10 நிமிசத்துல செய்துடலாம் ஈரானியன் ஸ்பெஷல் ‘குக்கூ சப்ஜி’: காண்டினெண்டல் டிஷ்!

கீரை மற்றும் லெட்யூஸ் இழைகளைப் பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இதனுடன் உப்பு, கரம் மசாலாத்தூள், கொத்துமல்லித்தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு பிசிறி விட்டு
10 நிமிசத்துல செய்துடலாம் ஈரானியன் ஸ்பெஷல் ‘குக்கூ சப்ஜி’: காண்டினெண்டல் டிஷ்!

எப்போ பார்த்தாலும் பொரிச்சதும், அவிச்சதுமா நம்மூர் ஸ்னாக்ஸ் தான் சமைச்சுத் தருவீங்களா? எனக்கு, நாம அன்னைக்கு ரிஸார்ட்ல சாப்பிட்டோமே அந்த காண்டினெண்டல் டிஷ் வேணும். புதுசா எதுனா ட்ரை பண்ணுங்களேம்மா. மகனோ, மகளோ இப்படிக் கூக்குரலிடாத வீடுகள் ஏதேனும் உண்டா? அவர்களுக்குச் சாப்பிடுவதற்குப் புது டிஷ் வேண்டும். நாமும் தான் எத்தனை நாட்களுக்கு பிரேக் பாஸ்டுக்கு இட்லி, தோசை, பூரி, பொங்கல், என்று அரைத்த மாவையே அரைப்பது?! கொஞ்சம் வித்யாசமாக வெளிநாட்டு ரெஸிப்பிகளையும் தான் முயன்று பார்ப்போமே என்று தேர்வு செய்தது தான் இந்த ஈரானியன் ரெஸிப்பி.

இதன் பெயர் குக்கூ சப்ஜி (Koukou Sabzi). இது டாப் டென் ஈரானிய உணவு வகைகளில் ஒன்று என்பதோடு ஈரானின் தேசிய உணவாகவும் இதைக் கருதுகிறார்கள் என்று தெரிந்தது.

தேவையான பொருட்கள்:

  • கீரை: 1/2 கட்டு
  • லெட்யூஸ் (அ) முட்டைக்கோஸ் இழைகள்: 5
  • முட்டை: 4
  • உப்பு: தேவையான அளவு
  • கரம் மசாலா: 1 டீஸ்பூன்
  • கொத்துமல்லித்தூள்: 1/2 டீஸ்பூன்
  • மஞ்சள் தூள்: 1/4 டீஸ்பூன்
  • எண்ணெய்: தேவையான அளவு அல்லது 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

கீரை மற்றும் லெட்யூஸ் இழைகளைப் பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இதனுடன் உப்பு, கரம் மசாலாத்தூள், கொத்துமல்லித்தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு பிசிறி விட்டு ஒரு வாயகன்ற பாத்திரத்தில் 5 நிமிடங்கள் ஊற விடவும்/ பின்பு முட்டையை உடைத்து ஊற்றி மிக்ஸியில் இட்டு நன்கு கலக்கி எடுத்துக் கொள்ளவும். அடித்த முட்டையை பாத்திரத்தில் உள்ள கீரைக் கலவையுடன் சேர்த்து நன்கு கலக்கி விடவேண்டும். பின்பு பிரஸ்ஸர் பானை அடுப்பில் ஏற்றி அதில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் முட்டையுடன் கலந்து எடுத்து வைத்துள்ள கீரைக்கலவையை கனமான ஆம்லெட் போல வார்த்து விட்டு ஒருபுறம் சிவக்க நன்கு வெந்ததும் மறுபுறம் திருப்பிப் போட்டு வேக விடவும். வேக வைக்கும் போதே அதை பீட்ஸா போல நான்கு துண்டுகளாக வெட்டிக் கொண்டால் எடுக்க வசதியாக இருக்கும். இரானிய அம்மாக்கள் 10 நிமிடங்களுக்குள் ஏதாவது ஸ்னாக்ஸ் செய்து சாப்பிட வேண்டுமென்றால் தங்கள் குழந்தைகளுக்கு இதைத்தான் செய்து தருவார்களாம்.

அடிப்படையில் பாரசீக உணவு வகைகளின் கீழ் வரும் இந்த குக்கூ சப்ஜி சாப்பிட செம டேஸ்ட்டாக இருக்கும் என்கிறார்கள் இதை ருசித்துப் பார்த்தவர்கள்.

இடுபொருட்களை எல்லாம் பார்க்கும் போது சத்தான உணவாகத்தான் தெரிகிறது. சமைப்பதும் ரொம்ப ஈஸி. காலையில் பிரேக் பாஸ்டாகக் கூட நம் குழந்தைகளுக்கு இதைத் தரலாமே. 

கூடவே கொஞ்சம் பழங்கள்... அப்புறம் 1 டம்ளர் பாதாம், ஏலக்காய், முந்திரி சேர்த்த மசாலா பால். போதுமே! இது தான் ராயல் காண்டினெண்டல் பிரேக்பாஸ்டாக்கும்.

பலன்கள்:

  • கீரையும், லெட்யூஸும் சேர்ப்பதால் ரிச் ஃபைபர் ஃபுட் இது எனவே கண்டிப்பாக மலச்சிக்கல் பிரச்னை தீரும்.
  • முட்டையில் புரோட்டின் கிடைத்து விடும்.
  • கூடவே பழங்களும், மசாலா பாலும் சேர்த்து எடுத்துக் கொண்டால் கிடைக்க வேண்டிய மினரல்ஸ் மற்றும் விட்டமின்ஸும் கிடைத்து விடப்போகிறது.
  • இப்படிச் சாப்பிட்டால் எடை கூடி விடுமே என்ற கவலை கூட நமக்குத் தேவையில்லை பாருங்கள்.

சமைத்து சாப்பிட்டுப் பார்த்து விட்டு எங்களுக்கு எழுதுங்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com