வேலைக்குச் செல்லும் பெண்களின் வசதிக்காக ரெடிமேட் தாளித வடகம் செய்முறை!

புத்திசாலிக் கணவர்கள் எனில் உங்கள் அம்மா, பாட்டி அல்லது மாமியாரிடம் ரெடிமேட் தாளித வடகம் ரெஸிப்பி கேட்டு அதை சர்ப்பிரைஸாக உங்கள் மனைவிக்கு அனுப்பி வைக்கலாம்.
வேலைக்குச் செல்லும் பெண்களின் வசதிக்காக ரெடிமேட் தாளித வடகம் செய்முறை!

வேலைக்குச் செல்லும் பெண்கள் காலையில் சமையற்கட்டில் சமைப்பது ஒரு பேரழகு! அப்போது சமையலறை ஒரு குட்டிப் போர்க்களமாகவே காட்சியளிக்கும். கணவர்கள் மனைவியிடம் ஏதேனும் சந்தேகம் கேட்க வேண்டுமெனில் அந்த நேரத்தைப் பக்குவமாகத் தவிர்த்து விடுதல் நலம். ஏனெனில் அந்நேரத்தில் தாளிதம் செய்ய கடுகு டப்பா கைக்கெட்டும் தூரத்தில் இல்லாமல் எங்கே வைத்தோம் என குழம்பிப்போய் தேடிக் கொண்டிருக்கும் மனைவிகள் சமூகம்; வாணலியில் எண்ணெய் சூடாகிக் கொண்டிருக்க கடுகு கிடைக்காத கோபத்தில் கணவர்களான உங்களையே தாளித்துக் கொட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை! புத்திசாலிக் கணவர்கள் எனில் உங்கள் அம்மா, பாட்டி அல்லது மாமியாரிடம் ரெடிமேட் தாளித வடகம் ரெஸிப்பி கேட்டுக் கொண்டு அதை சர்ப்பிரைஸாக உங்கள் மனைவிக்கு அனுப்பி வைக்கலாம். தாளித வடகத்தில் சின்ன வெங்காயம் அல்லது சாம்பார் வெங்காயத்தின் பங்கு பிரதானம் என்பதால் கண்ணைக் கசக்கிக் கொண்டு அதை செய்வதற்கு பொறுமை வேண்டும். அதனால் ஊரிலிருந்து மாமியாரோ, அம்மாவோ உங்கள் வீட்டுக்கு விருந்தாட வருகையில் அன்பொழுகப் பேசி அவர்களை இந்த வடக தயாரிப்பில் மனைவியோடு கோர்த்து விட்டு விடுங்கள். அதுவும் முடியாது எனில் நகரத்தின் சூப்பர் மார்க்கெட்டுகள் எதிலாவது இந்த ரெடிமேட் வடகங்கள் கிடைக்கிறதா என்று தேடி உங்கள் மனைவிக்கு வாங்கித் தரலாம். என்ன இருந்தாலும் கடைகளில் வாங்குவது வீட்டில் செய்வது போல வராது என்பது மட்டும் உறுதி!

வீட்டில் தங்களது சொந்த முயற்சியில் தாளித வடகம் செய்ய ஆசைப்படுபவர்கள் கீழுள்ள ரெஸிப்பியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். வடகத்தில் நம்மை ஈர்க்கக் கூடிய முக்கிய அம்சம் அதன் மணம். உங்கள் வீட்டில் வத்தக்குழம்பு வைத்து நீங்களே தயாரித்த வடகத்தால் தாளிதம் செய்து பாருங்கள் மணம் எட்டுத் தெருவைத் கூட்டும்.

தேவையான பொருட்கள்:
சாம்பார் வெங்காயம்: 1 கிலோ
பூண்டு: 10 பல்
கறிவேப்பிலை: ஒரு கைப்பிடி
உளுந்தம்பருப்பு: 200 கிராம்
கடுகு: 50 கிராம்
வெந்தயம்: 50 கிராம்
சீரகம்: 1 டீஸ்பூன்
உப்பு: 1 1/2 டேபிள் ஸ்பூன் அல்லது அவரவர் தேவைக்கேற்ப

செய்முறை: 
சாம்பார் வெங்காயம் அல்லது சின்ன வெங்காயம் மற்றும் பூண்டை தோலுரித்து நீளவாக்கில் இரண்டிரண்டாக நறுக்கிக் கொள்ளவும். பொடியாக நறுக்க வேண்டாம். உளுந்தை 10 நிமிடங்கள் நீரில் ஊற வைத்து நறுக்கிய வெங்காயத்துடன் தேவையான அளவு உப்பு சேர்த்து பிசைந்து தனியாக வைக்கவும். இதனுடன் மேலே சொல்லப்பட்ட கறிவேப்பிலை, பூண்டு கடுகு, வெந்தயம், சீரகம் போன்ற அனைத்துப் பொருட்களையும் சேர்த்துக் கெட்டியாகப் பிசையவும். பிசைந்த உருண்டைகளை கையில் லேசாக எண்ணெய் தொட்டுக் கொண்டு சிறு சிறு உருண்டைகளாகப் பிடிக்கவும். இந்த உருண்டைகளை குறைந்த பட்சம் 10 நாட்களாவது வெயிலில் காய வைத்து எடுத்து டப்பாவிலோ அல்லது சில்வர் சம்புடத்திலோ சேமித்து பயன்படுத்தலாம். பல நாட்களுக்கு வீட்டில் தாளிதப் பிரச்னை தீர்ந்தது. மாத பட்ஜெட்டில் கடுகு வாங்க மறந்து தாளித வாசனையின்றி சாப்பிட்டாக வேண்டிய சங்கடம் குறையும். 

வடகம் செய்து சாப்பிட்டுப் பாருங்கள். இந்த வடகத்தில் இன்னொரு விசேஷம் என்ன தெரியுமா? சிலருக்கு தாளிதத்தில் மட்டுமல்ல வெறுமனே நெய் ஊற்றிப் பிசைந்த கெட்டிப் பருப்புச் சாதத்துக்கு பொறித்த வெங்காய வடகம் வைத்துச் சாப்பிடப் பிடிக்கும். பருப்பும், நெய்யும், தாளித்த வெங்காய வடகமும் அபாரமான சுவையாக இருக்கும். அதனால் தாளிக்க மட்டுமன்றி பருப்புச் சாதத்துக்கு தொடுகறியாகவும் இந்த வடகத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். செய்து சாப்பிட்டுப் பாருங்கள் அப்போது தெரியும் இதன் மகத்துவம்!

Image courtsy: www.yarlcuisines.com, www.geethachalrecipe.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com