ஓ.பன்னீர்செல்வத்தின் முடிவு மிகவும் துரதிருஷ்டவசமானது: சசிகலா
தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக மூத்த முன்னோடியும், சட்டப்பேரவை உறுப்பினருமான ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த முடிவு மிகவும் துரதிருஷ்டவசமானது என சசிகலா கூறியது தொடர்பாக...


தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக மூத்த முன்னோடியும், சட்டப்பேரவை உறுப்பினருமான ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த முடிவு மிகவும் துரதிருஷ்டவசமானது என சசிகலா தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியான ஓ.பன்னீா்செல்வம், கடந்த 2001 முதல் தொடா்ந்து 5 முறை அதிமுக சாா்பில் எம்எல்ஏவாக வெற்றி பெற்றவா்.
அரசியல் ரீதியாக ஜெயலலிதாவுக்கு நெருக்கடி வந்தபோது, அவா் ஓ.பன்னீா்செல்வத்தை 2 முறை முதல்வராக்கினாா்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னா், அவரது தோழி சசிகலாவால் முதல்வராக்கப்பட்டாா். இதற்கிடையே சசிகலா, ஓபிஎஸ் இடையே கருத்து வேறுபாடு காரணமாக முதல்வா் பதவியை ராஜிநாமா செய்த ஓபிஎஸ் தா்ம யுத்தம் நடத்தினாா்.
தொடா்ந்து சசிகலா சிறைக்குச் சென்ற பிறகு எடப்பாடி பழனிசாமியுடன் கைகோத்து துணை முதல்வராக பதவியேற்றாா். அதிமுகவில் ஒருங்கிணைப்பாளராகவும் இருந்தாா். அதிமுகவில் ஒற்றை தலைமை உருவாக வேண்டும் என அழுத்தம் ஏற்பட்ட நிலையில் ஓ.பன்னீா்செல்வம் - எடப்பாடி பழனிசாமி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஒருகட்டத்தில், ஓபிஎஸ்ஸின் ஒருங்கிணைப்பாளா் பதவி பறிக்கப்பட்டது. கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டாா்.
இதைத்தொடா்ந்து அதிமுக தொண்டா்கள் உரிமை மீட்புக் குழுவை ஏற்படுத்தி தொடா்ந்து இயங்கி வந்தாா். 2024 மக்களவைத் தோ்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தாா்.
இதேபோல அதிமுக தலைமை பதவிக்கு உரிமை கோரி உச்சநீதிமன்றம் வரை ஓபிஎஸ் சென்ற வழக்கு இதுவரை நிலுவையில் உள்ளது. தொடா்ந்து அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக இயங்கி வந்த ஓபிஎஸ், அதிமுகவில் அடைக்கலம் தேடி தனது ஆதரவாளர்கள் மூலம் தூது அனுப்பிக் கொண்டே இருந்தார்.
ஒரு கட்டத்தில் எந்த நிபந்தனையும் இன்றி அதிமுகவில் சேர தயாராக இருப்பதாக அறிக்கை விட்டும் ஓபிஎஸ்ஸை அதிமுகவில் சேர்க்க எடப்பாடி கே.பழனிசாமி சம்மதிக்கவே இல்லை.
தற்போது தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பாஜக - அதிமுக இணைந்து தேசிய ஜனநாயக கூட்டணியை அமைத்திருக்கும் நிலையில், அந்த கூட்டணியில் இருந்து விலகுவதாக கடந்தாண்டு ஓபிஎஸ் அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து அதிமுகவில் இணைந்து செயல்பட விருப்பம் தெரிவித்து பலமுறை ஓபிஎஸ் கருத்து தெரிவித்திருந்தார். இந்த விவகாரத்தில் பாஜக பெரிதும் உதவிபுரியும் என்று நம்பியிருந்த ஓபிஎஸ்ஸை ஓரம் கட்டிவிட்டு அதிமுக தலைமையில் கூட்டணி அமைத்தது பாஜக. இதையடுத்து பாஜக கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் வெளியேறினார்.
இதனிடையே, முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டதை விரும்பாத டி.டி.வி தினகரன் பாஜக கூட்டணியில் இருந்து ஒதுங்கி இருந்து வந்த நிலையில், நான் பாஜக தலைமையிலான கூட்டணியில் இணைகிறேன் என்று இணைந்து கொண்டார். இதையடுத்து ஓபிஎஸ் எந்தவித முடிவு எடுக்காத நிலையில் இவரை நம்பிக் கொண்டிருந்தால் எதுவும் நடக்காது என்ற முடிவுக்கு வந்த அவரது ஆதரவாளர்களான முன்னாள் அமைச்சா் வைத்தியலிங்கம், ஆலங்குளம் தொகுதி எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் ஆகியோா் திமுகவில் இணைந்தனர். இதனைத் தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் ஒவ்வொருவராக கலைந்து சென்று திமுக, தாய்க் கட்சியான அதிமுக, தவெக என இணையத் தொடங்கினர்.
இதனிடையே, ஜெயலலிதா பிறந்த நாளன்று இனி நான் என்ன சங்கர மடத்துக்காக போவேன் என்று விரக்தியாக ஓபிஎஸ் பேசிய நிலையில், ஓபிஎஸை மீண்டும் அதிமுகவில் இணைக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று இபிஎஸ் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.
இந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று(பிப்.27) அந்த கட்சியில் ஓபிஎஸ் இணைந்தார்.
ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மக்களவை முன்னாள் உறுப்பினர் ரவீந்திரநாத், உசிலம்பட்டி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பி.அய்யப்பன் மற்றும் மதுரை முன்னாள் எம்.பி. இரா.கோபாலகிருஷ்ணன், புதுச்சேரி மாநில அமைப்பாளர் ஓம்சக்தி சேகர், அம்மா பேரவை முன்னாள் துணைச் செயலாளர் டி.ரமேஷ், மாநில வழக்குரைஞர் பிரிவு தலைவர் வழக்குரைஞர் சி.திருமாறன் - இணைச் செயலாளர் வழக்குரைஞர் பி.ராஜலட்சுமி, மாவட்டச் செயலாளர்கள் சென்னை ரெட்சன் சி.அம்பிகாபதி, திருப்பூர் மடத்துக்குளம் கே.மாரிமுத்து, நாமக்கல் பழனிசாமி, மாநில மகளிர் அணி இணைச் செயலாளர் சீதா பழனிசாமி, புதுக்கோட்டை நகர்மன்றத் முன்னாள் தலைவர் ராஜசேகர் ஆகியோர் திமுகவில் இணைந்தனர்.
ஓ.பன்னீர்செல்வத்தின் முடிவு துரதிருஷ்டவசமானது
இதனிடையே, ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த முடிவு மிகவும் துரதிருஷ்டவசமானது என சசிகலா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:
தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக மூத்த முன்னோடியும், சட்டப்பேரவை உறுப்பினருமான ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த முடிவு மிகவும் துரதிருஷ்டவசமானது.
தமிழகத்திலிருந்து அகற்றப்படவேண்டிய ஒரு தீய சக்தியாக திமுக விளங்கும் நிலையில் தாய் கழகம் என்று நினைத்து கொண்டு திமுகவில் தங்களை இணைத்துக் கொள்வது ஒரு தவறான முடிவாகத்தான் அமைந்துள்ளது.
ஆனால் இந்த நிலைமைகளுக்கு எல்லாம் காரணம் ஒன்றே ஒன்றுதான். அவர் வேறு யாருமில்லை. தான் மட்டும்தான் அதிமுக என்று தம்பட்டம் அடித்துக்கொண்டு தனக்கு தானே தலைவராக அறிவித்துக் கொண்டவர்கள், தன்னை சுற்றியுள்ளவர்களையும் ஏமாற்றிக் கொண்டிருப்பவர்கள், திமுகவினரின் முழு கட்டுப்பாட்டில் இருந்து கொண்டு அதிமுகவில் உள்ள அனைவரையும் வெளியேற்றி விட்டு புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் கொள்கைகளுக்கு விரோதமாக தொடர்ந்து செயல்பட்டுவரும் துரோகிகளின் அழிவுகாலம் நெருங்கிவிட்டது.
இந்நிலையில், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் எனது தலைமையில் புரட்சித்தலைவரின் ரத்தத்தின் ரத்தங்களும், புரட்சித்தலைவி அம்மா வழிவந்த சிங்கங்களும் எதிரிகளையும் துரோகிகளையும் வீழ்த்துவது உறுதி என சசிகலா கூறியுள்ளார்.
களம் காண்போம்
கடந்த செவ்வாய்க்கிழமை ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கோட்டைமேடு பகுதியில் களம் காண்போம் அம்மாவின் ஆட்சி அமைப்போம் என்ற பெயரில் சசிகலா தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் மக்கள் நலனுக்காக புதிய கட்சியை அறிவிக்கிறேன். எனது புதிய கட்சி அறிஞர் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் திராவிடக் கட்சியாக இருக்கும். அந்தக் கட்சியின் மூலம் ஜெயலலிதா வழியில் துரோகிகளை அழிப்போம்.
9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது. இனியும் அமைதியாக இருந்தால் அது தொண்டர்கள், மக்களுக்கு செய்யும் துரோகம். கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன். என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை. களம் காண்போம். நம் தலைவர்களின் பொற்கால ஆட்சியை அமைப்போம் எனக் குறிப்பிட்டு கொடியை அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...