் தொடங்கப்பட்ட சுய உதவிக் குழு, இயக்கமாகி இன்று இந்தியாவிற்கே முன்னுதாரணமாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது.
மத்திய அரசின் "தீன்தயாள் அந்தியோதயா யோஜனா – தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம்" மத்திய மற்றும் மாநில அரசின் 60 : 40 என்ற நிதிப்பங்களிப்பின் அடிப்படையில் முதல் 37 ஊரக மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கிராமப்புறங்களில் 3.38 இலட்சம் சுய உதவிக் குழுக்களும், நகர்ப்புறங்களில் 1.41 இலட்சம் சுய உதவிக் குழுக்களும் செயல்பட்டு வருகின்றன. இந்தக் குழுக்களில் 55.12 லட்சம் உறுப்பினர்கள் இருக்கின்றனர்.
இந்தத் திட்டத்தின் கீழ், 45,312 சுய உதவிக் குழுக்களுக்கு சுழல்நிதியாக 67 கோடியே 97 இலட்சம் ரூபாயும், சமுதாய முதலீட்டு நிதியாக 75,127 சுய உதவிக் குழுக்களுக்கு 801 கோடியே 62 இலட்சம் ரூபாயும், நலிவு நிலைக்குறைப்பு நிதியாக 13,546 கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்களுக்கு ரூ.75 கோடியே 73 லட்சம் வழங்கியுள்ளது.
முதியோர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் மற்றும் பழங்குடியினரைக் கொண்டு 25,001 சிறப்பு சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் 1,57,316 நபர்கள் பயனடைந்துள்ளனர். இவற்றில் 17,207 சிறப்பு சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.25 கோடியே 81 லட்சம் சிறப்பு சுழல்நிதியாக வழங்கப்பட்டுள்ளது.
சுய உதவிக் குழுக்களின் தடையற்ற செயல்பாடுகளுக்காக நமது அரசு பொறுப்பேற்ற பிறகு இன்று வரை மகளிர் சுய உதவுக் குழு உறுப்பினர்களுக்கு ரூ. 1 லட்சத்து 25 ஆயிரத்து 362 கோடி வங்கிக் கடன் இணைப்பாக வழங்கப்பட்டுள்ளது என்பதை இங்கே மகிழ்ச்சியுடன் நான் தெரிவித்துக்கொள்கிறேன்.
2025-2026 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையின்படி, மகளிருக்கு ரூ.37 ஆயிரம் கோடி வங்கிக் கடன் இணைப்பு வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு 3.9.2025 வரை 1,46,100 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.13 ஆயிரத்து 62 கோடி வங்கிக் கடன் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
உலக மகளிர் நாள் விழா 2025-இல் நான் கலந்துகொண்டு சுய உதவிக் குழு மகளிருக்கு அடையாள அட்டைகளை வழங்கினேன். இத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வரும் அடையாள அட்டைகள் விரைவில் அனைத்து சுய உதவிக் குழுக்களுக்கும் முழுவீச்சில் வழங்கப்படும் என தெரிவித்துக் கொள்கிறேன்.
சுய உதவிக் குழு மகளிருக்கு வழங்கப்படும் அடையாள அட்டையின் மூலமாக சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை 25 கி.மீ. முதல் 100 கி.மீ. வரையிலான தூரத்திற்கு விலையின்றி கிராம மற்றும் நகர்ப்புற பேருந்துகளில் எடுத்துச் செல்வது உள்ளிட்ட எண்ணற்ற சலுகைகளைப் பெறலாம்.
நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளூர் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் 2021-22-ம் ஆண்டு முதல் 2025-26 வரை ரூ.1,274 கோடி நிதி ஒதுக்கீடு வரப்பெற்று 12,045 பணிகள் நாடாளுமன்ற உறுப்பினர்களுடைய சிறப்பான ஒத்துழைப்புடன் எடுக்கப்பட்டு 9,755 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. 2,290 பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன.
தமிழ்நாட்டில் சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், ஒரு சட்டமன்றத் தொகுதி உறுப்பினருக்கு ஒரு நிதியாண்டிற்கு ரூ.3 கோடி வீதம், மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ரூ.702 கோடி ஆண்டொன்றிற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, மக்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு வருகின்றது.
மாநில அரசே சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு ரூ.3 கோடி நிதி வழங்குவதால் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியை ரூ.பத்து கோடியாக உயர்த்த வலியுறுத்தி வருகிறோம். எனவே, இதனை மத்திய அரசு ரூ.10 கோடியாக உயர்த்திட இந்தக் கூட்டத்தின் வாயிலாக தீர்மானம் நிறைவேற்றி பரிந்துரை செய்து அனுப்பப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தற்போது eSAKSHI போர்ட்டலில் ஏஜென்சி ஒப்புதல் மற்றும் PFMS போர்ட்டலில் திட்ட செயலிழப்பு ஒப்புதலை மத்திய அரசே வழங்குவதால் காலதாமதம் ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க இப்பொறுப்பு “மாநில நோடல் ஏஜென்சிக்கு” வழங்கப்பட வேண்டும்.
அதேபோல், eSAKSHI போர்ட்டலில் நாடாளுமன்ற உறுப்பினர்களால் பரிந்துரைக்கப்படும் பணிகளை நேரடியாகத் தொகுதிவாரியான சுருக்க அறிக்கையினை பதிவிறக்கம் செய்ய ஏதுவாக eSAKSHI போர்ட்டலை மேம்படுத்துமாறு மத்திய அரசுக்கு பரிந்துரைக்கலாம் எனவும் இந்தக் குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்படுகிறது.
பிரதம மந்திரி வேளாண் நீர்ப்பாசனத் திட்டம் ‘ஒரு துளி நீரில் அதிகப் பயிர்' என்ற திட்டம் மத்திய மற்றும் மாநில அரசுகளின் 60:40 என்ற நிதிப் பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி நுண்நீர் பாசன அமைப்புகள் அமைக்க சிறு, குறு விவசாயிகளுக்கு 55 சதவீத மானியமும், மற்ற விவசாயிகளுக்கு 45 சதவீத மானியமும் வழங்கப்படும்.
ஆனாலும், விவசாயிகளின் நலனில் அக்கறை கொண்ட நமது திராவிட மாடல் அரசு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்து 100 சதவீத மானியத்தை சிறு, குறு விவசாயிகளுக்கும், 75 சதவீத மானியத்தை இதர விவசாயிகளுக்கும் வழங்கி வருகிறது. 12 சதவீதம் சரக்கு மற்றும் சேவை வரியையும் தமிழ்நாடு அரசே ஏற்கிறது என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த ஊக்கத்தால் தோட்டக்கலை மற்றும் வேளாண்மை பயிர்கள் சாகுபடி பரப்பளவு அதிகப்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் வாயிலாக 2022-23ஆம் ஆண்டு 26 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்ட அளவினை உயர்த்தும் வகையில் 473 கிராமங்களில் 52,197 ஹெக்டரில் நுண்நீர்ப் பாசன அமைப்புகள் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன.
தானியங்கி நுண்நீர்ப் பாசன அமைப்புகள் அமைத்திட ஒரு ஹெக்டருக்கு ரூபாய் 40 ஆயிரம் வீதம் சிறு, குறு விவசாயிகளுக்கு 55 விழுக்காடு மானியமாக ஹெக்டருக்கு ரூபாய் 22 ஆயிரம் வீதம் அதிகபட்சமாக 2 ஹெக்டருக்கும், இதர விவசாயிகளுக்கு 45 விழுக்காடு மானியமாக ஹெக்டருக்கு ரூபாய் 18,000 வீதம் அதிகபட்சமாக 5 ஹெக்டருக்கும் வழங்கப்படுகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் 1 லட்சத்து 50 ஆயிரத்து 560 ஹெக்டர் நிலப்பரப்பில் 1 லட்சத்து 57 ஆயிரத்து 279 விவசாயிகள் ரூ. 1,312 கோடிக்கும் அதிகமான நிதிப்பயன்களை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்தத் திட்டப் பயன்களை விவசாயிகளுக்குக் கொண்டு சேர்ப்பதில் இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் முதன்மை மாநிலமாக திகழ்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஊட்டச்சத்து குறைபாடில்லாத குழந்தைகள் நிறைந்த மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றுவதே நமது முக்கிய நோக்கமாகும்.
- குழந்தைகளின் ஊட்டச்சத்தினை மேம்படுத்த தமிழ்நாட்டில் செயல்படும் 54 ஆயிரத்து 449 குழந்தைகள் மையங்களில் பயன்பெற்று வரும் 6 மாதம் முதல் 6 வயது வரையிலான சுமார் 22 இலட்சம் குழந்தைகளுக்கு சத்துமாவு வழங்கப்படுகிறது.
மேலும், சுமார் 5.50 இலட்சம் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் சத்துமாவு வழங்கப்பட்டு தாய்-சேய் ஊட்டச்சத்து நடைமுறை கண்காணிக்கப்படுகிறது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் இத்திட்டம் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டு சிறப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
* குழந்தைகள் மையங்களில் 2 முதல் 6 வயதிற்குட்பட்ட சுமார் 10 இலட்சத்து 86 ஆயிரம் குழந்தைகளுக்கு மதிய உணவுடன் வாரம் மூன்று தினங்களுக்கு முட்டைகளும்
* 1 முதல் 2 வயது வரையிலான 6 இலட்சத்து 75 ஆயிரம் குழந்தைகளுக்கு வாரம் மூன்று முட்டை வீதம் தாய்மார்கள் மூலம் வீட்டிலேயே வழங்கப்படுகிறது.
* அனைத்து குழந்தைகளுக்கும் 2 செட் வண்ணச்சீருடைகளும் நமது அரசு வழங்குகிறது. அனைத்து மையங்களிலும் 100 சதவீதம் குடிநீர், கழிவறைகள், மின்வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளன.
* இதுவரை 3,397 குழந்தைகள் நேய மையங்கள் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன.
* 6,390 குழந்தைகள் மையங்களை திறன்மிகு குழந்தைகள் மையமாக தரம் உயர்த்தி வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
* மேலும் 5,582 மையங்கள் தரம் உயர்த்த ஆணை வெளியிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
* நமது அரசின் முனைப்பான செயல்பாடுகளின் விளைவாக தமிழ்நாடு தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு-5ன்படி 25 சதவீதமாக இருந்த குழந்தைகளின் உயரக் குறைபாடு 11.8சதவீதமாக குறைந்துள்ளது.
* 14.6 சதவீதமாக இருந்த குழந்தைகளின் மெலிவுத் தன்மை 3.6 சதவீதமாக குறைந்துள்ளது.
* 22 சதவீதமாக இருந்த குழந்தைகளின் எடை குறைவு 5.7 சதவீதமாக குறைந்துள்ளது.
* குழந்தைகளின் வளர்ச்சி வீதம் பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளது இதன் மூலம் தெள்ளத்தெளிவாகிறது.
* “ஊட்டச்சத்தை உறுதி செய்” என்ற மகத்தான திட்டத்தின்படி முதற்கட்டமாக 1,07,006 ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளில் 77.3 சதவீதமாக குழந்தைகள் இயல்புநிலைக்குத் திரும்பியுள்ளனர்.
இத்திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக அரியலூர் மாவட்டத்தில் 15.11.2024 இல் துவங்கப்பட்டு 76,705 குழந்தைகளுக்குக் கடுமையான மற்றும் மிதமான ஊட்டச்சத்துக் குறைபாடுடைய 0-6 மாதங்கள் வரையிலான குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டு 80.6 சதவீத குழந்தைகள் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளனர் என்பது உண்மையிலேயே எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
நம்முடைய அனைத்து திட்டங்களும் கடைக்கோடியில் உள்ள மக்களையும் சென்றடையும் நோக்கத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மத்திய அரசின் அனைத்து திட்டங்களிலும் மாநில அரசின் பங்குத் தொகை எவ்வித காலதாமதமுமின்றி விடுவிக்கப்பட்டு வருகிறது. அதேபோல், ஒன்றிய அரசும் தனது நிதியை சரியான நேரத்தில் மாநில அரசுக்கு வழங்கிட வேண்டும் என இக்குழு மூலமாகவே வலியுறுத்தப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
Summary
CM DISHA Committee Meeting
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சுகுணா கோப்பை 19 வயதுக்கு உள்பட்ட ஆண்களுக்கான மாநில அளவிலான ஹாக்கி - தூத்துக்குடி வெற்றி

பருத்தி சாகுபடி: வேளாண் துணை இயக்குநா் ஆய்வு

பரமபதம் விளையாட்டு மூலம் தோ்தல் விழிப்புணா்வு

வாக்களிப்பதன் அவசியம் குறித்து கோலங்கள் வரைந்து விழிப்புணா்வு
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


