கதக் நடனப் புகழ் மது நட்ராஜ்!

நடனம் என்பது நான் என் தாயின் கருவில் இருந்தபோதே உருவானதாகும்'' என்று கூறும் மது நடராஜ் (44) பிரபல கதக் நடனக் கலைஞர்
கதக் நடனப் புகழ் மது நட்ராஜ்!

"நடனம் என்பது நான் என் தாயின் கருவில் இருந்தபோதே உருவானதாகும்'' என்று கூறும் மது நடராஜ் (44) பிரபல கதக் நடனக் கலைஞர் மாயாராவின் புதல்வியாவார். கூடவே பக்கபலமாக உதவியவர் இவரது உறவினர் சித்ரா வேணுகோபால்.

கதக் நடனத்தை முறையாகக் கற்பதற்கு முன் சிறுமியாக இருந்த மதுவுக்கு ஒருவிதமான பயம் இருந்தாலும், தாயுடன் நிகழ்ச்சிகளுக்குச் செல்லும்போது அவரது நடன அசைவுகளுடன் எழுந்த சலங்கை ஒலியைக் கேட்டபோதுதான் நடனத்தில் ஆர்வம் ஏற்பட்டதாம்.

"நடனம் எப்போது என்னுடைய வாழ்க்கையில் ஓர் அங்கமாயிற்று என்பது எனக்கு நினைவில்லை. என்னுடைய தாயின் நடனப் பயிற்சிகளையும், நிகழ்ச்சிகளையும் பார்க்க அவரது கைகளைப் பிடித்துக்கொண்டு கூடவே சென்ற போதுதான் இந்த நடனம் என்னை வசீகரித்தது மட்டுமின்றி எனக்கோர் அடையாளத்தையும் கொடுத்தது. இருந்தாலும் எனக்கென்று சுதந்திரமான தனித்துவத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டுமென்று தோன்றியது. சில காரணங்களுக்காக நடனத்திலிருந்து விலகியிருக்க நினைத்தேன்.

ஜர்னலிசத்தில் ஆர்வம் காட்டினேன். உடனடியாக ஒரு வேலையைத் தேடவும் விரும்பவில்லை. அம்மாவும் என்னைக் கட்டாயப்படுத்தவில்லை. ஒருநாள் ஒரு புகழ்பெற்ற நடனக் கலைஞரின் நாட்டிய நிகழ்ச்சியைப் பார்க்க வரும்படி அம்மா அழைத்தார். நானும் போயிருந்தேன். நாட்டியத்தைப் பார்க்கும்போது என் மனதிற்குள் ஏதோ ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்தியது. என்னுடைய வாழ்க்கையில் நான் செய்ய வேண்டியது என்ன என்ற எண்ணம் தோன்றியது. அப்போதுதான் நடனம் என் வாழ்க்கையின் ஓர் அங்கம் என்பதை உணர்ந்தேன். இப்போது நடனத்திற்காகவே என்னுடைய நேரத்தைச் செலவழிக்கிறேன்'' என்கிறார் மது நடராஜ்.

நியூயார்க் சென்ற மது, இந்திய நடனத்துடன் சமகாலத்திய நடனங்களில் பயிற்சி பெற்றார். இந்தியா திரும்பியதும் இந்திய நடனங்களுடன், கதக் நடனத்திற்கென்று ஓர் அடையாளத்தையும் புகழையும் ஏற்படுத்தித் தந்த தனது தாயார் நடனத்துடன் மேல்நாட்டு நடனத்தையும் இணைத்து கதக் நடனத்திற்கு ஒரு புதிய வடிவத்தைக் கொடுத்தார் மது.

1995-ஆம் ஆண்டு நாட்டியா ஸ்டெம் (ஸ்பேஸ் டைம் எனர்ஜி மூவ்மெண்ட்) என்ற நடனக் குழுவை உருவாக்கி, பெங்களூரில் 45 ஆண்டுகள் பழமை வாய்ந்த கதக் நாட்டியப் பள்ளியுடன் இணைத்தார் மது.

'பெங்களூரில் இந்திய நடனங்களுடன் சமகால நடனங்களையும் இணைத்து நடனக் குழுவை உருவாக்கியபோது, இதுபோன்று வேறு நடனக் குழுவினர் யாரும் இல்லை. எதற்காக இந்திய நடனங்களுடன் மேற்கத்திய நடனங்களை இணைக்க வேண்டும் என்ற கேள்வியை சிலர் எழுப்பினர். ஆனால், எங்கள் புதுமையான முயற்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. கதக் நடனத்துடன் ஜாஸ், கிராமிய நடனம், மார்ஷல் ஆர்ட்ஸ், யோகா போன்ற கலைஞர்களும் இணையத் தொடங்கினர். எங்களுடைய மாணவர்களும் இந்தப் புதிய நடனக் கலவையை மிகவும் விரும்பிக் கற்றனர். சுமார் 75 வகையான புதுமையான படைப்புகள் உருவாயின. இந்தப் புதுமையான பாடத்திட்டம் அவர்களுக்கு ஆர்வத்தை அதிகரித்தது.

கதக் நடனத்துடன் மார்ஷல் ஆர்ட், யோகா போன்ற கலைகளைக் கற்க மாணவர்கள் விரும்பினர். எங்கள் புதுமை முயற்சிகள் மேலும் தொடர்ந்தன. மாணவர்கள் தாங்களாகவே புதிய தயாரிப்புகளை உருவாக்கினர். இதன் மூலம் பல சமூகக் கருத்துகள் வெளியாயின. இதற்கென்று நாங்கள் மேடைகளைத் தேடுவதில்லை. எந்த இடத்திலும் எங்கு வேண்டுமானாலும் நிகழ்ச்சிகளை நடத்த முற்பட்டோம். எந்தக் கலையாக இருந்தாலும் அவை சமூகம், அரசியல், கலாசாரம் ஆகியவற்றுடன் ஒட்டியிருப்பதால் மக்களிடையே சுலபமாகப் போய்ச் சேரும்'' என்கிறார் மது.

"நடனப் பயிற்சி பெறுவதற்கு முன் அந்த நடனங்களைப் பற்றிய சரித்திரத்தை அறிவது அவசியமாகும். ஏனெனில் அப்போதுதான் ஒரு நடனக் கலைஞரை உங்களால் உருவாக்க முடியும். என் குழந்தைப் பருவத்தில் தாயுடன் இருந்த தருணங்கள் மறக்க முடியாதவை. அவர் எனக்கு தாயாகவும், ஆசிரியராகவும், வழிகாட்டியாகவும் விளங்கியவர். நான் தற்போது செய்து வரும் முயற்சிகள், கதக் நடனக் கலைக்கு அவர் ஆற்றிய சேவைக்கு காணிக்கையாகும்' என்கிறார் மது நடராஜ்.
 

-பூர்ணிமா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com