நீங்கள் காஃபி பிரியரா? காபி குடிப்பதன் 5 நன்மைகள் உங்களுக்கே!

லேசாக மழை தூறிக் கொண்டிருக்கும் ஒரு இளம் காலையை மேலும் அழகாக்க என்ன செய்யலாம்?
நீங்கள் காஃபி பிரியரா? காபி குடிப்பதன் 5 நன்மைகள் உங்களுக்கே!

லேசாக மழை தூறிக் கொண்டிருக்கும் ஒரு இளம் காலையை மேலும் அழகாக்க என்ன செய்யலாம்? ஒரு கப் காஃபியை விட அத்தருணத்தை அழகூட்டுவது எதுவாக இருக்க முடியும்? காஃபி என்றதும் முதலில் நம் நினைவுக்கு வருவது அதன் மணம். காஃபி பிரியர்களுக்கு டிகாஷன் காஃபிதான் பிடிக்கும். என்னதான் தூள் காஃபியை கலக்கினாலும், டிகாஷனும் பாலும் சிறிதளவு சர்க்கரையும் சேர்ந்த காஃபியின் சுவைக்கு ஈடாக இந்த ஈரேழு உலகில் வேறு எதுவும் உள்ளதா என்ன?  சரி காஃபியின் மகிமையைப் பற்றிக் கூறிக் கொண்டே போகலாம்.

காஃபி குடிக்கும் பழக்கம் பற்றிய ஆராய்ச்சிகள் அனேகம் உள்ளன. சில ஆய்வாளர்கள் காஃபி குடிப்பது உடல் நலத்துக்குக் கெடுதல், நரம்புத் தளர்ச்சியை ஏற்படுத்தி, விரைவில் பலவித உடல்நலக் கோளாறுகளை ஏற்படுத்திவிடும் என்கின்றனர். ஆனால் வேறு சில ஆராய்ச்சியாளர்கள் காஃபி தேவாம்ருதம், அது உடல்நலத்தை மேம்படுத்தி உங்கள் ஆயுளை அதிகரிக்கச் செய்யும் என்றும் கூறி வருகின்றனர்.

இதில் எது சரி, எது தவறு? ஆயிரக்கணக்கான டாலர்கள் செலவழித்து லட்சக்கணக்கான நபர்களை வைத்து இவர்கள் மேற்கொள்ளும் ஆய்வு முடிவுகள் சுவாரஸ்யமாக இருந்தாலும், பெரும்பாலானோர்க்கு குழப்பம்தான் மிஞ்சுகிறது. ஆனால் நம்முடைய சுய அறிவைப் பயன்படுத்தி, யோசித்துப் பார்த்தால், காஃபி குடித்து இதுவரை யாரேனும் மரணம் அடைந்தார்கள் என்று கேள்விப்பட்டதில்லை அல்லவா? காஃபியோ டீயோ அதற்கு அடிக்ட் ஆகி, அளவுக்கு அதிகமாக குடித்தால் நிச்சயம் பிரச்னைகள் ஏற்படும். ஆனால் அளவாக காஃபி குடிப்பது நலமே தரும். அது சுவையுடன் சேர்ந்து ஒரு பரவச அனுபவம் தரும் என்பது உண்மை. 

1. ஒரு நாளில் எத்தனை காபி குடிக்கலாம்?

ஒரு நாளைக்கு 2 அல்லது 3 கோப்பை காஃபி குடிக்கலாம். சராசரியாக ஒரு கப் காஃபியில் 95 மில்லிகிராம் கஃபைன் கலந்திருக்கும். ஏற்கனவே கஃபைன் அதற்கு மேல் பால் மற்றும் சர்க்கரை சேர்த்தால் காஃபியின் நன்மைகளை அழிந்து விடும். எனவே பாலும் சர்க்கரையும் சேர்க்காத ப்ளாக் காஃபியைக் குடித்துப் பழகுங்கள். ஆரம்பத்தில் கசக்கும் ஆனால் காஃபியின் ருசியே கசப்புத்தானே? அதுவே பழகிவிடும். இந்த ப்ளாக் காபி பல நன்மைகள் தரவல்லது. பால் சேர்க்காத கருப்பட்டி காபி குடிக்கும் பழக்கம் ஒருசிலருக்கு உள்ளது. 'கடுங்காபி' என்று அந்த காபியை சொல்லுவார்கள். அதுவும் உடல் நலத்தை மேம்படுத்தும்.

2. நோய்களுக்கு நோ என்ட்ரி

பல ஆண்டுகள் காஃபி குடிப்பவர்களுக்கு சர்க்கரை நோய் வரும் வாய்ப்புகள் குறைவு. கேன்சர், டிமென்ஷியா, அல்ஸீமர் போன்ற மறதி நோய், இதயம், லிவர் சம்மந்தப்பட்ட பிரச்னைகள், பார்க்கின்சன், டைப் 2 டயபடீஸ், உள்ளிட்ட பல நோய்கள் வராமல் தடுக்கும் சக்தியும் காஃபிக்கு உண்டு என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

3. ஆக்டிவ் எனர்ஜி தரும் காஃபி

காஃபியில் ஆன்டி ஆக்ஸிடெண்டுகள் அதிகம் உள்ளன. அது உங்களை சுறு சுறுப்பாகவும், இளமையாகவும் வைத்திருக்க உதவும். சூடான காஃபி உடலுக்கு உடனடி தெம்பை அளிக்கும் என்பது கண்கூடான உண்மை. நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் காஃபி பீனில் உள்ளது. காபி குடிக்கும்போது ஹார்மோன்கள் தூண்டப்பட்டு மூளையை சுறுசுறுப்பாக்கும். உடலில் ரத்த ஓட்டம் அதிகரிக்கச் செய்து, தசைகளுக்கு அதிக ரத்தம் அனுப்பப்படுகிறது. காஃபி குடுக்கும்போது, கண் பார்வை விரியும். சுவாசக் குழாய் நன்கு திறந்து புத்துணர்வு கிடைக்கும்.  இதன் மூலம் நாம் செய்து கொண்டிருக்கும் வேலையில் தீவிரமாக ஆழ்ந்து உற்சாகத்துடன் செய்ய முடியும்.

4. காஃபி குடிப்பதால் நீண்ட நாள் வாழலாம்

4,00,000 நபர்கள் பங்கேற்ற ஒரு மாபெரும் ஆராய்ச்சியொன்றின் முடிவில் காஃபி குடிப்பவர்கள் நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ முடியும் என்று கண்டறிந்துள்ளார்கள். தினமும் இரண்டு கப் காஃபி குடித்தவர்கள் காபி குடிக்காதவர்களை விட 10 சதவிகிதம் அதிக காலம் உயிர் வாழ்ந்தார்கள். இதில் காஃபி குடிக்கும் பெண்களின் ஆயுள் 13 சதவிகிதம் ஆண்களை விட அதிகமிருந்தது என்பதையும் கண்டுபிடித்தனர்.

5. ஒவ்வாமை

காஃபி  குடிப்பதால் சிலருக்கு படபடப்பு, பதற்றம், தூக்கமின்மை, வயிற்றில் கோளாறு, ப்ராஸ்டேட் போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. காரணம் அவர்களுக்கு ஒவ்வாமை இருக்கலாம். காஃபி குடிப்பதால்தான் அத்தகைய பிரச்னைகள் வருகிறது என்று தெரிந்தால், காஃபி குடிப்பதைத் தவிர்ப்பதே நல்லது.

காபி அருந்துபவர்கள் பெரும்பாலும் புகைப் பிடிப்பவர்களாகவும், குறைந்த உடற்பயிற்சி செய்பவர்களாகவும், கொழுப்புச் சத்து நிறைந்த உணவு வகைகளை அதிகம் உண்பவர்களாகவும் இருப்பதாக ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com