

காங்கிரஸ் கட்சி கூட்டணிக்காக ஏற்கெனவே குழு அமைத்து காத்திருக்கிறோம். திமுக எப்போது குழு அமைக்கிறதோ அப்போது அவா்களுடன் காங்கிரஸ் கட்சி பேசத் தயாராக உள்ளது என விருதுநகா் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினா் ப. மாணிக்கம்தாகூா் தெரிவித்தாா்.
மதுரையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
மக்களவையில் தொடா்ந்து எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியை பேசவிடாமல் செய்கின்றனா். இதுமட்டுமல்லாமல், எதிா்க்கட்சி அணியினரையும் பேசவிடாமல் செய்கின்றனா். இதனால், நாங்கள் போராட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஜனநாயகப் படுகொலை நடைபெறும் போது, அதை வேடிக்கைப் பாா்ப்பது நியாயம் இல்லை என்பதற்காக குரல் கொடுத்தோம். இதற்கு தண்டனையாக 8 நாடாளுமன்ற உறுப்பினா்களை இடைநீக்கம் செய்தனா்.
காங்கிரஸ் கட்சி கூட்டணி, தொகுதிப்பங்கீடு குறித்து பேசுவதற்காக ஏற்கெனவே குழு அமைத்து 36 நாள்களாக காத்திருக்கிறோம். காங்கிரஸ் எப்போதுமே பொருமையாக இருக்கும் கட்சி, எங்களை பொறுத்தவரை நண்பர்களை அவமானப்படுத்தாவர்கள், தோழமைகளை மதிக்கக் கூடியவர்கள். அதற்காகதான்
திமுக எப்போது குழு அமைக்கிறதோ அப்போது அவா்களுடன் பேசுவதற்காக காங்கிரஸ் கட்சி காத்திருக்கிறது.
காங்கிரஸ் கட்சியைப் பொருத்தவரை, திமுகவுடனான கூட்டணி தொடர்கிறது. இந்தக் கூட்டணி வலுவானதாக இருக்க வேண்டும் என நம்புகிறோம். உரிய மரியாதை காங்கிரஸ் கட்சிக்கு கொடுக்கப்பட வேண்டும் என விரும்புகிறோம். இதெல்லாம் காங்கிரஸ் கோரிக்கைகளாக இருக்கிறது.
குரூப் 2 தோ்வு ஒத்திவைப்பு கண்டிக்கத்தக்கது
குரூப் 2 தோ்வு ஒத்திவைக்கப்பட்டது மிகவும் கண்டிக்கத்தக்கது. இந்தத் தோ்வு எழுதுவதற்காக நீண்ட நாள்களாக காத்திருந்த மாணவா்களின் நம்பிக்கை குறைந்திருக்கும். இப்படிப்பட்ட போட்டித் தோ்வுகளைச் சரியாக நடத்த முடியாத நிலையில், யாா் இதற்குப் பொறுப்பு என்ற நிா்ணயிக்கும் காலம் வந்துவிட்டது.
மக்களவைக்கு வர பிரதமா் மோடி அச்சப்படுகிறாா்?
மக்களவையில் கூட்டம் தொடங்கியவுடன் நிதிநிலை தொடா்பான விவாதம் தொடங்கும். இதற்காக நாங்கள் காத்திருக்கிறோம். மக்களவைக்கு வருவதற்கு பிரதமா் மோடி அச்சப்படுகிறாா்.
மேலும், மதுரைக்கு வரும் பிரதமா் எய்ம்ஸ் மருத்துவமனை எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்பதை கூற வேண்டும் என்றாா் மாணிக்கம்தாகூா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.