உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

அதிரடியாக உயர்ந்த 19 கிலோ வர்த்தக சிலிண்டர் விலை: எவ்வளவு?

வர்த்தகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு (எல்பிஜி) சிலிண்டர் விலை வெள்ளிக்கிழமை (மே.1) ரூ. 993 உயர்ந்துள்ளது குறித்து ...

Commercial LPG prices hiked

அதிரடியாக உயர்ந்த வர்த்தக சிலிண்டர் விலை - (கோப்புப்படம்)

Published On :

புது தில்லி: மேற்கு ஆசியாவில் நிலவும் போர் காரணமாக உலகளாவிய எண்ணெய் விலைகளில் ஏற்பட்ட உயர்வைத் தொடர்ந்து, மே மாதத்திற்கான வர்த்தகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு (எல்பிஜி) சிலிண்டர் விலை அதிரடியாக வெள்ளிக்கிழமை (மே.1) ரூ. 993 உயர்ந்து ரூ. 3,237-க்கு விற்பனையாகிறது.

இந்த அதிரடி விலை உயர்வால் ஹோட்டல்கள், உணவகங்களில் பயன்படுத்தப்படும் வணிக சிலிண்டர் விலை உயர்ந்துள்ளதால் உணவுப் பொருள்களின் விலை மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எதிர்பார்ப்புகளுக்கு மாறாக, ஐந்து மாநில சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவுக்குப் பிறகு வீட்டு உபயோக சிலிண்டருக்கான விலை உயர்த்தப்படவில்லை.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் அந்நியச் செலாவணி மதிப்பைக் கணக்கில்கொண்டு, பொதுத்துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவை சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் விமான எரிபொருள் விலையை ஒவ்வொரு மாதமும் ஒன்றாம் தேதி மாற்றியமைத்து வருகின்றன.

இந்த நிலையில், மே மாதத்தில் வர்த்தகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு (எல்பிஜி) சிலிண்டர் விலை அதிரடியாக வெள்ளிக்கிழமை (மே.1) ரூ. 993 உயர்த்தப்பட்டுள்ளது.

அதன்படி, உணவகங்களில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடை கொண்ட வர்த்தக சிலிண்டர் ஒன்றின் விலை ரூ.993 உயர்த்தப்பட்டுள்ள நிலையில், சென்னையில் வணிக சிலிண்டர் விலை ரூ. 3,237-க்கு விற்பனையாகிறது. மும்பையில் ரூ.2,031-க்கு விற்பனையான சிலிண்டர் விலை ரூ.3,024-ஆகவும், புதுதில்லியில் ரூ.3,071.50 ஆகவும் விற்பனையாகிறது.

அமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் இடையே போர் தொடங்கிய பிப்ரவரி 28 முதல் 19 கிலோ வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை மூன்று முறை உயர்த்தப்பட்டுள்ளது. முதலில் மார்ச் மாதம் ரூ.144 உயர்த்தப்பட்ட நிலையில், ஏப்ரல் 1 ஆம் தேதி ரூ.200 உயர்த்தப்பட்ட நிலையில், மே 1 ஆம் தேதி அதிரடியாக ரூ.993 உயர்த்தப்பட்டுள்ளதை அடுத்து வர்த்தக சிலிண்டர் விலை தற்போது புதிய உச்சம் அடைந்துள்ளது.

மாற்றமில்லாத வீட்டு உபயோக சிலிண்டர்

மேற்கு ஆசியாவில் நிலவும் போர் இடையூறுகளுக்கு மத்தியில் எரிபொருள் விலையை உயர்த்த வேண்டும் என்ற அழுத்தம் மற்றும் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக, ஐந்து மாநில சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவுக்குப் பிறகு வீட்டு உபயோக சிலிண்டருக்கான விலை மத்திய அரசு உயர்த்தவில்லை.

கடந்த மார்ச் 7-ஆம் தேதி, பொதுமக்கள் பயன்படுத்தும் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டா் விலை ரூ. 60 உயர்த்தப்பட்ட நிலையில், இந்த மாதமும் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.

சென்னையில் இதன் விலை ரூ.928.50-ஆகவும், தில்லியில் ரூ.913-ஆகவும் நீடிக்கிறது.

பெட்ரோல், டீசல் விலைகளில் மாற்றமில்லை

பெட்ரோல் மற்றும் டீசல் விலையிலும் எந்தவித மாற்றமும் இன்றி அதே விலையிலேயே தொடர்கிறது. தற்போது தில்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 94.72 ஆகவும், டீசல் விலை ரூ. 87.62 ஆகவும் உள்ளது.

விமான எரிபொருள் விலைகளிலும் அரசாங்கம் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

மேற்கு ஆசிய போர் பதற்றம் காரணமாக சிலிண்டர் தட்டுப்பாட்டால் பல உணவகங்கள் மூட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ள நிலையில், தற்போது அதிரடியாக சிலிண்டர் விலை உயர்ந்திருப்பது உணவக உரிமையாளர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

வர்த்தக சிலிண்டர் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் உணவகங்களில் விலை உயர்த்தப்பட்டுள்ள நிலையில், உணவுகளின் விலை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

சுமார் ரூ.16,000 கோடி இழப்பு

எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் கச்சா எண்ணெயை அதிக விலைக்கு வாங்கி, அதே விலையில் விற்பதால், ஒவ்வொரு நாளும் சுமார் ரூ.16,000 கோடி இழப்பை சந்தித்து வருகின்றன. ஐந்த மாநில சட்டப்பேரவை வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல், விமான எரிபொருள் மற்றும் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலைகளை உயர்த்த அழுத்தம் கொடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இக்கட்டான நிலையில் இருந்து வரும் மத்திய அரசு, எரிப்பொருள்களின் விலைகளை உயர்த்துவதால் எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களின் நிதிநிலையை எளிதாக்கினாலும், அது பணவீக்கத்தைத் தூண்டி நாட்டின் வளர்ச்சியைப் பாதிக்கும் அபாயத்தைக் கொண்டுள்ளது. மேலும், எல்பிஜி மற்றும் உர மானியங்களில் அதிகரித்த செலவை சமாளித்து வரும் மத்திய அரசிடம், பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளில் நிலவும் குறைவான வசூலை ஈடுசெய்ய, சில இழப்பீடுகளை எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் கோரக்கூடும்.

மே 1 முதல் சிலிண்டர் முன்பதிவு புதிய விதிகள்

வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை என்றாலும், நகரங்களில் உள்ள வீடுகளில் இனி 25 நாட்களுக்குப் பிறகே சிலிண்டரை முன்பதிவு செய்ய முடியும் (முன்பு 21 நாள்களாக இருந்தது).

நாட்டின் மூன்று முக்கிய எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (இண்டேன்), பாரத் பெட்ரோலியம் (பாரத் கேஸ்) மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் (எச்பி கேஸ்) ஆகியவை புதிய விதிகளை மே 1 முதல் அமல்படுத்த முடிவு செய்துள்ளன.

அதன்படி, மே 1 முதல் சிலிண்டர் முன்பதிவுகளுக்கு இடையிலான இடைவெளி நகர்ப்புறங்களில் 21 நாள்களில் இருந்து 25 நாள்களாகவும், கிராமப்புறங்களில் 45 நாள்கள் வரையிலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட இடைவெளி முடிவதற்குள் செய்யப்படும் எந்தவொரு முன்பதிவையும் கணினி முன்பதிவு செய்யாது.

மேலும், புதிய வழிகாட்டுதல்களின் கீழ், விநியோக அங்கீகாரக் குறியீடு (டிஏசி) மாற்ற முடியாததாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் இனிமேல் தங்களின் நீல நிற புத்தகம் அல்லது ரசீதைக் காண்பித்து மட்டும் சிலிண்டர்களைப் பெற முடியாது. சிலிண்டர் நிரப்ப முன்பதிவு செய்யும்போது, ​​வாடிக்கையாளரின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு கடவுச்சொல் அனுப்பப்படும்.

Summary

Commercial LPG Prices Hiked By Rs 993 Amid War, Petrol, Diesel Rates Steady

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.