ஹமீர் கல்யாணியில் கம்பராமாயணம்!

கம்பராமாயணத்தை சாகித்யம்போல இவர் பாடுகிறாரே என்கிற வியப்பு அடங்கவே சற்று நேரமாயிற்று. அவ்வளவு அற்புதமாக கம்பராமாயணப் பாடலை ஹமீர் கல்யாணி ராகத்தில் மெட்டமைத்திருக்கிறார்கள்.
ஹமீர் கல்யாணியில் கம்பராமாயணம்!

நாரத கான சபா சிற்றரங்கத்தில் கடந்த வியாழக்கிழமையன்று காலை 8.30 மணி கச்சேரி சுபா கணேசனுடயது. மீரா சிவராமகிருஷ்ணன் வயலின், குருராகவேந்திரா மிருதங்கம்.

சுபா கணேசன் எம்.எல். வசந்தகுமாரியின் கடைக்குட்டி சீடர். இப்போது டி.என். சேஷகோபாலனிடம் தனது சங்கீதத்தை மேலும் மெருகேற்றிக் கொண்டிருக்கிறார். இவர் நல்ல இசைக் கலைஞர் மட்டுமல்ல, தேர்ந்த இசை ஆச்சார்யரும்கூட. நூற்றுக்கணக்கான இளம் கலைஞர்களை சங்கீதத்தில் தயார் செய்து கொண்டிருக்கிறார்.

சுவாமி உன்னை என்கிற பாபநாசம் சிவனின் ஆரபி ராக வர்ணத்துடன் தொடங்கியது இவரது நிகழ்ச்சி. தமிழில் வர்ணம் பாடியது ஆச்சரியமாக இருந்தது. காரணம், தமிழில் அதிகமாக வர்ணங்கள் கிடையாது என்பதுதான்.

மார்கழி மாதமாகையால், கேதாரம் ராகத்தில் அமைந்த பாடும் பரஞ்சோதி திருவெம்பாவையை அடுத்து, தர்பார் ராகத்தில் கோடீஸ்வரய்யர் இயற்றிய ஸ்ரீவேணுகோபால. அதற்குப் பிறகு ஓர் ஆச்சரியம் காத்திருந்தது. விஸ்தாரமாக ஹமீர் கல்யாணி ராகத்தை ஆலாபனை செய்துவிட்டு அவர் பாடுவதற்கு எடுத்துக் கொண்டது கம்பராமாயணத்திலிருந்து "அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்' பாடல். இதென்ன கம்பராமாயணத்தை சாகித்யம்போல இவர் பாடுகிறாரே என்கிற வியப்பு அடங்கவே சற்று நேரமாயிற்று. அவ்வளவு அற்புதமாக கம்பராமாயணப் பாடலை ஹமீர் கல்யாணி ராகத்தில் மெட்டமைத்திருக்கிறார்கள். கச்சேரி முடிந்து சுபா கணேசனிடம் விசாரித்தபோதுதான் தெரிந்தது, இதுபோல ஐந்நூறுக்கும் மேற்பட்ட கம்பராமாயணப் பாடல்களுக்கு டி.என். சேஷகோபாலன் மெட்டமைத்து வைத்திருக்கிறார் என்பதும் தனது சீடர்களுக்கு கற்றுத் தருகிறார் என்பதும். டி.என். சேஷகோபாலனுக்கு கம்பனின் ரசிகர்களின் சார்பில் கோடானுகோடி நன்றி.

அன்றைய நிகழ்ச்சியில் முக்கியமான ஆலாபனைக்காக சுபா கணேசன் தேர்ந்தெடுத்துக் கொண்ட ராகம் மோஹனம். எம்.எல்.வி.யின் சீடர். டி.என். சேஷகோபாலனால் பட்டை தீட்டப்படுபவர். அவர் ஆலாபனையில் ராக லட்சணங்களை வெளிப்படுத்தும் நேர்த்தி குறித்து சொல்லவா வேண்டும். அப்பழுக்கில்லாத இலக்கண சுத்தமான ஆலாபனை. பாபநாசம் சிவனின் நாராயண திவ்யநாமம்தான் சாகித்யம். "மாரஜனகன் கருணாலயன்' என்கிற இடத்தில் நிரவல் அமைத்துக்கொண்டு கல்பனா ஸ்வரமும் பாடினார்.

தொடர்ந்து சாருகேசி ராகத்தில் அமைந்த "வசன மிகவேற்றி மறவாதே' என்கிற திருப்புகழும், தண்டபாணி தேசிகர் பாடி பிரபலப்படுத்திய பந்துவராளி ராகத்தில் அமைந்த "அள்ளி உண்டிடலாம் வாரீர்' என்கிற பாடலையும் பாடி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

இன்னும்கூட சுபா கணேசன் ஹமீர் கல்யாணியில் இசைத்த கம்பராமாயணப் பாடலை மறக்க முடியவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com