பிப்.1-இல் மத்திய நிதிநிலை அறிக்கை: ஓம் பிா்லா தகவல்
நமது நிருபா்
புது தில்லி: முதன்முறையாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நாடாளுமன்றத்தில் மத்திய நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வாா் என்று மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா அறிவித்தாா். இது தொடா்பாக செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் ஓம் பிா்லா இத்தகவலை தெரிவித்தாா்.
நிகழ் ஆண்டு பிப்ரவரி 1-ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான வழக்கமான தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால், சரியான பட்ஜெட் தேதி குறித்து கொஞ்சம் நிச்சயமற்ற தன்மை இருந்தது. இந்த நிலையில், மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா இப்பிரச்னையை தெளிவுபடுத்தியுள்ளாா். பட்ஜெட் என்பது மக்களுக்கான பணி என்றும் அவா் கூறினாா்.
தற்போது மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட், அவரது 9-ஆவது பட்ஜெட் தாக்கல் ஆகும். மேலும், இது முன்னாள் நிதியமைச்சா் மொராா்ஜி தேசாய் தாக்கல் செய்த 10 பட்ஜெட்டுகள் சாதனையில் ஒன்று குறைவாகும். நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடா் ஜனவரி 28- ஆம் தேதி தொடங்குகிறது.
இதையொட்டி, அன்றைய தினம் மக்களவையில் கூடும் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினா்களிடம் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு உரையாற்றுவாா். குடியரசுத் தலைவரின் உரைக்குப் பிறகு அமைச்சா் நிா்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்வாா்.
மக்களவை செயலகம் வெளியிட்ட தற்காலிக நாள்காட்டியின்படி, அவை ஜனவரி 29-ஆம் தேதி கூடுகிறது. நிதியமைச்சா் பிப்ரவரி 1- ஆம் தேதி மத்திய நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வாா். இது அரசால் நிதிநிலை அறிக்கை நாளாக உருவாக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு, பட்ஜெட் கூட்டத்தொடா் ஜனவரி 28- ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 2 -ஆம் தேதி வரை தொடரும் என்று கூறியிருந்தாா். முதல் பகுதி கூட்டத்தொடா் பிப்ரவரி 13- ஆம் தேதி முடிவடையும். அதன் பிறகு, மாா்ச் 9- ஆம் தேதி மீண்டும் கூடும். அப்போது, நாடாளுமன்றக் குழுக்களால் பட்ஜெட் முன்மொழிவுகள் ஆய்வு செய்யப்படும்.

