கோதுமை தோசைக்கு சிறந்த காம்போ ஸ்பைஸி அன்லிமிடட் உப்பு, உறைப்பு மல்லிச் சட்னி!

கோதுமை தோசை தொண்டைக்குள் இறங்காது என்று அடம் பிடிப்பவர்களுக்கு இந்த உப்பு, உறைப்பு நிறைந்த மல்லிச் சட்னி செய்து சாப்பிடக் கொடுத்தால் பிறகு காலத்துக்கும் கோதுமை தோசையை வெறுக்கவே மாட்டார்கள்.
கோதுமை தோசைக்கு சிறந்த காம்போ ஸ்பைஸி அன்லிமிடட் உப்பு, உறைப்பு மல்லிச் சட்னி!

தேவையானவை:

காய்ந்த கொத்துமல்லி விதை: 4 டேபிள் ஸ்பூன்
சிவப்பு நீட்டு மிளகாய் வத்தல்: 15 லிருந்து 18 வரை
உறித்த பூண்டு: 5 பல்
உளுத்தம் பருப்பு: 1 டேபிள் ஸ்பூன்
காய்ந்த கறிவேப்பிலை: 1 கைப்பிடி
புளி / தக்காளி: புளி 1 நெல்லிக்காய் அளவு / தக்காளி எனில் 4
பனை வெல்லம்: 1 நெல்லிகாய் அளவு
உப்பு: தேவையான அளவு
பெருங்காயத்தூள்: 1 சிட்டிகை

செய்முறை:

வாணலியை சூடாக்கி அதில் 1 டீஸ்பூன் கடலை எண்ணெய் அல்லது நீங்கள் வழக்கமாகப் பயன்படுத்தும் ஏதாவது ஒரு சமையல் எண்ணெய் விட்டு உளுத்தம் பருப்பை போட்டு வறுக்கவும், உளுந்து சிவக்க பொரிந்த பின் அதில் கொத்துமல்லி விதை, நீட்டு மிளகாய் வத்தல் இரண்டையும் போட்டு கருகாமல் சிவக்க வறுக்கவும், இதனுடன் உறித்த பூண்டு மற்றும் காய்ந்த கறிவேப்பிலையையும் இட்டு மொறு மொறுவென வறுத்த பின் புளி அல்லது தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி விரைவாக வதங்க வேண்டுமெனில் அதில் தேவையான அளவு கல் உப்பு சேர்க்கவும். தக்காளி வதங்கியதும் அதனுடன் பனைவெல்லம் சேர்த்து ஓரிரு முறைகள் கிளறி விட்டு இறக்கி ஆற விடவும். தக்காளிக்குப் பதிலாக புளி சேர்ப்பதாக இருந்தால் நெல்லிக்காய் அளவு புளியை சேர்த்து கிளறி விட்டு இறக்கலாம்.

வறுத்த பொருட்கள் ஆறியதும் அளவாக தண்ணீர் விட்டு மிக்ஸியில் அரைத்தெடுக்கவும். அரைத்த மல்லிச் சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு கடுகு, உளுந்து தாளித்து மேலாக 1 சிட்டிகை பெருங்காயத்தூள் தூவி இறக்கிப் பரிமாறவும்.

தண்ணீர் சேர்க்காமல் எண்ணெய் சற்று அதிகமாகச் சேர்த்து அரைத்து வைத்துக் கொண்டால் 1 வாரத்துக்கும் மேல் கெடாமல் இருக்கும். துவையல் அல்லது கெட்டிச் சட்னியாகப் பயன்படுத்தலாம். 

இது அரிசி தோசைக்கும் தொட்டுக் கொள்ளச் சுவையாகத் தான் இருக்குமென்றாலும், கோதுமை தோசை தொண்டைக்குள் இறங்காது என்று அடம் பிடிப்பவர்களுக்கு இந்த உப்பு, உறைப்பு நிறைந்த மல்லிச் சட்னி செய்து சாப்பிடக் கொடுத்தால் பிறகு காலத்துக்கும் கோதுமை தோசையை வெறுக்கவே மாட்டார்கள். அப்படி ஒரு சிறப்பான காம்போ இது!

செய்து சாப்பிட்டுப் பாருங்கள். பிறகு நீங்களே ஒத்துக் கொள்வீர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com