

தச்சன்குறிச்சியில் தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு விழாவை அமைச்சர்கள் எஸ். ரகுபதி, சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், தசசன்குறிச்சி கிராமத்தில் உள்ள புனித விண்ணேற்பு அன்னை ஆலயத்தில் புத்தாண்டு திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் மாநிலத்தின் முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்படுவது வழக்கம். இதன்படி, நிகழாண்டில் ஜனவரி 3-ஆம் தேதி ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த விழாக் குழுவினா் மாவட்ட நிா்வாகத்திடம் மனு அளித்தனா். இதையடுத்து, அந்தத் தேதியில் போட்டி நடத்த அனுமதி அளிக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து, தச்சன்குறிச்சியில் உள்ள ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறவுள்ள திடலை மாவட்ட ஆட்சியா் மு.அருணா அண்மையில் நேரில் பாா்வையிட்டு வாடிவாசல், விழா மேடை, காளைகள் ஓடுதளம், பாா்வையாளா்கள் மாடம் ஆகியவற்றை அரசு அறிவித்துள்ள விதிமுறைகளின்படி அமைக்க அறிவுறுத்தினாா். மேலும் பொதுமக்கள் பாதுகாப்பில் உரிய கவனம் செலுத்த வேண்டும் என்று அலுவலா்களிடையே வலியுறுத்தினாா். ஆட்சியா் அறிவுறுத்தலின்படியும், அரசு விதிமுறைகளின்படியும் முன்னேற்பாட்டு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றது.
இதையடுத்து ஜல்லிக்கட்டு விழா சனிக்கிழமை காளியம்மன் கோயில் முன்பாக அமைக்கப்பட்ட வாடி வாசலில் நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் மு. அருணா தலைமை விகித்து ஜல்லிக்கட்டு உறுதிமொழியினை வாசித்தார்.
தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டியை இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ். ரகுபதி , பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
கந்தர்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் மா. சின்னதுரை, திமுக மாவட்ட செயலாளர் கே. கே. செல்லபாண்டியன், திமுக ஒன்றிய செயலாளர்கள் எம். பரமசிவம், மா.தமிழய்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முதலில் கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டது, தொடர்ந்து காளைகள் அவிழ்த்து விடுவதை மாடு பிடி வீரர்கள் சீறிவரும் காளைகளை தீரத்துடனும் வீரத்துடனும் போட்டி போட்டு அடக்கி வருகின்றனர். இதில் சில காளைகள் வீரர்களுக்கு போக்கு காட்டி துள்ளி குதித்து ஓடி விடுகின்றன.
தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு என்பதால் ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து சுமார் 600-க்கும் மேற்பட்ட காளைகள், 300 மாடுபிடி வீரர்களும் முன்பதிவு செய்து கலந்து கொண்டுள்ளனர்.
ஜல்லிக்கட்டில் சிறந்த ஜல்லிக்கட்டு காளை மற்றும் சிறந்த மாடுபிடி வீரர்களுக்கான முதல் பரிசாக மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட மிதிவண்டி , மின்விசிறி, எவர்சில்வர் அண்டா, கட்டில் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்படுகின்றன.
கால்நடைத்துறை அலுவலர்கள், மருத்துவத்துறை அலுவலர்கள் முகாம் அமைத்து சிகிச்சைகள் பரிசோதனைகள் செய்து வருகின்றனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக்குப்தா தலைமையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜல்லிக்கட்டு விழாவில் கந்தர்வகோட்டை வட்டாட்சியர் ம.ரமேஷ் காவல் ஆய்வாளர்கள் வனிதா, கோ.சுகுமார், கிராம நிர்வாக அலுவலர் மேனகா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.