Enable Javscript for better performance
Menka Urvashi Marathi movie review!- Dinamani

சுடச்சுட

  

  மேனகா ஊர்வசி - லாவணி ஆட்டத்தை மையமாகக் கொண்டு வெளிவந்திருக்கும் பீரியட் ஃபிலிம்!

  By கார்த்திகா வாசுதேவன்  |   Published on : 19th June 2019 06:00 PM  |   அ+அ அ-   |    |  

  menka_urvashi_movie

   

  மேனகா ஊர்வசி - திரைப்பட விமர்சனம் (மராத்தி)

  சமீபகாலங்களில் மராத்தி திரைப்படங்களைப் பார்க்கத் தொடங்கி இருக்கிறேன். உபயம், அமேஸான் பிரைம். கொஞ்சம் மேடை நாடகத் தனமான திரைப்படங்களெனத் தோன்றச் செய்த போதும்... நியாயமாகச் சொல்வதென்றால் யதார்த்தமான திரைப்படங்கள் அவை என்பேன். இந்த ‘மேனகா ஊர்வசி’ யைப் பார்க்கும் போதும் அப்படித்தான் உணர்ந்தேன். கதை நம்மூர் பண்ணையார் காலத்துக் கதை. தமிழ்த்திரைப்படங்களில் பண்ணையாரைச் சித்தரிக்கும் வகையில் மராத்தியில் சித்தரிக்கவில்லை என்பது ஆறுதலான விஷயம். 

  து.கா பட்டீல் பிம்பலவாடியின் மிகப்பெரும் செல்வந்தன். ஊருக்குத் தலைவனும் அவனே! அடிப்படையில் அவன் கெட்டவனில்லை. அதற்காக நல்லவனாகவும் அவன் காண்பிக்கப்படவில்லை. அவனது ஆணவத்திற்கான ஆணிவேர் அவனிடம் கொட்டிக் கிடக்கும் பணம் மற்றும் அதிகாரத் திமிரின் மீது சதா முளைத்துத் திளைத்து உறுதி கொள்வதாக இருந்தது. இதனால் தன்னை எதிர்ப்பதற்கு ஒருவரும் இல்லை எனும் இறுமாப்பு அவனை மகாத்திமிர் பிடித்தவனாக வார்த்தெடுக்கிறது. மனைவி நந்தினி மிக மிக நல்லவள். கிராமத்தலைவனின் மனைவி எப்படி இருந்தால் ஊருக்கும், ஊராருக்கும் நல்லதோ அவ்விதமாகவே அவள் இருக்கிறாள். இந்தத் தம்பதியின் ஒரே மகன் காசிநாத்பட்டீல். இந்த சிறுவனின் மீதும், மனைவி நந்தினியின் மீதும் து.கா பட்டீலுக்கு வாஞ்சையும், மதிப்பு கலந்து ப்ரியமும் அதிகம். தனது விஷக் கொடுக்குத் தனத்தை மறைத்து சாந்தமான முகத்தை து கா பட்டீல் காட்ட முனைவது இவர்கள் இருவரிடம் மட்டுமே. மற்றபடி ஒரு கிராமத் தலைவனாக து கா பட்டீல் தன்னிடம் உதவி கேட்டு வரும் வறியவர்களுக்கெல்லாம் இல்லையென்று சொல்லாமல் உதவுகிறான். அதனால் அவன் மீதான மதிப்பும், பயம் கலந்த மரியாதையும் சுற்றுப்பட்டு ஊர் மக்களுக்கு அதிகமாகிக் கொண்டே செல்கிறது.

  இப்படி து கா பட்டீல், தனது அதிகார எல்லைக்குள் ராஜாவாக உலவிக் கொண்டிருக்கும் போது திடீரென முளைத்து வருகிறான் ஒரு நியாயஸ்தன். அவன் வேறு யாருமல்ல, அதே பிம்பலவாடியைச் சார்ந்த தனாஜி தேஷ்முக். தனாஜிக்கு பகுளா என்றொரு அழகான மனைவி உண்டு. அவனும், அவளும் கடுமையான உழைப்பாளிகள். தங்களுக்கெனச் சொந்தமாக அந்த கிராமத்தில் ஒரு குடிசை வீட்டைக் கட்டிக் கொண்டு, வீட்டைச் சுற்றிலும் ஒரு காய்கறித்தோட்டம் போட்டு அதைப் பராமரித்துக் கொண்டு அதில் வரும் வருமானத்தில் அவர்களது வாழ்க்கை மிகச் சுந்தரமாகவும் நிம்மதியாகவும் நகர்ந்து கொண்டிருக்கிறது. 

  இந்நிலையில் பிம்பலவாடிக்கு அந்த சுற்றுவட்டாரத்தின் பிரபலமான லாவணி ஆட்டக்காரி அம்பிகாவாடி குழு வந்து சேர்கிறது. லாவணி என்பது மஹாராஷ்டிரத்தின் பாரம்பர்ய நடன வகைகளில் ஒன்று. இந்த நடனத்தை ஆடுபவரே பாடவும் வேண்டும். கதை சொல்லல் வகையிலான இந்த நாட்டுப்புற நடனம் அங்கு வெகு பிரசித்தம். அதில் கை தேர்ந்தவள் அம்பிகாவாடி. அம்பிகாவாடி பிம்பலவாடிக்குச் சென்று லாவணி ஆடும்போது அவளது ஆட்டத்திற்கு அங்கு மிகச்சிறந்த வரவேற்பு கிடைக்கிறது. இந்த நேரத்தில் தான் து கா பட்டிலீன் எண்ணத்தில் சாத்தான் புகுந்து கொள்கிறான். ஊர்த்தலைவனாக லாவணிக் கலையை மதித்து ஆட்டக்காரிகளை சிறப்பிப்பதற்கு மாறாக அவன் ‘அம்பிகாவாடியை’ தனக்காக மட்டுமென தனியே நடனமாடி சந்தோசப்படுத்த விலை பேசுகிறான். வெறும் லாவணி ஆட்டக்காரி தானே நீ?! எனும் தொனியில் வெகுண்டெழும் அம்பிகாவாடி, து கா பாட்டீலை நோக்கித் தனது சிலம்பை விட்டெறிந்து அவனது விருப்பத்திற்கு உடன்பட மறுத்து விடுவதோடு அவனை, லாவணி பார்க்க வந்த கிராமத்தார் முன்னிலையில் அவமானப்படுத்தி விடுகிறாள். அவளைப் பொருத்தவரை அது அவளது சுயமரியாதையை நிலைக்கச் செய்வதற்கான உபாயமாக இருந்த போதும் து கா பாட்டீலுக்கு மிகப்பெரிய அவமானமாகி விடுகிறது. போதாக்குறைக்கு ‘அம்பிகாவாடி’ க்கு ஆதரவாக லாவணி ஆட்டம் பார்க்க வந்திருந்த தனாஜி தேஷ்முக்கும், பிம்பலவாடி கிராமத்துக் குடிமகனாக ஒரு பெண்ணுக்கு நேர்ந்த அநியாயத்தை நேர் செய்கிறேன் பேர்வழி என்று து க பட்டீலை லாவணி அரங்கில் அவமதித்து விடுவான். உண்மையில் தனாஜி நல்லவன். அவனது நோக்கம், கலைத்திறன் மிக்க ஒரு பெண்ணை செல்வாக்கின் காரணமாக ஒரு பணக்காரன் அதிலும் கிராமத்துத் தலைவன் மோசமாக நடத்தினால் அது மொத்தக் கிராமத்தினருக்குமே அவமானம் என்று கருதியே அவன் அவ்விஷயத்தில் து க பட்டீலைத் தட்டிக் கேட்டது. ஆனால், பட்டீலுக்கு அதெல்லாம் உரைத்து விட்டால் பிறகு அவனும் நல்லவனாகி விடுவானே! அப்படியில்லாமல் இருப்பது தானே இந்தக் கதை உருவாகக் காரணமாகிறது.

  ஆம், அதன் பின்னான நாட்களில் து க பட்டீலுக்கு, தனாஜி மீது கோபமும், வன்மமும் உள்ளுக்குள் கொழுந்து விட்டு எரிகிறது.

  து கா வுக்கு கொண்டிபா, தோண்டிபா என்று வீட்டோடு இரண்டு வேலைக்காரர்கள் உண்டு. அவர்களை மனிதர்களாகக் கூட மதிக்காமல் தான் வேலைக்கு வைத்துக் கொண்டிருந்தான். 

  தனாஜியிடமும், அம்பிகாவாடியிடமும் அவமானப்பட்ட அன்று இரவு வீடு திரும்பிய து கா பட்டீல், கட்டிலில் படுத்துறங்கும் தன் மகனை ஆசையாகத் தடவிக் கொடுத்து நான் ஒரு புலியைப் பெற்றிருக்கிறேன் என்று மனைவியிடம் பெருமை பொங்க உரைக்கிறான். அதைச் சொல்லும் போது கூட மனதில் தனாஜியை ஏதாவது ஒரு வழியில் பழி வாங்கி விடத்துடிக்கும் நச்சு அவன் கண்களில் ஒளிர்ந்துகொண்டு தான் இருந்தது. வேலைக்காரர்கள் வாயிலாக லாவணி அரங்கில் நடந்த விஷயங்களைக் கேள்விப்பட்டு அது குறித்து தன் கணவனிடம் விசாரிக்கும் நந்தினி;

  பாவம்... தனாஜி மிகவும் நல்லவன். அவன் மேல் உங்களுக்கு கோபம் தேவையில்லை. அவனும், அவன் மனைவியும் அவர்களுக்குச் சொந்தமான நிலத்தில் பாடுபட்டு உழைத்துப் பொருளீட்டி வாழ்கிறார்கள். அவர்களை நீங்கள் பகைவர்களாகக் கருதி எதுவும் செய்து விடாதீர்கள். உங்கள் கோபத்திற்குப் பெறுமானமானவர்கள் அல்ல அவர்கள் வெறும் அப்பாவிகள். ஊருக்கு நல்லது என்றால் தனாஜி முதல் ஆளாக வந்து நிற்பான். என்றெல்லாம் பட்டீலிடம் எடுத்துச் சொல்கிறாள் அந்த எளிமையான இல்லத்தரசி.

  இங்கே தனாஜி வீட்டிலும் கூட அவனது மனைவி பகுளா, பட்டீல் இந்த ஊரின் செல்வாக்கு மிக்க மனிதன், நமக்கு ஏதாவது உதவி தேவையென்றாலும் கூட நாம் அவரிடத்தில் தான் போய் நிற்க வேண்டும். அவருடனெல்லாம் நாம் பிணக்கு வைத்துக் கொள்ளலாமா? நம்மால் அவரை எதிர்த்துக் கொண்டு இந்த ஊரில் வாழமுடியுமா? வேண்டாம்... அவருடன் இனி மோதாதீர்கள் என்று கணவனிடத்தில் எடுத்துச் சொல்கிறாள்.

  அப்போது தனாஜி, ‘பிரச்னையே அம்பிகாவாடியை, து கா பட்டீல் அவமதித்ததால் வந்தது... மிக அழகாக, நளினமாக ஆடும் ஒரு பெண்ணை, அவள் திறமையை து கா பட்டீல் துச்சமாக நினைத்தது, பணத்திமிரில் அந்தப் பெண்ணை தனக்கு மட்டுமே தனியாக லாவணி ஆடச் சொல்லி வற்புறுத்தி மிரட்டியதெல்லாம் தவறில்லையா? என்று கேட்க பகுளா அமைதியாகிறாள். அப்போது மனைவிக்கு பொறாமையூட்டும் விதமாக தனாஜி சொல்கிறான்.

  ‘ஹே... என்ன இருந்தாலும் அந்தப் பெண் லாவணி ஆடியது அற்புதமாக இருந்தது. அவளுக்கு மிக அழகான உடற்கட்டு, பேசும் கண்கள், அவளுடைய மூக்கும், உதடுகளும் கூட ஆண்களைக் கட்டி இழுப்பதாக இருந்தது என்று சொல்லி விட்டு மனைவியின் முகத்தை ஏறிட்டான், அவளோ, ஓ அவள் அத்தனை அழகா?! என்று பொறாமையாகக் கேட்கையில்;

  இவனும் மேலும் குறும்புடன், ஆம், என்று விட்டு, பிறகு... அவளிடத்தில் ஒரே ஒரு விஷயத்தை என்னால் காண முடியவில்லை... என்று நிறுத்தினான்.

  பகுளா, அதென்ன என்பது போல கணவனை ஏறிட்டுப் பார்க்க;

  அது, என்னைக் காணும்போதெல்லாம் உன் கண்ணில் ஒரு ஒளி தோன்றுமே, அந்த வெளிச்சத்தை, அந்தக் குளிர்ச்சியை அவள் கண்களில் என்னால் காண முடியவில்லை. அது உன்னிடத்தில் மட்டும் தான் காண முடிகிற விஷயம் என்று முடித்தான்.

  இப்படி இந்த ஏழைத் தம்பதிகள் சந்தோஷமாகவும், ஒருவருக்கொருவர் அன்புடனும் வாழ்ந்து கொண்டிருக்கும் போது; திடீரென ஒருநாள் தனாஜி தன் வண்டி சேற்றில் சிக்கிக் கொள்ள அதை வெளியில் எடுக்க முயன்று கொண்டிருக்கும் நேரத்தில் து கா பட்டீல் தனது வில்வண்டியில் விரைவாக அவனைக் கடக்கிறான். நடுவழியில் தனாஜியைக் கண்டதும், பட்டீலின் வேலைக்காரனான தோண்டிபா, பட்டீல், இவன், இப்படிப்பட்ட நொண்டி மாடுகளையும், துக்கடா வண்டியையும் வைத்துக் கொண்டா உங்களை அப்படி எதிர்த்துப் பேசினான்? எதற்காக நாட்களைத் தள்ளிப்போடுவது? உங்களை அவனால் ஜெயிக்க முடியுமா? இல்லையா? என்பதை இப்போதே பார்த்து விடலாம். வாருங்கள் அவனது வண்டியை சேற்றிலிருந்து வெளியில் எடுத்து அவனுடன் ஒரு பந்தயம் வைத்துப்பார்க்கலாம். நிச்சயமாக அவனது மாடுகள், நம்முடைய மாடுகளிடம் தோற்றுபோய்விடும்’ என்று பட்டீலின் கோபத்துக்கு தூபம் போடுகிறான். இருவருக்கும் ரேக்ளா ரேஸ் நடக்கிறது. நல்லவன் ஜெயிப்பான் ஃபிலாஸபிக்கு ஏற்ப, இதில் தனாஜி வென்று விடுகிறான். து கா பட்டீலின் கோபம் மேலும் கனன்று எரியத் தொடங்குகிறது.

  அதே வேளையில்;

  பகுளா, தன் தோட்டத்தில் விளைந்த முட்டைக்கோஸ்களை எடுத்துச் சென்று பட்டீலின் வீட்டில் கொடுத்து விட்டு பட்டீலின் மனைவி நந்தினியின் ஆசி பெற்று வரச் செல்கிறாள். அப்போது பட்டீல், பகுளாவைப் பார்த்து முறைக்க; நந்தினி அவனிடம், பாருங்கள் இவள் நமது மகளைப் போன்றவள். இவளது கணவனை மன்னித்து விட்டு விடுங்கள். இனியும் கோபம் வேண்டாம் என்று சமாதானப்படுத்தவே; பட்டீலும் உடனே தன் மனைவியிடம் தான் மனம் மாறி விட்டார் போலக் காட்டிக் கொள்ளும் வகையில்...

  அடுத்த நாளில் நம் வீட்டில் நடைபெறவிருக்கும் பூஜையில் கண்டிப்பாக பகுளாவையும், அவளது கணவனையும் நீ அழைக்க வேண்டும் எனத் தன் மனைவிக்கு உத்தரவிடுகிறான் து கா பட்டீல்.

  அங்கு தொடங்குகிறது பகுளாவின் வாழ்வின் இருண்மை.

  ஆம், து கா பட்டீல், விஷ்ணு காலா எனும் வாடகைக் குற்றவாளியிடம் பணம் கொடுத்து தனாஜியின் குடிசை வீட்டை எரிக்கச் சொல்லி உத்தரவிடுகிறான். 

  து கா பட்டீல் வீட்டு பூஜையில் சந்தோஷமாக ஈடுபட்டிருக்கும் தனாஜிக்கு விஷயம் தாமதமாகத் தான் தெரிவிக்கப்படுகிறது. அதிர்ந்து போனவன் உடனடியாக விரைந்து சென்று தன் காளை மாடுகளையாவது காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடுகிறான். அப்போது, அந்த முயற்சியைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் து கா பட்டீல், தனாஜியை நெருப்பில் தள்ளி விட்டு காப்பாற்ற முயற்சி செய்யாமல் அமைதியாக நின்று விட, தனாஜியின் விதி, தீ விபத்தில் சிக்கிக் கொண்டதைப் போல முடித்து வைக்கப்படுகிறது.. உண்மையில் தனாஜியை தீயில் தள்ளியது து கா பட்டீல்.

  ஆள் வைத்து தனாஜியின் மரணத்தை திட்டமிட்டு விட்டு இப்போது அந்த ஆளையும் நம்பமுடியாத நிலை பட்டீலுக்கு. அவன் விஷ்ணு காலாவையும், பணத்தைத் திருடி விட்டதாகச் சொல்லி போலீஸ்காரர்களிடம் பிடித்துக் கொடுத்து விடுகிறான். இதனால் விஷ்ணு காலாவின் கட்டுக்கடங்கா சினத்துக்கு ஆளாகி விடுகிறான். 7 வருடக் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு சிறைச்சாலையில் அடைக்கப்படும் விஷ்ணு காலாவின் ஒரே சபதம், 7 நாட்களில் சிறையிலிருந்து தப்பி வந்து பட்டீலை கொல்வதே என்றாகி விடுகிறது நிலைமை.

  இப்போது விதவையாகிப் போன பகுளாவை, பட்டீலின் மனைவி நந்தினி தன் மகளாக வரித்துக் கொண்டு தன் வீட்டுக்கே அழைத்துச் சென்று தங்க வைத்துக் கொள்கிறாள்.

  நாட்கள் கடக்கின்றன. பட்டீலின் மகன் காசிநாத்துக்கு பகுளா என்றால் உயிர். அவள் சொல்லும் கதைகளுக்கு அவன் ரசிகனாகிப் போகிறான். தினம் இரவுகளில் பகுளாவின் மடியில் கதை கேட்டுக் கொண்டு உறங்குகிறான் காசிநாத். 

  இந்நிலையில் பட்டீலின் மனைவிக்கு, அவளது தந்தை வீடு செல்ல வேண்டிய நிர்பந்தம் நேர்கிறது. அங்கு சுமங்கலி பூஜையில் கலந்து கொள்ளவெனத் தன் மகனை அழைத்துக் கொண்டு நந்தினி தந்தையின் ஊருக்குப் பயணப்படுகிறாள். வீட்டையும், தன் கணவனையும் பகுளா பார்த்துக் கொள்வாள் என்று நிம்மதியாக நந்தினி ஊருக்குப் புறப்படுகிறாள்.

  நந்தினியின் அளவுக்கு பட்டீல் நல்லவன் இல்லையே. அவனுக்கு பகுளாவின் மீது ஒரு கண். இளமையும், அழகுமான அவளை அடையத் துடிக்கும் பட்டீல், மனைவி ஊரில் இல்லாத நிலையைப் பயன்படுத்திக் கொண்டு பகுளாவை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கி விடுகிறான். இதனால் கடும் மன உளைச்சலுக்கும், சுய வெறுப்புக்கும் ஆளாகும் பகுளா, இரவில் பட்டீல் அறியாத வண்ணம் அந்த வீட்டில் இருந்து வெளியேறி காட்டுப்பாதையைக் கடந்து கொண்டிருக்கும் போது சிறையில் இருந்து தப்பி வந்த விஷ்ணு காலாவின் கூட்டத்திடம் மாட்டி மயக்கம் அடைந்து விடுகிறாள்.

  அவளை மயக்கம் தெளியச் செய்யும் விஷ்ணு, பகுளாவின் கதையைக் கேட்டு தன் மீதே வெறுப்பு கொண்டவனாகி, என்னை மன்னித்து விடு சகோதரி, உனது இந்த நிலைக்கு நானும் தான் காரணம். உனக்காக, இறந்த உண் கணவனுக்காக நான் பட்டீலை கொன்றே தீருவேன். இது சத்தியம் என மீண்டும் சபதம் செய்து பட்டீலைக் கொல்லச் செல்கிறான். செல்லுமிடத்தில் அவனால் பட்டீலைக் கொல்ல முடியவில்லை. தப்பி விடுகிறான்.

  இந்நிலையில் துரதிர்ஷ்டவசமாக, பட்டீலால் பாலியல் வன்முறைக்கு ஆளான பகுளா, அவனது குழந்தையைச் சுமக்க வேண்டியவளாகி விடுகிறாள்.

  தான் கர்ப்பவதியானதை எண்ணி அசூயை கொள்ளும் பகுளா, தன்னையும், கருவையும் அழித்து விடச் சொல்லி தனக்கு அடைக்கலம் கொடுத்த விஷ்ணு காலாவின் உறவினப் பெண் ரேணுகாவிடம் மன்றாட, அவளோ;

  ‘வேண்டாம் பகுளா, கடவுள் வேறு ஏதேனும் திட்டங்கள் வைத்திருக்கலாம் உன் வாழ்வில். வேண்டாம், உன் வயிற்றில் இருக்கும் கரு என்ன பாவம் செய்தது? அதை அழிப்பதற்கு? அதை நீ பெற்றுக் கொள். என்று அவளை சமாதானப்படுத்தி குழந்தை பெற்றுக் கொள்ள சம்மதிக்க வைக்கிறாள். ஆனாலும் பகுளாவின் விதி அவளை அத்தனை லேஸில் விட்டு விடுமா?  பிரசவத்தின் போது பலகீனப்பட்டு பகுளா உயிரை விட்டு விடுகிறாள்.

  பகுளா இறந்த செய்தி அறிந்து அவளது உடலைக் காண வரும் விஷ்ணு காலாவை பட்டீல் காட்டிக் கொடுத்து மீண்டும் கைது செய்யப்பட காரணமாகிறான். இம்முறை விஷ்ணுவுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை விதிக்கப்படுகிறது. பட்டீலின் மீது தீராப்பகை கொண்டு விஷமாகி சிறை செல்கிறான் விஷ்ணு காலா.

  இப்போது பச்சிளம் குழந்தையுடன் ரேணுகா, லாவணி ஆட்டக்காரி அம்பிகா வாடியிடம் செல்கிறாள். அவளுக்கு வேற்றூர் சென்று வாழ வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டு விட்டதால், சிறையில் இருக்கும் விஷ்ணுகாலாவின் அறிவுரையின் பேரில் அவள் குழந்தையை அம்பிகாவிடம் ஒப்படைக்கிறாள்.

  அம்பிகாவுக்கு அந்தக்குழந்தையை வளர்க்க வேண்டிய பாத்தியதை இருந்தது. ஆம், தனாஜி இவள் பொருட்டே பட்டீலிடம் முரண்பட்டது. இவளால் தானே அவனை பகைத்துக் கொண்டது. அதனால் அல்லவோ அவனது துர்மரணம் நேர்ந்தது. பகுளாவின் துர்பாக்கிய நிலைக்கும் அம்பிகாவாடியே அல்லவோ காரணமாகி விட்டாள். அந்த நன்றிக்கடனுக்காக அம்பிகா, பகுளாவின் மகளைத் தன் மகளாகப் பாவித்து வளர்க்கத் தொடங்குகிறாள்.

  குழந்தைக்கு குறிப்பிட்ட வயது வந்ததும் அவளுக்கும் லாவணி ஆட்டம் கற்பிக்கப்படுகிறது. நாளடைவில் குழந்தை மஞ்சுளா இளம்பெண்ணாகி லாவணியில் அம்பிகாவையும் விஞ்சும் அளவுக்குத் திறமைசாலியாகி விடுகிறாள். அவளது ஆட்டம் பார்க்க வரும் ஆண்கள் அனைவரும் மீண்டும் மீண்டுமென அவளது ஆட்டத்தால் ஈர்ப்பட்டு தேனில் விழுந்த ஈக்களைப்போல லாவணி அரங்குகளை நிரப்பி விடுவது வாடிக்கையாகி விட்டது. 

  அப்படியானதொரு சூழலில் தான் பட்டீலின் மகன் காசிநாத், மஞ்சுளாவின் ஆட்டம் காண வருகை தருகிறான். முதல் பார்வையிலேயே அவன்.. .மஞ்சுளாவின் மீது காதலாகி விடுகிறான். ஆட்டம் பார்த்து விட்டுக் கிளம்பும் போது, மஞ்சுளாவைத் தனியே கண்டு, நான் பிம்பலவாடி து கா பட்டிலீன் மகன் காசிநாத், உன் லாவணி ஆட்டம் அருமையாக இருக்கிறது, நீ எங்கள் ஊருக்கும் வந்து ஆடலாமே என்று அழைப்பு விடுக்கிறான். மஞ்சுளாவுக்கும் அவனைப் பிடித்திருக்கிறது. எனவே தன் தாயிடம் அனுமதி கேட்கிறாள்.

  காசிநாத்தின் அறிமுகத்தின் போதே அறைக்குள் நுழைந்து விட்ட அம்பிகா, பிம்பல வாடி என்ற ஊர்ப் பெயரைச் சொன்னதுமே அவனை வெறித்துப் பார்த்து விட்டு, நாங்கள் நிச்சயம் வருகிறோம் இளைஞனே என்று விடைகொடுத்து அனுப்புகிறாள்.

  மஞ்சுளாவின் லாவணி ஆட்டக்குழு பிம்பலவாடிக்கு வருகிறது. காசிநாத், அவள் மேல் காதலில் கசிந்துருகுகிறான். இத்தனைக்கும் அவனுக்கொரு மனைவியும் குழந்தையும் உண்டு. மனைவி மீது அவனுக்கு நேசமும் உண்டு. ஆனாலும் அவனுக்கு மஞ்சுளாவின் மீதான காதலை புறக்கணிக்க முடியவில்லை. இந்த தகவலை அறிந்து கொள்ளும் து கா பட்டீல், மகன் மீது மிகுந்த கோபம் கொள்கிறான். நேராக அம்பிகாவிடம் வந்து, உனக்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன், உடனே உனது குழுவினரை அழைத்துக் கொண்டு நீ வேறிடம் சென்று விடு என்று எச்சரிக்கிறான்.

  ஆனால், அம்பிகா எப்போது து கா பட்டீலுக்கு அஞ்சினாள்? அவள் து கா பட்டீலிடன் சவால் விடுகிறாள்.

  உன் குற்றங்கள் அனைத்திற்கும் நீ பதில் சொல்ல வேண்டிய நேரமிது பட்டீல். நீ நினைத்துக் கொண்டிருக்கிறாய், கடவுளின் பார்வையில் இருந்து தப்பி விட்டதாக, இல்லை விதி உனக்காக வேறொரு திரைக்கதையை எழுதி வைத்திருக்கிறது. அதில் உன் மகனே, உன் மகள் மீது தீராக்காதலில் விழுந்து விட்டான். எல்லாம் தெரிந்திருந்தும் நான் ஏன் பேசாமல் அமைதி காக்கிறேன் என்றால், நாளை எனது லாவணி ஆட்டத்தில் நான் ஒரு கதை சொல்லவிருக்கிறேன். கதையின் நாயகனே நீ தான். உன் கதையைத் தான் நாளை அரங்கிலேற்றி ஊரார் முன் சொல்லப்போகிறேன். முடிந்தால் அங்கு வந்து மஞ்சுளா உனக்கும், பகுளாவுக்கும் பிறந்த பெண் என்பதை நீ ஊரறிய ஒப்புக்கொள். உன் பிரச்னை தீரும்’ என்று சவால் விடுகிறாள்.

  அம்பிகாவின் பதிலைக் கேட்டு மூச்சடைத்துப் போகும் பட்டீல்;

  தன் தவறை உணர்ந்து மிகவும் குற்ற உணர்வு கொண்டாலும் அதை ஊரார் முன் ஒப்புக் கொள்ள அவனது அகங்காரம் இடம் தராததில், அம்பிகாவை சுட்டுக் கொன்று விடுவதாக மிரட்டுகிறான். 

  ஆனாலும், அம்பிகா எதற்கும் அஞ்சாமல் மறுநாள் லாவணி அரங்கில் தானே ஆட்டக்காரியாகி மஞ்சுளா உதித்த கதை, காசிநாத்துடன் காதல் கொண்ட கதை. இருவருக்கும் ஒரே தகப்பனான து கா பட்டீலின் சூதுக்கதை, தனாஜி இறந்த கதை என எல்லாமும் சொல்லி முடிக்கிறாள். பட்டீல் துப்பாக்கியுடன் உள்ளே வருகிறான். அம்பிகாவைச் சுட துப்பாக்கியை உயர்த்துகிறான். ஆனால், குண்டு அவன் மீதே பாய்கிறது. ஆம், அவன் தன்னுயிரைத் தானே மாய்த்துக் கொண்டு தரையில் விழுகிறான்.

  உயிர் போகும் தருவாயில் தான் இதுவரை கண்ணிலும் கண்டிராத தன் மகள் மஞ்சுளாவை அழைத்து அவளது வாழ்க்கைக்கு ஒரு சகோதரனாக இனி காசிநாத் தான் முழுப்பொறுப்பு என்று கையளித்து விட்டுச் சாகிறான்.

  காசிநாத் மஞ்சுளா மீது கொண்ட காதல் கணத்தில் மாறிப்போகிறது. காரணம் அவனது தந்தை தனது கடைசி நாட்களில் பட்ட மன உளைச்சலை அவன் கண்டிருந்ததால். ஒரே தகப்பனின் பிள்ளைகள் காதலில் விழுவது அபத்தம் அல்லவா? அதற்குப் பெயர் காதலே இல்லை. அவன் இப்போது மஞ்சுளாவைத் தன் உயிரினும் மேலான சகோதரியாக ஏற்றுக் கொண்டான்.

  கதையின் முடிவு நமக்கு உணர்த்துவது ஒன்றே!

  யாருக்கும் தெரியாது, யாராலும் நம்மைக் கட்டுப்படுத்த முடியாது, தட்டிக் கேட்க முடியாது என்று நினைத்துக் கொண்டு மனிதர்களான நாம் ஏதேனும் தவறுகளை செய்து கொண்டே இருந்தோமெனில், விதி நம்மை மிரட்ட மிக  அருமையான வாய்ப்புக்காகக்க் காத்திருக்கும். வாய்ப்புக் கிடைத்ததும் அது எழுதும் தீர்ப்பு நம்மால் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அளவுக்கு மிகவும் நூதனமான வலை பின்னப்பட்டு அதன் கோரப்பிடியில் நாம் சிக்க வைக்கப்பட்டிருப்போம். அதிலிருந்து நாம் தப்பவே முடியாது. விதி எழுதும் தீர்ப்பு வெகு துல்லியமானது என்பதே!

  து கா பட்டீல் தனாஜிக்கும், அவனது மனைவி பகுளாவுக்கும், ஏன் விஷ்ணு காலாவுக்கும், லாவணி அம்பிகாவுக்கும் இழைத்த அநீதிக்கு விதி அவனது உயிரை, உளவியல் ரீதியாகச் சித்ரவதைப்படுத்தி எடுத்துக் கொண்டது.

  இது தான் மேனகா ஊர்வசி திரைப்படக் கதை.

  படம் பார்த்து முடிக்கையில் எனக்கு மீண்டும் 80 களில் பயணப்பட்டு எங்கள் ஊர் பஞ்சாயத்து போர்ட் ஆபீஸ் தூர்தர்ஷன் தொலைக்காட்சி சேவையில் சனிக்கிழமை மாலை ஹிந்தித் திரைப்படம் கண்டு களித்தார் போலொரு சோர்வு ஏற்பட்டு விட்டது. ஏனெனில் படம் அத்தனை நீளம். நடுவில் சலிப்படையாமல் பார்த்துக் கொள்வது லாவணி நடனப் பாட்டுக்கள் தான். கதையென்று பார்த்தால் இது ஒரு பேத்தாஸ் கதை. இதை சிம்பிளாகச் சொல்ல முயலாமல் இயக்குனர் ஏன் ஜாங்கிரி சுட்டு இத்தனை நீளமாக்கி இருக்கிறார் என்ற கேள்வியை யாரிடம் கேட்பது என்று தெரியவில்லை. ஆனாலும், பொறுமையாக இந்தப்படத்தைப் பார்க்க வைத்த சக்தி என்னவென்று தெரியாமல் இப்போதும் நான் முழித்துக் கொண்டிருக்கிறேன்.

   

  திரைப்படம்: மேனகா ஊர்வசி

  இயக்கம் : மச்சீந்திர சாட்

  தயாரிப்பு : தியோயானி மூவிஸ் (Deoyani Movies)

  மூவி ஜானர் : டிராமா

  நடிப்பு : நாகேஷ் போன்ஸ்லே (து கா பட்டீல்), பார்கவி சிர்முலே (பகுளா),  மைதிலி ஜாவ்கர் (அம்பிகா)

  • இந்தத் திரைப்படத்திற்கு முதலில் வைக்கப்பட்ட பெயர் து கா     பட்டீல். பிறகு தொழில்நுட்பக் காரணங்களுக்காக மேனகா     ஊர்வசி எனப் பெயர் மாற்றம் நடைபெற்றுள்ளது.
  • படத்தில் செல்ஃபோன்களோ, டி வியோ காட்டப்படாததால்    இதை பீரியட் ஃபிலிம் என்று யூகிக்க முடிந்தது. அத்துடன்      மகாராஷ்டிர கிராமங்களில் பட்டீல்களின் ஆதிக்கம் இப்போதும்  இப்படியே நீடிக்காது என்று நம்பியதாலும் கூட.
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  kattana sevai