பெற்றோருக்கு பிரபு தேவாவின் அன்புப்பரிசு!

'வீடெனப்படுவது யாதெனில் அது பிரியம் சமைக்கிற கூடு' என்று கவிஞர் ஒருவர் கூறினார்; அதற்கேற்ப இந்த வீடு பிரபுதேவாவின் அன்பை உலகறிய வைக்கும்.
பெற்றோருக்கு பிரபு தேவாவின் அன்புப்பரிசு!

பிள்ளைகள் தங்களது அப்பா அம்மாவுக்கு என்னென்ன விதமான பரிசுகள் தரலாம்? இதற்கென்று தனி லிஸ்ட் எல்லாம் இல்லை. வானத்துக்கு கீழே உள்ள எதையும் அதன் மதிப்பு ஒரே ஒரு ரூபாய் தான் என்றாலும் கூட பாசத்திற்குரிய பிள்ளைகள் தந்தால் பெற்றோருக்கு அது மிகப்பெரிய சந்தோசமே! வாய்ப்புக்கு கிடைக்கும் போதெல்லாம் அதைச் சொல்லி சொல்லி மகிழ்வார்கள். எதற்காக இதைச் சொல்கிறேனென்றால் சமீபத்தில் பிரபுதேவா மாஸ்டர் தனது பெற்றோருக்காக மைசூரில் ஒரு அழகான வீட்டைப் பரிசளித்திருக்கிறார். வீடு அழகு தான் அதை விட அழகு அந்தப் பெற்றோரின் முகத்தில் வெளிப்படும் பெருமகிழ்ச்சி!


பிரபுதேவாவின் தந்தை சுந்தரம் மாஸ்டரின் பூர்வீகம் மைசூர். தமிழ் மட்டுமன்றி தெலுகு, கன்னடம், மலையாளம், இந்தி என இந்திய சினிமாக்களில் தனது மகன்கள் வெற்றிகரமாக தலையெடுத்த பின் நடன இயக்கத்தில் இருந்து ஒதுங்க நினைத்த சுந்தரம் மாஸ்டர் தன் மனைவியோடு சொந்த ஊரான மைசூரில் விவசாயம் செய்து கொண்டு அமைதியாக வாழ ஆசைப்பட்டார். அவரது ஆசையை உணர்ந்த பிரபுதேவா அழகான ஒரு வீட்டைக் கட்டி அதில் கோத்ரெஜ் நிறுவனம் மூலம் உள்ளலங்காரங்கள் செய்து தனது பெற்றோருக்கு பரிசளித்துள்ளார்.

மகனின் அன்புப் பரிசான அந்த விசாலமான வீட்டில் சுந்தரம் மாஸ்டர் தம்பதியர் முழு மனநிறைவோடு இருக்கிறார்கள் என்பதற்கு இந்தப் புகைப்படங்களே சாட்சி. வீடு என்றால் அது வெறும் வீடு மட்டுமல்ல. 'வீடெனப்படுவது யாதெனில் அது பிரியம் சமைக்கிற கூடு' என்று கவிஞர் ஒருவர் கூறினார் ; அதற்கேற்ப இந்த வீடு பிரபுதேவாவின் அன்பை உலகறிய வைக்கும்.

புகைப்படத்தில் வீட்டைப் பார்த்தீர்களா? வீடு பிரமாண்டமாக இருப்பது முக்கியமில்லை, அதில் இருக்கப் போகிறவர்களுக்கு மனநிறைவைத் தரும்படியாக சவுகர்யமாக இருக்க வேண்டும் என்பதே முக்கியம். அதற்கேற்ப தென்னிந்திய பாரம்பர்யத்துடன் கட்டப்பட்டுள்ள இந்த வீட்டில் காற்றோட்டத்துக்கும் வெளிச்சத்துக்கும் குறைவே இல்லை, சமையலறை நவீன வசதிகளோடு விசாலமாக இருப்பது சிறப்பு.

வரவேற்பறை மற்றும் படுக்கை அறைகளில் புதிதாகப் போடப்பட்ட அலங்கார மேஜைகள் அன்னப்பறவை வடிவொத்த நாற்காலிகள் முதற்கொண்டு கட்டில்கள் வரை பளபளப்பு குறையாது வசீகரிக்கின்றன. வீட்டைப் பொறுத்தவரை எங்கும் எதிலும் தன் பெற்றோரின் வசதியே முக்கியம் என பிரபுதேவா தீர்மானித்ததால் பிரமாண்டத்தை விட  அவரது அன்பே பிரதானமாய் தெரிந்தது. வீட்டிலிருக்கும் ஒவ்வொரு வினாடியும் உற்சாகமாய் உணர வைப்பதாய் அந்த வீடு பார்ப்போர் கண்களை நிறைக்கிறது.

இந்திய சினிமாவின் பிரபலமான நடன இயக்குனர், தமிழ், தெலுங்கு, இந்தி சினிமாக்களின்  மோஸ்ட் வான்டட் திரைப்பட இயக்குனர், தென்னக மைக்கேல் ஜாக்சன் எனும் பாராட்டுக்கள் எல்லாவற்றையும் சற்றே  தூரத்தில் நிறுத்தி பெற்றோருடன் நேரம் செலவழிக்கும் இந்த அன்பான மகனை எத்தனை பாராட்டினாலும் தகும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com