செவ்வாழைப்பழ விற்பனையில் நடக்கும் மோசடி!

உள்ளுணர்வின் உந்துதலில் தோலை மட்டும் சோப் நீரில் கழுவிப் பார்க்கிறார். என்ன அதிசயம்? செவ்வாழையின் நிறம் கரைந்து அடியில் மஞ்சள் தோல் தெரிகிறது.
செவ்வாழை
செவ்வாழை

வாட்ஸப்பில் பகிரப்படும் பெரும்பாலான ‘திடுக்’ செய்திகள் வெறும் வதந்திகளாக இருக்கலாம். ஆனால், அவற்றிலும் கூட சில உண்மையாகவும் இருந்து விட வாய்ப்பு உண்டு. நேற்று ஒரு வாட்ஸ் அப் பகிரலில். கடையில் செவ்வாழைப்பழம் வாங்கிய ஒருவர், அதைத் தனது வீட்டுக்கு எடுத்து வந்து ஏதோ உள்ளுணர்வின் உந்துதலில் தோலை மட்டும் சோப் நீரில் கழுவிப் பார்க்கிறார். என்ன அதிசயம்? செவ்வாழையின் நிறம் கரைந்து அடியில் மஞ்சள் தோல் தெரிகிறது. அதைக் கண்டு அதிர்ந்து போன அவர் அதைச் செய்முறையாக வாட்ஸப்பில் செய்து காட்டி ‘செவ்வாழைப்பழத்தில் நடக்கும் மோசடி’ என்று சக நண்பர்களை எச்சரிக்கிறார். அதைப் பார்க்கும் யாருக்குமே உடனே தோன்றக் கூடியது, இனிமேல் செவ்வாழை வாங்குபவர்கள் யாராக இருந்தாலும் அது நிஜமாகவே செவ்வாழை தானா? அல்லது மேலே செந்நிறமாகத் தோலின் நிறம் மாறுமாறு ரசாயனத்தில் முக்கி எடுக்கப்பட்ட வாழைப்பழமா என்று சோதித்துப் பார்த்துத்தான் வாங்க வேண்டும். என்பதாகத்தானே இருக்கும்.

இப்படியும் நடக்க வாய்ப்பிருக்கிறதா? என்றால்,

பெரும்பாலும் வாய்ப்பிருக்கிறது என்று தான் நம்பத் தோன்றுகிறது. ஏனெனில், பச்சைப் பட்டாணி என்ற பெயரில் காய்ந்த பட்டாணியை பச்சை நிற ரசாயனத்தில் முக்கி எடுத்து விற்பவர்கள் தானே நமது வியாபாரிகள் என்ற உண்மை உறுத்துகிறது.

இன்று நம் மக்களிடையே தினமும் பழங்கள் உண்ணும் பழக்கம் அதிகரித்திருக்கிறது. நாள்தோறும் ஆப்பிள், ஆரஞ்சு, சப்போட்டா, கிவி என விலை உயர்ந்த பழங்களாக வாங்கி உண்ணாவிட்டாலும் கூட குறைந்தபட்சம் தினமும் இரவிலோ அல்லது காலை உணவுடனோ, மதிய உணவுடனோ வாழைப்பழங்களைச் சேர்த்துக் கொள்ளும் அளவுக்கு மக்கள் தங்களது உடல்நலத்தின் மேல் அக்கறை கொண்டவர்களாக இருந்து வருகிறார்கள். மக்களின் இந்தத் தேவையைக் கருத்தில் கொண்டு அதை இப்படித் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கிறார்கள் கள்ளச் சந்தை வியாபாரிகள். அவர்களின் நூதன விற்பனை தந்திரங்களில் ஒன்று தான் மஞ்சள் நிற சாதாரண வாழைப்பழங்களை செவ்வாழையாக மாற்ற ரசாயனக் கலவையில் முக்கி எடுக்கும் நூதன ஏமாற்று முறை.

இதில் உண்மை எத்தனை சதவீதமாகவும் இருந்து விட்டுப் போகட்டும். எப்படியாயினும் செவ்வாழை வாங்கி உண்பவர்கள் இதையும் மனதில் கொண்டு இனிமேல் கவனமாகப் பரிசோதித்து உண்பதும் நல்லது தானே! 

இப்படி பயமுறுத்துகிறார்களே என்று செவ்வாழை உண்பதை யாரும் தவிர்த்து விட வேண்டியதில்லை. காரணம் அவற்றிலிருக்கும் அபிரிமிதமான சத்துக்களை பின் நாம் இழக்க நேரிடலாம். எனவே, பழத்தை ஒருமுறை சோதித்துப் பார்த்து விட்டு வாங்கி உண்ணத்தான் வேண்டும்.

செவ்வாழையின் நன்மைகள்:

  • கர்ப்பிணிகளின் மார்னிங் சிக்னஸைப் (காலை நேரத் தடுமாற்றம்) போக்கும்.
  • வாய்துர்நாற்றம் அகலும்
  • கல்லீரல் வீக்கத்தை மட்டுப்படுத்தும்
  • செவ்வாழையில் விட்டமின் A சத்து மிகுந்திருப்பதால் கண்புரை நோய், மாலைக்கண் நோய் உள்ளிட்டவற்றைக் கட்டுப்படுத்தும்.
  • பொட்டாசியம் மிகுந்திருப்பதால் தினமும் ஒரு செவ்வாழை சாப்பிட்டால் நாள் முழுவதும் புத்துணர்ச்சியாக உணரலாம்.
  • கால்சியத்தைக் கட்டுப்படுத்திச் சிறுநீரகங்களை செயலாற்றலுடன் வைக்க செவ்வாழைப்பழம் உதவும்.

இத்தனை சத்துக்கள் மிகுந்த செவ்வாழையை மக்கள் விரும்பி உண்பதில் என்ன அதிசயம் இருந்து விட முடியும்?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com