Enable Javscript for better performance
புத்தரிடம் ஞானம் பெற்றவன்- Dinamani

சுடச்சுட

  

  புத்தரிடம் ஞானம் பெற்றவன்

  By உமா ஷக்தி  |   Published on : 25th July 2016 12:19 PM  |   அ+அ அ-   |    |  

  கெளதம புத்தர் வாழ்ந்த காலகட்டத்தில் ஒருவன் மிகவும் கோபக்காரனாகவும் வன்முறையாளனாகவும் இருந்தான். அவன் ஆயிரம் பேரைக் கொன்று அவர்கள் தலைகளை வெட்டுவேன் என்று சபதம் எடுத்திருந்தான். எண்ணிக்கை தெரிவதற்காக கொன்ற மனிதர்களின் கட்டை விரல்களை வெட்டி மாலையாக்கிக் கழுத்தில் அணிந்திருந்தான்.

  அதுவே அங்குலிமால் (விரல்களை மாலையாய் அணிபவன்) என்ற பெயராகிவிட்டது. அவன் திசைக்கே யாரும் வருவதில்லை. அவனது பாதையை எவரும் பயன்படுத்துவதுமில்லை. அங்குலிமால் ராஜா பிரஜெஞீதாவின் அரசினுள் இருந்தான். கெளதம புத்தர் பிரஜெஞீதாவின் ராஜ்ஜியத்திலிருந்து வேறொரு நாட்டிற்குச் செல்லப் பயணப்பட்டார். அவரது சீடர்கள் ‘அங்குலிமாலிக் மாலைக்கு இன்னும் ஒரே விரல்தான் தேவை. தாயாக இருந்தாலும் வெட்டத் தயங்காதவன். போக வேண்டாம்’ என்று தடுத்தார்கள்.

  கௌதம புத்தர், “நீங்கள் என்னிடம் இதை சொல்லியிருக்காவிட்டால் நான் பாதையை மாற்றி போயிருக்க கூடும். ஆனால் இப்போது அது சாத்தியமில்லை. ஏனெனில் அந்த மனிதனுக்கு இன்னும் ஒரே ஒரு விரல்தான் வேண்டும், இன்னும் ஒரே ஒரு தலையை தான் வெட்ட வேண்டும். ஆனால் யாரும் கிடைக்காமல் சிரமப் பட்டுக் கொண்டிருக்கிறான். என்னிடம் ஒரு தலை உள்ளது, பத்து விரல்கள் இருக்கிறது. இப்படி யாருமே இந்த வழியில் போகாமல் இருந்தால் பாவம் அவனால் எப்படி தனது சபதத்தை பூர்த்தி செய்ய முடியும்? நான் போகப் போகிறேன். நானே போக வில்லையென்றால் வேறு யார்  போவார்கள்?” என்று சொல்லிவிட்டு நடந்தார். அவரைப் பார்த்ததுமே அங்குலிமால் தனது கத்தியைக் கூராக்கிக் கொண்டான்.

  ஆனால் அவரது அழகை, அமைதியை, அன்பை, கருணையைக் கண்டு தயங்கினான்.

  ‘இவரைக் கொல்லக் கூடாது. இவரைப் போன்றவர்கள் உலகிற்குத் தேவை. கொல்லக்கூடாது’ என்று கருதி, ‘உங்களைக் கொல்லத் தூண்டாதீர்கள், திரும்பி விடுங்கள்’ என்று கத்தினான்.

  அதற்கு புத்தர், ‘நான் முப்பது வருடங்களுக்கு முன்பே நகர்வதை நிறுத்தி விட்டேன். மனம் நகர்வதை நிறுத்திய கணமே எனது அசைவுகளும் நின்று விட்டன. ஆசைதான் ஆட்டுவிக்கிறது. என்னிடம் ஆசை கிடையாது. எப்படி நகர முடியும்? உன்னுடைய மனதில் ஆசைகள் இருப்பதால் தூக்கத்தில் கூட நகர்ந்து கொண்டே இருக்கிறாய். ஆகவே நீதான் நிற்க வேண்டும்.

  அதற்கு அங்குலிமால், ‘நீங்கள் அழகும் ஒளியும் இருந்தாலும் பித்தனாக இருக்கிறீர்களே, நான் நின்று கொண்டிருக்கிறேன், நீங்கள் நகர்ந்து வந்து கொண்டிருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் நின்று கொண்டிருப்பதாகவும் நான் நகர்ந்து கொண்டிருப்பதாகவும் எப்படி கூறலாம்? என் கையில் உள்ள வாள் உங்களை வெட்டிவிடும், ஓடிவிடுங்கள்’ என்று கத்தினான்.

  மேலும் அவர் அங்குலிமாலை நெருங்கி வந்து கொண்டே இருந்தார். இறுதியில் அவர் அவன் முன்னால் வந்து நின்று அங்குலிமாலிடம், “நீ எனது தலையை வெட்ட விரும்பினால் வெட்டிக் கொள். உண்மையில் நான் உனக்காகவே வந்தேன். ஒரே ஒரு தலையை வெட்டுவதற்காக நீ வருடக்கணக்கில் காத்துக் கொண்டிருக்கிறாய் என கேள்விப்பட்டேன். இது மிகவும் அதிகம். யாராவது உன்னிடம் கருணை காட்ட வேண்டும். நான் இந்த தலையை உபயோகிப்பதில்லை, இந்த உடலால் வாழவில்லை. என்னால் இந்த உடல் இன்றியும் வாழ முடியும். உடனே என் தலையை எடுத்துக் கொள். என்னுடைய விரலையும் வெட்டிக் கொள். என்ன வேண்டுமானாலும் செய்து கொள்………ஆனால்அதற்குமுன் என் ஆசையை நிறைவேற்றி வைப்பாயா?’ என்றார்.

  அங்குலிமால் சரி என்றான்.

  புத்தர், ‘இந்த மரக்கிளையை வெட்டு’ என்றார்.

  புத்தர், ‘இது ஆசையின் ஒரு பாதிதான். திரும்பவும் அதை அம்மரத்திலேயே ஒட்ட வைப்பது ஆசையின் மறு பாதி. நீ அதைச் செய்து காட்டு’ என்றார்.

  அங்குலிமால், ‘அது எப்படி முடியும்?’ என்றான்.

  ‘உன்னால் ஒட்ட வைக்க முடியாதபோது வெட்டுவதற்கு என்ன உரிமை உள்ளது? உனக்குத் துணிச்சலும் புத்திசாலித்தனமும் இருக்குமானால் அதை ஒட்ட வை. அதுதான் உன்னை வீரனாக நிரூபிக்கும்’ என்றார் புத்தர்.

  ‘அது இயலாத காரியம்’ என்றான் அவன்.

  ‘அப்படியானால் உன் கழுத்தில் கிடக்கும் 999 விரல்களின் மாலையைக் கழற்றி எறி. வாளையும் எறி. இவை கோழைகளுக்கானவை. உன்னை உண்மையான வீரனாகக்குகிறேன்’ என்றார் புத்தர்.

  அங்குலிமால் அக்கணமே வாளையும், விரல் மாலையினையும் விட்டெறிந்து விட்டு, புத்தரின் காலடியில் விழுந்து, ‘எனக்கு தீட்சை தாருங்கள். நான் கெளதம புத்தரைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். இப்போது என் எதிரில் இருப்பது புத்தரே என்று உணர முடிகிறது’ என்றான்.

  புத்தர் அங்குலிமாலுக்குத் தீட்சை கொடுத்தார்.

  Love-changes.jpg 

  அடுத்த நாள் அரசன் பிரஜென்ஜீதா புத்தரைப் பார்க்க உடைவாளுடன் வந்தான். ‘ஞானியின் சொற்பொழிவைக் கேட்க உடைவாளுடன் வர வேண்டிய அவசியமில்லை என்றார் புத்தர்.

  அதற்கு பிரஜென்ஜீதா, ‘நீங்கள் அங்குலிமாலுக்குத் தீட்சை கொடுத்திருப்பதைக் கேள்விப்பட்டுதான் வாளுடன் வந்தேன்’ என்றான்.

  புத்தர், ‘வாளுக்கு இங்கே வேலையில்லை. அங்குலிமால் இப்போது சன்னியாசி, இவன் தான் அங்குலிமால்!’ என்றார்.

  அங்குலிமால் என்ற பெயரைக் கேட்டவுடனே பிரஜென்ஜீதா வாளை உருவினான்.

  ‘நான் அங்குலிமாலாக இருந்த போது வாளை உருவியிருக்க வேண்டும். நான் இப்போது ஒரு சன்னியாசி. வாளை உறையினுள் வை’ என்றான் அங்குலிமால்.

  பின்னர் ‘அங்குலிமால்! நீ பிச்சையெடுக்கப் போகும் போது எது வேண்டுமானாலும் நடக்கலாம். எந்த கதவும் திறக்காமல் போகலாம். மக்களால் பழி தீர்க்கப்படலாம். ஆனால் அப்போதும் நீ ஒரு சன்னியாசி என்பதை நிரூபித்தாக வேண்டும்’ என்றார் புத்தர். அதன்படி அங்குலிமால் பிச்சை எடுக்கச் சென்றபோது யாரும் அவனுக்கு உணவிடவில்லை.

  மக்கள் தங்களது வீட்டின் மாடியில், கூரையில் நின்று கொண்டு அவன் மேல் கற்களை வீசினார்கள். – நெருங்கி வர பயந்து கொண்டு தூரத்தில் இருந்த படியே மாடியில் கூரையில் நின்றபடி அவன் மேல் கற்களை மழையாக பொழிந்தனர். இறுதியில் அங்குலிமால் தெருவில் வீழ்ந்த பின்னும் அவர்கள் அவன் மேல் கற்களை வீசிக் கொண்டே இருந்தனர். அவன் உடல் முழுவதும் ரத்தகாயமாக இருந்தது.

  புத்தர் அவனை நெருங்கி வந்த போது அவன் கற்களால் மூடப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தான். அவனை அந்த கற்களிலிருந்து வெளியே இழுத்த போது அவன் தனது கடைசி நிமிடங்களில் இருந்தான். புத்தர், “அங்குலிமால், நீ ஒரு சன்னியாசி என்பதை நிரூபித்து விட்டாய். ஒரு வினாடியில் ஒரு பாவி துறவியாக முடியும் என்பதை நீ நிரூபித்து விட்டாய். நீ ஒரு பாவியாக வாழ்ந்தாய். ஆனால் ஒரு துறவியாக இறக்கிறாய்” என்றார்.

  அங்குலிமால் புத்தரின் பாதங்களைத் தொட்ட வண்ணம் உயிரை விட்டான்.

  (நன்றி – பிரணாயாமம் வள்ளலார் சிறப்பிதழ்)

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  kattana sevai