2026 தேர்தல் விஜய்க்கு அரசியல், தேர்தல் என்ன என்பதை புரிய வைக்கும்: எஸ்.வி.சேகர்

2026 பேரவைத் தேர்தல் விஜய்க்கு, அரசியல், தேர்தல் என்றால் என்ன என்பதை புரிய வைக்கும்...
சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நடிகர் எஸ்.வி.சேகர்.
சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நடிகர் எஸ்.வி.சேகர்.
Published on
Updated on
2 min read

சென்னை: 2026 பேரவைத் தேர்தல் விஜய்க்கு, அரசியல், தேர்தல் என்றால் என்ன என்பதை புரிய வைக்கும் என்றும், விஜய்க்கு திருச்சியில் வந்த கூட்டம் நாகையில் வரவில்லை, சினிமாவில் கைத்தட்ட உதவும் வசனம்போல் அவர் மக்கள் மத்தியில் பேசுகிறார், அவருக்கு அரசியல் தெரியவில்லை என நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்தார்.

சென்னை தலைமைச்செயலகத்தில் நாடக நடிகர், தமிழ்நாட்டின் முதல் தொலைக்காட்சி தொடர் தயாரிப்பாளர், அரிமா சங்கத்தில் பல முக்கிய பொறுப்புகளை வகித்த எஸ்.வி. வெங்கடராமன் வசித்து வந்த மந்தைவெளிப்பாக்கம் 5-வது குறுக்கு தெருவிற்கு எஸ்.வி. வெங்கடராமன் தெரு என்ற புதிய பெயர் சூட்டப்பட்ட சாலைகளின் பெயர் பலகைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் எஸ்.வி.வெங்கடராமன் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுடன் எஸ்.வி.வெங்கடராமன் மகனும், நடிகருமான எஸ்.வி.சேகர் பேசியதாவது:

என்னுடைய நாடகத்திற்கு வந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமை சேர்ந்து எங்களை பாராட்டினார். அப்போது எனது தந்தையின் நூற்றாண்டு விழா நடைபெற்றது.

எனது தந்தைக்கு முதல்வர் நெருங்கிய நண்பராக இருந்தார். மேலும் எனது தந்தை 86 ஆயிரம் யூனிட் ரத்தம் கொடுத்துள்ளார். பல சமூக சேவைகளை செய்துள்ளார். அதனால் எங்கள் தந்தை வாழ்ந்த தெருவிற்கு அவரது பெயரை சூட்ட வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தோம். அதனை ஏற்று முதல்வர் பெயர் பலகையை திறந்து வைத்தார்.

எங்கள் குடும்பத்திற்கு இது வாழ்நாள் கௌரவமாக உள்ளது. பொதுவாக திமுக குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிரானது என பேசுவார்கள். ஆனால் அது அரசியலுக்காக பேசப்படும் வார்த்தை என கூறினார்.

எல்லோருக்குமான முதல்வர் என எப்போது கூற ஆரம்பித்தார்களோ அப்போது இருந்தே அவர் அப்படித்தான் உள்ளார். அனைத்து சமூகத்தின் சார்பிலும் முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

மு.க.ஸ்டாலின் பின்னால் அணிவகுத்து நிற்பேன்

இனி எப்போதுமே அருமை நண்பர் முதல்வர் மு.க.ஸ்டாலின் பின்னால் அணிவகுத்து நிற்பேன், அது எனது வாழ்நாள் கடமை என கூறினார். வரும் பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்வேன்.

தவெக தலைவர் விஜய்க்கு கூடும் கூட்டம் எம்.ஜி.ஆர்-க்கு கூடும் கூட்டமாக மாறி உள்ளதா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, எம்ஜிஆர் கோடம்பாக்கத்தில் இருந்து நேரடியாக கோட்டைக்கு வரவில்லை. 20 ஆண்டுகள் திமுகவிலிருந்து திமுக வளர்ச்சிக்கு பாடுபட்டு பிறகு சிறிய பிரச்னையால் அங்கிருந்து வெளியே வந்து கட்சி ஆரம்பித்து முதல்வரானார். சினிமாவில் பாட்டு பாடிவிட்டு கட்சி ஆரம்பித்து முதலவராகவில்லை என கூறினார்.

கூட்டம் ஓட்டாக மாறாது

சென்னை தீவுத்திடலில் கண்காட்சிக்கு வரக்கூடிய கூட்டத்தை விடவா விஜய்க்கு கூட்டம் வருகிறது எனவும், அவருக்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறாது எனவும் தெரிவித்தார்.

விஜய் இன்னும் பக்குவப்பட வேண்டும்

திருச்சியில் வந்த கூட்டம் நாகப்பட்டினத்தில் வரவில்லை, மனப்பாடம் செய்து 3 நிமிடம் படிக்கிறார். அங்கிள் என்கிறார் இது எல்லாம் சினிமாவில் கைத்தட்ட உதவும். விஜய்க்கு முதலில் மக்கள் தொடர்பு இருக்க வேண்டும், தொலைபேசி எண்ணை கொடுத்து மக்களுக்கு என்ன பிரச்னை என கேட்க வேண்டும். அவருக்கு எழுதிக் கொடுப்பவர்கள் தவறாக எழுதி கொடுக்கிறார்கள். விஜய் இன்னும் பக்குவப்பட வேண்டும் எனவும் விஜய்க்கு அரசியலில் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இன்னும் 15, 20 ஆண்டுகள் உழைக்க வேண்டும்.

அரசியல் 24 மணி நேர சேவை

சனிக்கிழமை மட்டும் வந்து பேசுவது சரியாக இருக்காது. அரசியலில் 24 மணி நேரமும் செய்யக்கூடிய ஒரு சேவை அதை புரிந்து கொள்ள வேண்டும். தற்போது தான் வெளியே வந்து நின்று பேசுகிறார். விஜய்யை தவறாக பேச வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் அரசியல் என்பதும் தேர்தல் என்பதும் என்ன என்பதை 2026 தேர்தல் விஜய்க்கு புரிய வைக்கும் என எஸ்.வி.சேகர் கூறினார்.

Summary

2026 elections will make Vijay understand what politics and elections are says SV Sekar

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com