

ஏர் ஃபிரையரில் வடை சுடலாம், அப்பளம் பொரிக்கலாம், மீன் வறுக்கலாம் என்று விளம்பரங்கள் வந்து கொண்டிருக்கின்றன.
இதெல்லாம் ஏர் ஃபிரையரில் உண்மையாகவே செய்ய முடியுமா? செய்தால் அதே சுவையுடன் வருமா? என்ற சந்தேகம் இருந்தால் ஒரு முறை சிறிய அளவில் செய்து பார்த்துவிட்டு மீண்டும் அதிகளவில் சமைக்கலாம்.
ஏர் ஃபிரையரில் சமையலைத் தொடங்கும் முன்பு, உணவுப் பொருளை சுத்தமான முறையில் தயாரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒருவேளை, ஏர் ஃபிரையரின் டிரே சிறியதாக இருந்து, உணவு அதிகமாக இருந்தால் பகுதி பகுதியாக பிரித்து சமைத்துக் கொள்ளலாம்.
காய்கறி, கோழிக்கறி, பழங்கள் என எதுவாக இருந்தாலும் அனைத்தையும் ஒரு சீரான துண்டுகளாக நறுக்குவது அவசியம். பெரிதும் சிறிதுமாக இல்லாமல் இருப்பது நல்லது.
உணவுப் பொருளை பொறிப்பதாக இருந்தால், டிரேவை தண்ணீரின்றி சுத்தமாக துடைத்துக் கொள்ளலாம்.
வழக்கமாக சமையலுக்குப் பயன்படுத்தும் மசாலாக்களை விட, ஏர் ஃபிரையரில் குறைவாகத் தேவைப்படுவதாகக் கூறப்படுகிறது.
அதுபோல, எண்ணெய் அதிகம் தேவைப்படாது, சில மசாலா பொருள்களுக்கு அந்த கார சுவை மட்டுப்படுத்த மட்டும் எண்ணெய்யை தேய்த்து விடலாம்.
ஒவ்வொரு உணவுக்கும் என தனித்தனி வெப்ப அளவுகள் இருக்கின்றன. சந்தேகம் இருந்தால், குறைவான வெப்ப அளவில் வைத்து சமைத்து பிறகு அதனை அதிகரித்துக் கொள்ளலாம்.
சில ஏர் ஃபிரையர்கள், எந்த உணவு தயாரிக்க வேண்டும் என்பதை தேர்வு செய்துவிட்டாலே வெப்ப அளவை அதுவே செட் செய்துவிடும். அதில் தேவைப்பட்டால் மாற்றமும் செய்து கொள்ளலாம்.
சமைப்பதற்கு முன்பு, ஏர் ஃபிரையரை தனியாக சூடுபடுத்துவது அவசியம். சில ஏர் ஃபிரையர்களில் ப்ரீ ஹீட் பட்டன்கள் இருக்கும். இல்லாவிட்டால், 400 டிகிரி ஃபாரன்ஹீட்டில் வைத்து ஒரு 5 நிமிடங்கள் சூடுபடுத்தலாம்.
ஒரே நேரத்தில் அதிகளவில் சமைக்க முற்பட வேண்டாம். நாலா பக்கத்திலிருந்தும் உணவு மீது வெப்பம் விழ வேண்டும். எனவே ஒன்றன் மீது ஒன்று அடுக்கியிருந்தால் வேகும் நிலை மாறுபடும்.
ஏர் ஃபிரையரில் வைக்கும் உணவுப் பொருளை இடையில் எடுத்து திருப்பி வைக்கலாம்.
நேரம் முடிந்து ஏர் ஃபிரையர் அணைந்துவிட்டால் ஒரு சில நிமிடங்கள் கழித்து அதிலிருந்து உணவை எடுக்கலாம்.
சுடாக இருக்கும் உணவுப் பொருளை திருப்பவும் எடுக்கவும் அதற்கென இருக்கும் இடுக்கிகளைப் பயன்படுத்தலாம்.
இறுதியாக சுத்தப்படுத்துவதுதான் முக்கியம். சூடு முற்றிலும் குறைந்த பிறகு, ஏர் ஃபிரையரை தூய்மைப்படுத்தலாம். இளஞ்சூடான தண்ணீரில் சோப்புத் தண்ணீரைப் பயன்படுத்தி டவல் போன்றவற்றால் துடைத்து எடுக்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.