

வெளியில் சென்று விட்டு திரும்பி வரும்போது காலை நன்றாக கழுவி சுத்தப்படுத்திய பின்னரே வீட்டுக்குள் நுழைவோம். இதற்குக் காரணம் கால் வழியாக கிருமிகள் அழுக்கு தூசி எதுவும் பரவாமல் இருக்கத்தான். கால்பாதங்கள் மென்மையாகவும் ஆரோக்கியமாகவும் இருந்தால் தான் நம்முடைய உடல் ஆரோக்கியமும் நலமாக இருக்கும். முகம் மட்டும் அழகாக இருந்தால் போதாது, உடல் முழுவதும் அப்படியிருக்கவேண்டும். குறிப்பாக கால் பாதங்கள் தான் நோய்களுக்கு உடனடி நுழைவாயில் எனவே அலட்சியப்படுத்தாமல் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அதை நன்றாக பராமரிப்பது அவசியம். தில்லி ஸ்கின் கேர் இயக்குனர் காஸ்மெடிக் டெர்மடாலஜிஸ்ட் மேக்னா குப்தா சொல்லும் சில வழிமுறைகள் :
கால்களில் செருப்பு அணியாமல் எங்கும் செல்ல வேண்டாம். கல், முள், அழுக்கு, தூசி போன்றவை கால்களை பதம் பார்த்துவிடும். நாம் நடக்கும் போது உடல் எடையின் பெரும் பகுதியைத் தாங்குவது நம் பாதங்கள் தான். எனவே நல்ல காலணிகளை நம் காலுக்கு ஏற்ற மென்மையான தோல் கொண்ட செருப்புகளையே பயன்படுத்த வேண்டும்.
நல்ல காற்றோட்டமான காலணிகள் அணிய வேண்டும். அப்போதுதான் பாதத்தில் புண் அல்லது வெடிப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படாமல் தவிர்க்கலாம். குதிகால் செருப்புக்களை தினசரி பயன்படுத்தக் கூடாது. ஹை ஹீல்ஸ் தொடர்ந்து பயன்படுத்தினால் அடிக்கடி கால்வலி ஏற்படும்.
காலையில் எழுந்தவுடன் அல்லது இரவு எதாவது ஒரு வேளையில் வெதுவெதுப்பான நீரில் பாதங்களை நனைக்கவும். அது புத்துணர்வைத் தருவதோடு பாதங்களில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.
காலில் ஃபங்கஸ் தொற்று இருந்தால் அதை ஆரம்பத்திலேயே கண்டு பிடித்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். சரும சிகிச்சை மருத்துவரின் பரிந்துரைப்படி சீக்கிரம் அதனை குணப்படுத்த வேண்டும்.
உங்கள் சரும சிகிச்சை மருத்துவர் பரிந்துரைத்த சோப்பைப் பயன்படுத்தி தினமும் கால் பாதங்களை கழுவி சுத்தப்படுத்த வேண்டும். அதன் பின் கால் சருமத்தின் ஈரத்தன்மையைத் தக்க வைக்கும் தகுந்த க்ரீம் அல்லது மாய்ஸ்சரைஸரைப் தடவ வேண்டும். இப்படித் தொடர்ந்து செய்து வந்தால் பாதங்களில் வெடிப்பு ஏற்படாது. பாதங்களில் வெடிப்பு, வறட்சி போன்ற பிரச்னைகளுக்குக் காரணம் ஈரத்தன்மை இல்லாமல் வரண்டு போவதுதான். எனவே இதைத் தவிர்க்க AHA உள்ள மாய்ஸ்சரைஸர்கள் அல்லது லாக்டிக் ஆசிட் பயன்படுத்தலாம்.
கால் நகங்களை ஒட்ட வெட்டவேண்டும். இதனால் அப்பகுதியில் அழுக்கு சேராமல் தவிர்க்கலாம். வாரம் ஒரு முறை நகங்களை நன்றாக வெட்டி, அதன் கீழ் இருக்கும் அழுக்குகளை அகற்றலாம். நகத்தின் ஓரங்களில் பின் அல்லது ஊசியை வைத்து சுத்தம் செய்வதைத் தவிர்க்கவும். ஸ்க்ரப்பர் அல்லது காட்டன் துண்டின் முனையை வெதுவெதுப்பான நீரில் நனைத்து பாதங்களை மற்றும் நகத்தின் அடிப்பகுதிகளை சுத்தமாக்க வேண்டும்.
நகத்துக்கு அடர் நிறத்தில் நெயில் பாலிஷ் போடுவதால் நகங்கள் மஞ்சளாக மாறி விடும். அதனால் நெயில் பாலிஷ் போடுவதற்கு முன் நெயில் பேஸ் போட்டு பாலிஷ் போட வேண்டும்.
கால் பாதங்களில் வெடிப்பு இருந்தால் அது உடலில் நீர்ச் சத்து குறைவாக இருப்பதற்கான அறிகுறி. எனவே தினமும் போதிய அளவு தண்ணீர் குடிக்கவேண்டும். நிறைய பழங்கள் காய்கறிகளையும் சாப்பிட வேண்டும். காபி டீ போன்ற பழக்கங்களைக் குறைத்துக் கொள்ள வேண்டும். மது அருந்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
சொரசொரப்பான பாதங்கள் ஆரோக்கியத்துக்கு மட்டுமன்றி அழகுக்கும் கேடு. தினமும் பார்லர் சென்று தான் கால் பாதங்களை அழகுபடுத்தவேண்டும் என்பதில்லை. வீட்டிலே ப்யூமிங் ஸ்டோன், சிறிய ப்ரஷ் மற்றும் ஃபுட் கேர் க்ரீம்களைப் பயன்படுத்தி சுத்தம் செய்து கொள்ளலாம். கால் விரல் நகத்தின் ஓரத்தில் மண் நிறைந்து விட்டால் நல்லெண்ணெயை ஒரு விளக்கில் ஏற்றி வைத்து ஒரு தீக்குச்சியை அந்த நல்லெண்ணெயில் வைத்து அந்த விளக்கின் திரியில் சூடு செய்து அந்த விரல் நகத்தின் ஓரங்களில் தடவவும். 2 அல்லது 3 முறை செய்தபின் அதில் உள்ள அழுக்கு எல்லாம் வந்து விடும்.
பாதம் பராமரிப்புக்கு ஒரு எளிய மருத்துவம். பொடித்த ஓட்ஸ் இரண்டு டீஸ்பூன் எடுத்துக் கொள்ளவும். ½ ஸ்பூன் தேன், ½ ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து எல்லாவற்றையும் ஒன்றாக கெட்டியாகக் கலக்கவும். அதன் பின் கால் பாதங்களில் தடவி அரை மணி நேரம் ஊற வைக்கவும். அதன் பின் நன்றாக கழுவி சுத்தப்படுத்தி மாய்ஸ்ரைஸர் கீரீம் தடவவும்.
வாரத்தில் மூன்று நாட்களாவது இரவில் படுக்கப்போவதற்கு முன்பு ஒரு பாத்திரத்தில் சூடு தாங்கும் அளவு வெந்நீர், உப்பு, எலுமிச்சைச்சாறு, பேபி ஷாம்பு போட்டு பாதங்களை 5 முதல் 10 நிமிடங்கள் வரை ஊற வைத்து பிறகு பழைய டூத்பிரஷ்ஷால் பாதத்தை நன்றாக சுத்தம் செய்யவும். பிறகு பாதங்களை ஈரம்போக ஒரு மெல்லிய டவலால் துடைத்து நல்லெண்ணெயை லேசாக சூடு செய்து காலில் தடவலாம்.
குளிர்காலங்களில் சாக்ஸ் அணிவது நல்லது. நல்ல காட்டன் சாக்ஸ்களையே பயன்படுத்தவேண்டும். உட்புறம் எதாவது கூரான துகள்கள் சிக்கியுள்ளதா என்பதை பரிசோதனை செய்த பின்னரே பயன்படுத்த வேண்டும். குழந்தைகளுக்கும் சாக்ஸ் அணிவிக்கும் போது மேற்சொன்ன விஷயத்தில் கவனம் கொள்ள வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.