சுடச்சுட

  

  சென்னையில் திருவையாறு: இசை சங்கமம்!

  By கார்த்திகா வாசுதேவன்  |   Published on : 19th December 2016 01:02 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  chennaiyil_thiruvaiyaru

  பன்னிரெண்டாவது ஆண்டாக 500-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்கும் "சென்னையில் திருவையாறு' இசை விழா ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது.
  இதுகுறித்து லஷ்மண்ஸ்ருதி இசைக்குழு இயக்குநர்களில் ஒருவரும், விழா அமைப்பாளருமான வி.லட்சுமணன், பாடகி ஷோபா சந்திரசேகர், கர்நாடக இசைக் கலைஞர் அருணா சாய்ராம் ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
  பன்னிரெண்டாவது ஆண்டாக நடைபெறவிருக்கும் "சென்னையில் திருவையாறு' இசை விழா ஞாயிற்றுக்கிழமை (டிச. 18) காமராஜர் அரங்கில் தொடங்குகிறது. காலை 11 மணிக்கு, திருப்பாம்புரம் டி.எஸ்.எச்.ராமநாதனின் நாதஸ்வர இசை நிகழ்ச்சியுடன் தொடங்கி, மதியம் 2 மணிக்கு பி.எஸ்.நாராயணசாமி தலைமையில் 500- க்கும் மேற்பட்ட கலைஞர்கள் ஒரே மேடையில் பஞ்சரத்ன கீர்த்தனைகளை ஒன்றாக சேர்ந்து பாடுகின்றனர்.
  இதைத் தொடர்ந்து, மாலை 3.30 மணிக்கு "சென்னையில் திருவையாறு' இசை விழாவை கர்நாடக இசைக் கலைஞர் வாணி ஜெய்ராம் முறைப்படி தொடங்கி வைக்கிறார். தொடக்க விழாவின் சிறப்பம்சமாக, "சென்னையில் திருவையாறு' அமைப்பின் சார்பாக தலைசிறந்து விளங்கும் கலைஞர் ஒருவருக்கு விருது வழங்கப்படும். இசைச் சேவை, வாழ்நாள் சாதனையை பாராட்டும் விதமாக "இசை ஆழ்வார்' என்ற கௌரவ விருதும், தங்கப்பதக்கமும், நிகழாண்டு வயலின் இசைக் கலைஞர் எல்.சுப்பிரமணியத்துக்கு வழங்கப்படுகிறது.
  மாலை 4.45 மணிக்கு அவரின் வயலின் இசை நிகழ்ச்சியோடு, இசை விழா நிகழ்வுகள் தொடங்கி, இரவு 7.30 மணிக்கு ஷோபனாவின் பரதநாட்டிய நிகழ்ச்சியுடன் முதல் நாள் விழா நிறைவு பெறும்.
  டிசம்பர் 25-ஆம் தேதி வரை தொடர்ந்து எட்டு நாள்கள் விழா நடைபெறுகிறது. டிசம்பர் 19-ஆம் தேதி முதல் காலை 7 மணி தொடங்கி இரவு 10 மணி வரை நிகழ்ச்சிகளை கண்டுகளிக்கலாம். நாள்தோறும் எட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இசை விழாவுடன் இணைந்து பிரம்மாண்டமான உணவு திருவிழா நடைபெறும்.
  எம்.எஸ்.சுப்புலட்சுமியின் நூற்றாண்டை முன்னிட்டும், எம்.ஜி.ஆரின் நூற்றாண்டை முன்னிட்டும் இருவரது மெழுகுச் சிலைகள் லண்டன் வேக்ஸ் அருங்காட்சியத்தில் உள்ளதை போன்று அமைக்கப்படுகிறது.
  இந்தத் திருவுருவச் சிலைகளுடன் பொது மக்கள் புகைப்படம் எடுத்துக் கொள்வதற்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்தச் சிலைகளை இயக்குநர் பாரதிராஜா திறந்து வைக்கிறார். அரங்கில் 30 அடி உயரமுள்ள மாயா பஜார் கடோத்கஜனின் பிரம்மாண்டமான சிலையும், உணவுத் திருவிழாவில் அமைக்கப்படும்.
  இசை ரசிகர்களுக்கான இலவச இரவுப் பேருந்து, முதியவர்களுக்கு முதல் மரியாதை, ரசிகர்களுக்கான அறிவுத் திறன் போட்டியின் மூலம் மெகா பரிசுகள் என பல்வேறு சிறப்பம்சங்கள் விழாவில் இடம்பெறவுள்ளன.
  நாள்தோறும் காலை 7, 8.30, 9.45, 11, பிற்பகல் 1, 2.45 மணி ஆகிய நிகழ்ச்சிகளுக்கு அனுமதி இலவசம். மாலை 4.45, இரவு 7.30 மணி ஆகிய நிகழ்ச்சிகளுக்கு மட்டும் நுழைவுச் சீட்டு விற்பனை நடைபெறும் என்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai