நாசியைச் சுண்டி இழுக்கும் சுவையும் மணமுமான கோயில் புளியோதரை செய்வது எப்படி?

வீட்டில் நாம் செய்யும் புளியோதரை என்ன தான் சுவையாக இருந்தாலும், அது கோயில் புளியோதரைக்கு ஈடே இல்லை என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. கோயில் புளியோதரை தேவாமிர்தத்துக்குச் சமம் 
நாசியைச் சுண்டி இழுக்கும் சுவையும் மணமுமான கோயில் புளியோதரை செய்வது எப்படி?

வீட்டில் நாம் செய்யும் புளியோதரை என்ன தான் சுவையாக இருந்தாலும், அது கோயில் புளியோதரைக்கு ஈடே இல்லை என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. கோயில் புளியோதரை தேவாமிர்தத்துக்குச் சமம் என்பதாக அதை வாங்க கியூவில் நிற்கத் தயங்காத கோல்டு காலர் அதிகாரிகள் பலர் இருக்கிறார்கள். கோயிலில் கியூவில் நின்று பிரசாதம் வாங்குவது புண்ணியம் என்று கருதிச் செய்வார்கள் சிலர். சிலருக்கோ அதன் அபார சுவை கட்டி இழுத்து கியூவில் நிற்க வைத்து விடும். அப்படிப்பட்ட புளியோதரையை அதே சுவையுடன் வீட்டில் செய்வது எப்படி என்று இப்போது தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:

  • புளி: ஆரஞ்சுப் பழ சைஸில் பந்து போன்று திரட்டி எடுத்து ஒரு பாத்திரத்தில் ஊற வைத்து விடுங்கள்
  • கொத்தமல்லி விதை: 1 1/2 டேபிள் ஸ்பூன்
  • சிவப்பு மிளகாய் வற்றல்: 8 அல்லது 10
  • மிளகு: 3/4 டேபிள் ஸ்பூன்

 
மூன்றையும் ராவாக எண்ணெய் விடாமல் வாணலியில் வறுத்து எடுத்து  வைத்துக் கொள்ளவும்.

  • கடலைப்பருப்பு: 1 1/2 டேபிள் ஸ்பூன்
  • உளுந்து : 1 டேபிள் ஸ்பூன்

இரண்டையும் சிவக்க வறுத்த பின் வெந்தயம் சேர்க்கலாம்.

  • வெந்தயம்: 1 1/2 டீஸ்பூன்

இவை மூன்றையும் சிவக்க வறுத்து எடுத்து முன்னரே வறுத்து எடுத்து வைத்துள்ள மிளகாய் வற்றல் கலவையுடன் சேர்க்கவும்.
பின்னர் 

  • வெள்ளை எள்: 2 டேபிள் ஸ்பூன்

வெள்ளை எள்ளை சிவந்து வாசம் வரும் அளவுக்கு வறுத்து எடுத்து மேற்கண்ட பொருட்களுடன் சேர்க்கவும்.
கடைசியாக;

  • கறிவேப்பிலை: 2 ஆர்க்

சேர்த்து வாணலிச் சூட்டில் மொறுமொறுவென வறுத்து எடுத்து மேற்கண்ட பொருட்களுடன் சேர்க்கவும்.

புளியோதரை மசாலா ரெடி!

வறுத்த பொருட்களை எல்லாம் சூடு ஆற விட வேண்டும். பின்னர் எடுத்து பொடியாக இடித்து எடுத்து வைத்துக் கொள்ளலாம்.

பொடி இடிக்க கல் உரல் வேண்டும். அப்போது தான் நைஸாக இல்லாமல் சற்றே கொறகொறப்பான சுவையான மணமான புளியோதரைப் பொடி கிடைக்கும். கொஞ்சம் பொறுமையாகக் கல்லுரலில் இடிக்கக் கற்றுக் கொண்டீர்களெனில் பிறகு கரண்ட் போனாலும் கூட கவலைப்பட வேண்டியதில்லை பாருங்கள்.

அடுத்தபடியாகப் புளிக்காய்ச்சல் தயாரிக்க வேண்டும்.

புளிக்காய்ச்சல் தயாரிக்கலாமா?

ஊற வைத்த புளியை வடிகட்டி கெட்டியான கரைசலை எடுத்துக் கொள்ள வேண்டும். 

பிறகு வாணலியை அடுப்பில் ஏற்றி நல்லெண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும் 1 டேபிள் ஸ்பூன் கடலைப்பருப்பு, 1 டேபிள் ஸ்பூன் உளுந்தப் பருப்பு சேர்த்து பருப்புகள் நன்கு சிவந்து வரும் வரை பொரிய விடவும். பின்னர் நாலைந்து காய்ந்த மிளகாயைக் கிள்ளிப்போட்டு கிளறவும். அதனுடன் 1/2 டீஸ்பூன் வெந்தயத்தையும் போட்டுக் கிளறவும்.  பின்னர் இதனுடன் 1 டீஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்துக் கிளறி விட்டு கூடவே 1 கப் நிலக்கடலை சேர்த்து வறுக்கலாம். இதனுடன் இரண்டு கொத்து கறிவேப்பிலை சேர்த்து மொறுமொறுவெனப் பொரிந்ததும் 1 டீஸ்பூன் மஞ்சள் தூள், 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள் சுவைக்கேற்ப கல் உப்பு சேர்த்து பின்னர் கரைத்து வைத்த புளித்தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ளவும். இப்போது இந்த புளிக்காய்ச்சலை நன்கு சுண்டும் அளவுக்கு அடுப்பை விட்டு இறக்காமல் காய்ச்சிக் கொண்டே இருக்கவும். எண்ணெய் மிதந்து மேலே வரும் பக்குவத்த்தில் 2 டேபிள் ஸ்பூன் அளவுக்கு முன்னரே அரைத்து வைத்திருக்கும் புளியோதரை மசாலாவை இதனுடன் சேர்க்கவும். இப்போது கோயில் புளியோதரை செய்வதற்கான அற்புதமான மசாலா தயார்.

உதிரி உதிரியாக அபார சுவையுடன் புளியோதரை தயார்!

இப்போது புளியோதரை கிளற சாதம் வடிக்க வேண்டும். புளியோதரைக்கு எப்போதுமே சாதம் உதிரி உதிரியாக இருந்தால் தான் நன்றாக இருக்கும். அப்படி உதிரியாக வடித்த சாதத்துடன் காய்ச்சாத பச்சை நல்லெண்ணெய் சிறிது சேர்த்து நன்கு கிளறி விட்டால் சாதம் பாஸ்மதி அரிசியில் வடித்தது போல இன்னும் உதிரியாகப் பிரியும். இந்தப் பக்குவம் தான் புளியோதரை கிளற வசதியானது. இப்போது புளிக்காய்ச்சலை போதுமான அளவு இதனுடன் சேர்த்து கிளற வேண்டியது தான் பாக்கி. முன்னதாக நாம் தயாரித்துவைத்த புளிக்காய்ச்சலும் சரி, புளியோதரை மசாலாவும் சரி குறைந்தபட்சம் ஒரு மாதம் வரை ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளத் தக்கது. அடுத்தமுறை தேவைப்பட்டால் சூடாகச் சாதம் வடித்து அதனுடன் அந்த மசாலா + புளிக்காய்ச்சல் கலந்து கிளறினால் போதும் புத்தம் புதிய சுவையுடனும், நறுமணத்துடனும் புளியோதரை தயாராகி விடும். புளியோதரை கிளறி முடித்ததும் அதில் ஒரு கொத்து கறிவேப்பிலையை உதிர்த்து போட்டு  புளியோதரை மசாலாப் பொடியும் 2 1/2 ஸ்பூன் சேர்த்துக் கிளறி விட்டு மூடலாம். கடைசியாகக் கொஞ்சம் நல்லெண்ணெய் சேர்க்க வேண்டுமென்றாலும் சேர்க்கலாம். இப்போது உங்களுக்கு பிடித்த பெருமாள் கோயில் புளியோதரை ரெடி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com