சுடச்சுட

  

  ‘டுலெட்’ டுக்கு டூ லேட்டாக ஒரு திரை விமர்சனம்!

  By கார்த்திகா வாசுதேவன்  |   Published on : 19th April 2019 05:42 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  cheziyan

   

  ஒரு நல்ல சாப்பாட்டுக்குப் பிறகான திருப்தி...

  ஒரு நல்ல புத்தகம் வாசித்த பின் நீடிக்கும் அலாதியான அமைதி...

  மனதுக்குகந்த நண்பர்களுடனான மிதமான அரட்டை தரும் ரிலாக்ஸ்!

  எல்லாம் கலந்த கலவையாக இருந்தது டுலெட் பார்த்த பின் மனதில் தோன்றிய உணர்வுகள்!

  மிக அருமையான திரைப்படம். படத்தில் எதைப் பாராட்ட? எதை விட? என்றே தெரியவில்லை.

  படம் பார்க்கும் போது அது யாரோ ஒருவருடைய வாழ்க்கையாக நம்மைக் கடந்து சென்று விடாமல் நாமே அந்தக் கதாபாத்திரங்களாக வாழ்வதான ஒரு அனுபவம் கிடைக்கிறது. அதுவே அந்தப் படத்திற்கான, படைப்புக்கான வெற்றி!

  நடிகர்களுக்கான தேர்வும் கூட அவ்வளவு பாந்தமாகப் பொருந்திப் போகிறது. ஷீலா ராஜ்குமார், ஸ்ரீராம், வீட்டு ஓனர் பாண்டிலக்‌ஷ்மி, அந்தக் குட்டிப்பையன், வீடு வாடகைக்குத் தரத் தயாராகும் சந்த்லால், என அத்தனை பேருமே இந்தப் படத்தில் வாழ்ந்திருக்கிறார்கள், கூடவே அந்த வீடும், அதன் கதவுகளும், ஜன்னலும், ஸ்கூட்டரும், மொபைல் ரிங் டோனும் கூட!

  கதையென்னவோ சென்னையில் வாடகைக்கு வீடு தேடி அலையும் ஒரு குறுங்குடும்பத்தைப் பற்றியதாக இருக்கலாம். ஆனால், அதை இயக்குனர் எந்த விதத்தில் எத்தனை அழகியலுடன் சொல்லிக் கடக்கிறார் என்பதில் இருக்கிறது படத்தை மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டச் செய்வதற்கான கொக்கி. சென்னையில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுப்பதில் வெறும் வாடகைப்பணமும், அட்வான்ஸும் மட்டுமா முன்னிலை வகிக்கிறது? வாடகைக்கு வீடு தேடுபவர்களின் ஜாதி, அவர்களது உணவுப் பழக்கம், பார்க்கும் வேலை, குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை, முன்னாள் வாடகைக்கு குடியிருந்த வீடுகளை எப்படி வைத்திருந்தார்கள் எனும் கள ஆய்வு, குடும்பத்தலைவன் அல்லது தலைவி வேலை பார்க்கும் நிறுவனத்தின் ஸ்திரத் தன்மை இப்படி எத்தனை எத்தனையோ காரணங்கள் அல்லவா முன்னிலை வகிக்கின்றன. இதையெல்லாம் தாண்டித்தான் வாடகைக்கு வீடு தேடுபவர்கள் தங்களது இலக்கை அடைய வேண்டியதாயிருக்கிறது.

  பிறருக்காவது பரவாயில்லை. எப்படியேனும் வீடு கிடைத்து விடச் சாத்தியம் இருக்கிறது. ஆனால் சினிமா மற்றும் சின்னத்திரையில் இருக்கிறார்கள் பாருங்கள். அவர்களுக்கு வீடு கிடைக்க வேண்டுமானால் ஒன்று அவர்கள் மிக மிகப் பிரபலங்களாக இருந்து தொலைக்க வேண்டும். அல்லது காசைக் கொட்டி அழவாவது திராணி இருக்க வேண்டும். இரண்டுமே இல்லாமல் மிகச் சொற்பமான வருமானத்தில் சினிமாத்துறையில் அன்றாடப் பாட்டுக்கே கஷ்டப் பட்டுகொண்டிருக்கும் லட்சோப லட்சம் குடும்பங்கள் இன்று சென்னையில் இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் டுலெட் ஒரு பாடம்.

  க்ளைமாக்ஸில் புதிய வாடகை வீட்டு ஆசை கை நழுவிப் போகையில் கரைந்து அழும் நாயகியைக் காண்கையில் அங்கே அவளைக் காணோம். நாமும் என்றோ ஒருநாள் இப்படி அழுதவர்கள் தானே என்ற ஆதங்கமே மிஞ்சுகிறது. சென்னையில் வாடகை வீடுகளில் வசிக்கும் ஒவ்வொருவர் இதயத்துள்ளும் அடியாழத்தில் நீரு பூத்த நெருப்பாக கனன்று கொண்டிருக்கிறது சொந்த வீட்டு ஆசை. அந்த ஆசையை நாம் குறைத்து மதிப்பிட்டு விட முடியாது. ஏனெனில் ஆசையே அதை அடைவதற்கான உத்வேகத்தை நமக்குள் பெருகச் செய்வதற்கான முதல் ஸ்க்ரூ. அதைத் திருகிக் கொண்டே இருந்தோமெனில் ஏதாவது ஏதோ ஒரு நாளில், ஏதோ ஒரு கட்டத்தில் நாமும் சொந்த வீட்டுக்காரர்களாக ஆகி விடத்தான் போகிறோம். இதில் வரும் நாயக, நாயகிக்கும் அப்படி நிகழலாம். ஆனால், அந்த நிகழ்வு சாத்தியமாவதற்குள் அவர்கள் பட்டு எழும் துயரம் தான் டுலெட்.

  ஒரு குட்டிப்பையனை ஸ்கூட்டரின் முன் உட்கார வைத்துக் கொண்டு அவனது அம்மாவும், அப்பாவும் படம் முழுக்க வீடு தேடிக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் வீடு கிடைத்தபாடில்லை. வந்தாரை வாழ வைக்கும் நகரம் இப்படிப்பட்டவர்களை மட்டும் வீடெனும் ஒரு அம்சத்தைக் கொண்டு பாடாய்ப்படுத்துகிறது. ஒரு வீட்டைப் பார்த்து அது பிடித்துப் போன பின்பு அதன் உரிமையாளரிடம் இருந்து ஒப்புதல் வரும் வரை நம் மனமும் கையிலிருக்கும் செல்ஃபோனும் படும் பாடு இருக்கிறதே. அதைச் சொல்லில் விளக்கி விட முடியாது. 

  அதே போல வாடகைக்குக் குடியிருப்பவர்களை தூசை விடத் துச்சமாக மதிக்கும் வீட்டு ஓனர்கள்!

  படத்தில் மிகச்சில நிமிடங்களே வந்தாலும் ஒரிஜினல் ஹவுஸ் ஓனராக வாழ்ந்து விட்டுச் சென்றிருக்கிறார் பாண்டிலக்‌ஷ்மி. தேர்ந்த நடிப்பு. இந்தப் பெண்ணை தமிழ் சினிமா இன்னும் கொஞ்சம் அதிமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

  ஷீலா ராஜ்குமாரைப் பற்றி என்ன சொல்ல? அழகிய தமிழ்மகள் நெடுந்தொடரில் நடிக்கும் போதே இந்தப் பெண் என் அம்மாவின் ஆதர்ச நடிகை. அதிலிருந்து விலகியது இதற்காகத் தான் என்றால் நிச்சயம் இவரைப் பாராட்டியே தீரவேண்டும்.

  அந்தக் குட்டிப்பையன் சினிமாச் சிறுவர்களைப் போன்ற அதிகப்பிரசங்கித் தனங்கள் ஏதுமில்லாது நிஜ வாழ்க்கைச் சிறுவர்களின் பிம்பமாக வந்து போவது கூடக் கொஞ்சமல்ல நிறையவே ஆறுதலான விஷயமே!

  நாயகனாக வரும் ஸ்ரீராம் (கவிஞர் விக்ரமாதித்யனின் மகன்)... பாலுமகேந்திராவின் நாயகர்களை நினைவூட்டுகிறார். மிக இயல்பான நடிப்பு.

  இந்தப் படம் குடும்பம், குடும்பமாக தமிழகத்தில் அனைவருமே பார்க்க வேண்டிய திரைப்படங்களில் ஒன்று. தனியார் தொலைக்க்காட்சிகள் உலகத்திலேயே முதன்முறையாக என்று சொல்லி ஒளிபரப்பினாலும் சரி அல்லது தூர்தர்ஷன் ஞாயிறு மாலை ஒளிபரப்பினாலும் சரி தமிழகம் முழுவதுமே சென்று சேரத்தக்க தகுதி கொண்ட திரைப்படங்களில் ஒன்று டுலெட்.

  இதற்கு தேசிய விருது கிடைத்திருக்கா விட்டால் தான் ஆச்சர்யம்!

  இயக்குனர் செழியன் மென்மேலும் இத்தகைய அருமையான திரைப்பட முயற்சியில் இறங்குவாராக! ஹாட்ஸ் ஆஃப் டு யூ செழியன்!

  திரைப்படம்: டுலெட்
  இயக்கம்: செழியன்
  தயாரிப்பு: பிரேமா செழியன்
  நடிகர்கள்: ஷீலா ராஜ்குமார், ஸ்ரீராம், பாண்டிலக்‌ஷ்மி, தருண் பாலா.

  விருதுகள்: 
  படம் இதுவரைக்கும் 25 க்கும் மேற்பட சர்வதேச விருதுகளை அள்ளியிருக்கிறது. அத்துடன் 65 வது சர்வதேசத்திரைப்பட விழாவில் தேசிய அளவில் இந்தியாவின் சிறந்த திரைப்படமாகவும் தேர்வாகியிருக்கிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai