காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

திருச்சியில் திரள்வோம்! திராவிட மாடல் 2.0 ஆட்சியை அமைப்போம்! - மு.க. ஸ்டாலின் அழைப்பு மடல்

அரசியல் எதிரிகள் தங்கள் கட்சியின் வலிமை மீது நம்பிக்கை இல்லாமல், நம்முடைய கூட்டணி உடையாதா என்று ஏங்கிக் கிடந்தார்கள் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் குறித்து...

News image
முதல்வர் மு.க. ஸ்டாலின்- DMK
Updated On :5 மார்ச் 2026, 8:13 am

இணையதளச் செய்திப் பிரிவு

தீரர் கோட்டமாம் திருச்சியில் கூடுவோம்! திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைந்திட உறுதியேற்றுக் களம் காண்போம்! திருச்சிக்குத் திரண்டு வா உடன்பிறப்பே! உன் திருமுகம் காண ஆவலாய்க் காத்திருக்கிறேன்! என திமுக தொண்டர்களுக்கு தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் மடல் எழுதியுள்ளார்.

அதன் விவரம் வருமாறு:

நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் திருச்சி மாநாட்டு விழா அழைப்பு மடல்.

தீரர் கோட்டமாம் திருச்சியில் திராவிட அரசியல் பேரியக்கமாம் திமுக ‘ஸ்டாடலின் தொடரட்டும் - தமிழ்நாடு வெல்லட்டும்’ என்கிற தேர்தல் சிறப்பு மாபெரும் திமுக நிர்வாகிகள் மாநாட்டில் உடன்பிறப்புகளாம் உங்களைக் காணும் ஆவலுடன் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். தலைமைக் கழகம் தொடங்கி, கிளைக்கழகங்கள் வரையிலான, கழகத்தின் அனைத்து அணிகளையும் உள்ளடக்கிய ஏறத்தாழ பத்து இலட்சம் நிர்வாகிகள் கூடுகின்ற பெருவிழாவாகத் திருச்சி சிறுகனூரில் மார்ச் 9 ஆம் தேதி திமுக மாநாடு நடைபெறவிருக்கிறது.

திமுக என்றாலே குடும்பம்தானே…! அதுதான் நமக்குப் பெருமை. நம் அரசியல் எதிரிகளுக்கோ அவர்களின் வயிறு எரியச் செய்யும் பொறாமை. என்ன செய்வது? பேரறிஞர் அண்ணாவும் முத்தமிழறிஞர் கலைஞரும் நம்மை ஒருதாய் மக்கள் என்ற உணர்வுடனும், திமுக குடும்பப் பாசத்துடனும் வளர்த்துவிட்டார்கள். 75 ஆண்டுகளைக் கடந்த இந்தப் பெருங்குடும்பத்தின் ஒட்டுமொத்த நிர்வாகிகளும் ஓரிடத்தில் ஒன்றுகூடி, திராவிட மாடல் 2.0 ஆட்சியை அமைப்போம் என உறுதியேற்று, களம் காணும் பட்டாளமாக அணிவகுக்கும்போது, எதிரிகள் நடுங்குவது இயல்புதானே!

உங்களில் ஒருவனான என்னைப் பொறுத்தவரை, நான் எதிரிகளின் செயல்பாடுகளைக் பற்றிக் கவலைப்படுபவனல்ல. நம் உயிர்மூச்சான திமுக என்ற இயக்கத்தின் வளர்ச்சி, அதன் ஆட்சிக்காலத் திட்டங்களால் தமிழ்நாட்டின் முன்னேற்றம், தமிழர்கள் ஒவ்வொருவரும் அடைய வேண்டிய உயர்வு இவை பற்றி சிந்தித்து, அதற்காக என் சக்திக்கு மீறி உழைத்துக்கொண்டிருப்பவன். என்னைப் போலவே, திமுக உடன்பிறப்புகளையும் உழைக்கச் செய்பவன்.

உழைப்பு வீண் போகாமல் அவற்றை மொத்தமாக அறுவடை செய்ய வேண்டிய காலம்தான், 2026 தேர்தல் களம். அந்தக் களத்திற்கு நம்மை ஆயத்தமாக்கிக் கொள்ள திருச்சி சிறுகனூரில் ஒன்றாகக் கூடுகிறோம்.

திமுக என்கிற கொள்கைக் குடும்பத்தின் தலைவனாக இருக்கிற எனக்கு, கிளைக்கழகங்கள் வரையிலான நிர்வாகிகளை மாநாட்டிற்கு வருகை தருமாறு அன்புடன் அழைக்க வேண்டிய கடமை இருக்கிறது. கடந்த பிப்ரவரி 26-ஆம் நாள், மாநாட்டில் பங்கேற்கும் நிர்வாகிகள் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் அழைப்புக் கடிதத்தை அனுப்பியுள்ளேன்.

“அன்பு உடன்பிறப்பே… தீரர்கள் கோட்டமாம் திருச்சியில், வருகின்ற மார்ச் 9-ஆம் நாளன்று பத்து லட்சம் திமுக நிர்வாகிகள் கலந்துகொள்ளும் திமுக நிர்வாகிகள் சந்திப்பு மாநாட்டில் உங்களை எல்லாம் காண்பதற்கு ஆவலாய் உள்ளேன். நமது திராவிட மாடல் ஆட்சியில் எண்ணற்ற நலத்திட்டங்களைச் செயல்படுத்தி, தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக உயர்த்தியுள்ளோம். நமது அரசு இதனை சாதித்துக் காட்டியதற்கு நீங்கள்தான் அடித்தளம். உங்களின் ஆதரவும் உழைப்பும் கொண்டு நம் பயணத்தைத் தொடர்ந்திடுவோம். அதற்குத் துவக்கமாய் தீரர்கள் கோட்டமாம் திருச்சியில் திரள்வோம்! திராவிட மாடல் 2.0 ஆட்சியை அமைப்போம்! திரண்டு வா உடன்பிறப்பே!” என்று உள்ளன்புடன் எழுதிய அந்தக் கடிதம் உடன்பிறப்புகளாம் உங்கள் கைகளில் தவழ்வதை மனக்கண்களால் காண்கிறேன்.

திருச்சியில் மாநாடு என்றாலே கழகத்தின் வரலாற்றில் திருப்புமுனைதான். திமுக மாநாடு என்று சொன்னாலே நம் நினைவுக்கு வருபவர் முதன்மைச் செயலாளர் அமைச்சர் கே.என். நேருதான். விழிகள் விரிந்து வியந்திடும் வகையில் திருச்சியில் கே.என். நேரு நடத்திக் காட்டியுள்ள மாநில மாநாடுகள், மண்டல மாநாடுகள், சிறப்பு மாநாடுகள் ஒவ்வொன்றும் திமுக வரலாற்று அத்தியாயத்தில் அழுத்தமாகப் பதிந்துள்ளன. ‘நேரு என்றால் மாநாடு, மாநாடு என்றால் நேரு’ என்று நான் எப்போதும் கூறுவதற்கேற்ப, இப்போதும் மாநாட்டுப் பணிகளை மிகச் சிறப்பாக அவர் மேற்கொண்டு வருகிறார். முத்தமிழறிஞர் கலைஞர் இருந்திருந்தால், ‘நேரு என்றால் மேரு. உடன்பிறப்பே.. திருச்சியை நோக்கி முன்னேறு’ என்று அழைத்திருப்பார்.

நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் போல எனக்குப் பேசவோ, எழுதவோ வராது. அவரிடம் நான் கற்றுக்கொண்டது உழைப்பு. அந்த உழைப்பு இந்த இயக்கத்தைக் கட்டிக்காப்பதற்கான உழைப்பு. இந்திய அரசியல் வரலாற்றில், கூட்டணிக் கட்சிகளைக் கொள்கைத் தோழமைகளாக அரவணைத்து, லட்சிய நோக்கத்துடன் பயணிக்கின்ற வாய்ப்பு, உங்களால் திமுக தலைவர் பொறுப்பு அளிக்கப்பட்டவனான உங்களில் ஒருவனான எனக்குக் கிடைத்திருக்கிறது. நம் அன்புத்தலைவர் கலைஞருக்குக் கூட காலம் இந்த வாய்ப்பை வழங்காத நிலையில், அவரது எண்ணத்தை நிறைவேற்றும் வகையில் 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்காக உருவான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி, 2020 ஊரக உள்ளாட்சித் தேர்தல், 2021 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல், 2022 நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், 2024 நாடாளுமன்றத் தேர்தல், பல இடைத்தேர்தல்கள், எதிர்வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தல் எனத் தொடர்வது மட்டுமல்ல, புதிதாக மேலும் பல கட்சிகள் நம் கூட்டணியில் இணைந்து கூடுதல் வலிமையைப் பெற்றிருக்கிறோம்.

அதனால்தான், அரசியல் எதிரிகள் தங்கள் கட்சியின் வலிமை மீது நம்பிக்கை இல்லாமல், நம்முடைய கூட்டணி உடையாதா என்று ஏங்கிக் கிடந்தார்கள். நம்மிடமிருந்து அவர்கள் வெளியேறி விடுவார்கள் என்றும், இவர்கள் பிரிந்து போகப் போகிறார்கள் என்றும் கனவில் கணக்கு போட்டு கற்பனைக் கோட்டைகளைக் கட்டிக் கொண்டிருந்தார்கள். ஆஃபர் கொடுத்தேனும் நம் கூட்டணியை உடைத்திடலாம் என முயற்சி செய்தார்கள். அவர்களின் கற்பனையையும் கனவுகளையும் இரசித்தபடி நாம் நம்முடைய பணியை மேற்கொண்டோம்.

மதவெறி அரசியலுக்குத் தமிழ்நாட்டில் இடமில்லை, மாநில உரிமைகளை ஒருபோதும் விட்டுக்கொடுக்கப் போவதில்லை என்கிற கொள்கை உணர்வுமிக்க நம் தோழமைக் கட்சியினருடன் தொடர்ந்து இணக்கமாகவும் ஜனநாயகத் தன்மையுடனும் ஆலோசனைகள் நடத்தி, நம் பயணத்தில் இணைந்திட விரும்பிய கட்சிகளுக்கும் இடமளித்து, உறுதியான வெற்றிக்கான கூட்டணியை உங்களில் ஒருவனான நான் தலைமையேற்றுத் தொடர்கிறேன்.

உடன்பிறப்புகளாம் உங்களின் கடுமையான உழைப்பாலும், தமிழ்நாட்டு மக்களின் பேராதரவினாலும் 10 ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு, 2021-ஆம் ஆண்டு உங்களில் ஒருவனான என் தலைமையில் அமைந்த திமுகவின் திராவிட மாடல் ஆட்சி கடந்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றிய திட்டங்களாலும், அதனால் தமிழ்நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களும் அடைந்துள்ள பலன்களினாலும், நான் மட்டுமல்ல, நாம் ஒவ்வொருவரும் பெருமிதத்துடனும் நம்பிக்கையுடனும் 2026 சட்டப்பேரவைத் தேர்தல் களத்தில் மக்களைச் சந்திக்க முடிகிறது.

2021-ஆம் ஆண்டு மே 2-ஆம் நாள் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று, கழகத்தின் வெற்றி உறுதி செய்யப்பட்ட நிலையில், நம் உயிர்நிகர் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞரின் ஓய்விடத்தில் வெற்றிச் சான்றிதழைக் காணிக்கையாக்கிய பிறகு, செய்தியாளர்கள் சூழ்ந்திருந்த நிலையில் அவர்கள் மூலமாகத் தமிழ்நாட்டு மக்களுக்கு நான் அளித்த உறுதியை அன்பு உடன்பிறப்புகளான நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள்.

“எங்களுக்கு வாக்களித்தவர்கள் சரியாகத்தான் வாக்களித்திருக்கிறோம் என்று மகிழ்ச்சி அடையக்கூடிய வகையிலும், வாக்களிக்காதவர்கள் இவர்களுக்கு வாக்களிக்கத் தவறிவிட்டோமே என்று நினைக்கக்கூடிய அளவிலும் திமுகவின் ஆட்சி இருக்கும்” என்பதுதான் உங்களில் ஒருவனான நான் வழங்கிய உறுதி. அதனை நிறைவேற்றும் வகையில் திராவிட மாடல் அரசு, எல்லாருக்கும் எல்லாம் என்ற லட்சியத்துடன், தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் ஒருவரையும் பின்தங்க விடமாட்டோம் என்ற உறுதியுடன் திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. திராவிட மாடல் ஆட்சியினால் பயன் பெறாத குடும்பங்களே தமிழ்நாட்டில் இல்லை என்கிற வகையில் சாதனைத் திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறோம்.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், விடியல் பயணம், நான் முதல்வன், புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன், கலைஞர் கனவு இல்லம், மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் -நம்மைக் காக்கும் 48, இல்லம் தேடிக் கல்வி, தோழி விடுதி, தாயுமானவர் திட்டம், அன்புக் கரங்கள், அன்புச் சோலை, உங்களுடன் ஸ்டாலின், நலம் காக்கும் ஸ்டாலின், பன்னாட்டு நிறுவன முதலீடுகளுடன் பரவலாக்கப்பட்ட தொழில் வளர்ச்சி, இரட்டை லக்கப் பொருளாதார வளர்ச்சி என்று தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக, முன்னுதாரண மாநிலமாக, இந்தியாவின் பிற மாநிலங்கள் பின்பற்றக்கூடிய மாநிலமாக, இந்திய ஒன்றிய அரசின் புள்ளிவிவரங்களே மறுக்க முடியாத மாநிலமாக உருவாக்கியிருக்கிறோம். திராவிட மாடல் அரசின் திட்டங்களை நாம் பட்டியலிட்டுச் சொல்வதுடன், திட்டங்களால் பயன்பெற்ற மக்கள் அவற்றைப் பெருமையுடன் சொல்கின்ற நிலையைத் தமிழ்நாடு அடைந்திருக்கிறது.

5 ஆண்டுகால ஆட்சியின் நிறைவில், ஓரணியில் தமிழ்நாடு, வெல்லும் தமிழ்ப் பெண்கள் ஆகிய பெயர்களில் ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று மக்களின் ஆதரவைத் திரட்டுகின்ற பணியை எவ்வித எதிர்ப்புமின்றிக் கழக உடன்பிறப்புகளால் மேற்கொள்ள முடிகிறது என்பதே திராவிட மாடல் நல்லாட்சிக்கான சாட்சியாகும்.

மண்டலவாரியாக இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு மாநாடுகள், மகளிரணியின் வெல்லும் தமிழ்ப் பெண்கள் மாநாடுகள், பிஎல்ஏ2, பிஎல்சி, பிடிஏ பயிற்சி மாநாடுகள் எனத் தேர்தலை முன்னிட்டு நாம் நடத்திக்காட்டிய ஒவ்வொரு மாநாட்டிலும் இலட்சத்துக்கும் மேற்பட்ட உடன்பிறப்புகள் கருப்பு சிவப்பு படையாய்க் திரண்டு வந்து கலந்துகொண்டனர்.

இவற்றைத் தொடர்ந்து, மார்ச் 9-ஆம் நாள் ‘ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும்’ என்ற பெயரிலான திமுக நிர்வாகிகள் சந்திப்பு பிரம்மாண்ட மாநாடு நடைபெறவிருக்கிற திருச்சி சிறுகனூரில்தான், 5 ஆண்டுகளுக்கு முன் 2021-ஆம் ஆண்டு தேர்தல் சிறப்பு மாநாடு நடைபெற்றது. அப்போது உடன்பிறப்புகளான உங்களிடமும் பொதுமக்களிடமும் நான் வைத்த கோரிக்கை, ‘திமுகவிற்கு 10 ஆண்டுகள் தொடர்ச்சியான ஆள்கின்ற வாய்ப்பைத் தாருங்கள். அதிமுக ஆட்சியில் 50 ஆண்டுகால அளவுக்கு பின்னோக்கி இழுத்துச் செல்லப்பட்டுள்ள தமிழ்நாட்டை மீட்டு உயர்த்திக் காட்டுவோம்’என்பதுதான்.

திமுக உடன்பிறப்புளான உங்களின் உழைப்பாலும், மக்களின் ஆதரவாலும் 5 ஆண்டுகால திராவிட மாடல் ஆட்சி தமிழ்நாட்டை மீட்டெடுத்து, வளர்ச்சிப் பாதையில் பயணிக்கச் செய்திருக்கிறது. தொடர் பயணத்திற்கும், தடையில்லா வளர்ச்சிக்கும், ஒவ்வொரு துறையிலும் உலகத் தரத்திலான முன்னேற்றத்திற்கும், நான் அப்போது கேட்டது போல, மேலும் 5 ஆண்டுகால ஆட்சியை நாம் அமைத்திட வேண்டும். திராவிட மாடல் 2.0 அரசு அமைந்திட வேண்டும்.

தீரர் கோட்டமாம் திருச்சியில் கூடுவோம்! திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைந்திட உறுதியேற்றுக் களம் காண்போம்!

திருச்சிக்குத் திரண்டு வா உடன்பிறப்பே! உன் திருமுகம் காண ஆவலாய்க் காத்திருக்கிறேன்! என கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.