

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தால் மட்டுமல்ல இப்போது சட்டத் திருத்தம் எனும் பெயராலும் மனித வாழ்க்கை முறை எப்படியெல்லாம் மாறிக் கொண்டிருக்கிறது என்றறிந்து கொள்ள உதவும் வியப்பான செய்தி இது!
தொழில்நுட்பமும் அறிவியலும் எத்தனை தான் முன்னகர்ந்து சென்று அதிவிரைவு வாழ்வை நமக்களித்தாலும் குழந்தைகளை பொம்மைகளைப் போல மருத்துவமனை ஆய்வகங்களில் தனித் தனி பாகங்களாக செய்து வெற்றிகரமாக அனைத்தையும் இணைத்து எடுத்துக் கொண்டு வெளியேறி விட முடிவதில்லை. நேரடியான கருவுறுதலானாலும் சரி வாடகைத் தாய் முறையானாலும் சரி சீரான உடல் நலத்துடனும், வெகு சீரான மன நலனுடனும் பத்திரமாகச் சுமந்து பத்து மாதம் பொறுமையாக காத்திருந்து தான் ஆரோக்கியமான குழந்தைகளைப் பெற்றெடுக்க முடிகிறது. இதில் எப்போதும் தாய் குழந்தைக்காக காத்திருப்பது தான் வழக்கமான நடைமுறை ஆனால் திருத்தம் செய்யப்பட்ட வாடகைத் தாய் சட்டம் - 2016 மசோதா கருவை தாய்க்காக காத்திருக்க வைத்து விட்டது.
இரண்டு நாட்களுக்கு முன் நாளிதழ்களில் வெளி வந்த செய்தியில்;
இந்தியாவெங்கும் பல்வேறு இன்ஃபெர்ட்டிலிட்டி மருத்துவமனைகளில் உயிருள்ள நிலையில் திரவ நைட்ரஜனில் மிதந்து கொண்டிருக்கும் 'மனித கருக்கள்' கடந்த மாதம் இந்தியாவில் திருத்தம் செய்யப்பட்ட வாடகைத் தாய் சட்டம் - 2016 மசோதாவுக்குப் பின் எங்கே ஒப்படைக்கப் படுவதென்ற விவரம் அறிந்து கொள்ள இயலாமல் குழப்பக் கடலில் மிதந்து கொண்டிருப்பதாக விவரிக்கப்பட்டிருந்தது. மனிதக் கருவின் படத்தை உற்றுப் பார்த்த போது சடுதியில் மூளைக்குள் மின்னி மறைந்த ஒரு விஷயம் மிகுந்த மன வருத்தத்தை அளித்தது.
உயிருள்ள அந்த மனித கருக்களில் எத்தனையோ சயன்டிஸ்டுகள், கலை வல்லுநர்கள், பெருமை மிக்க பேராசிரியர்கள், மருத்துவர்கள் என யார் வேண்டுமானாலும் உருவாகவிருக்கலாம். உயிருள்ள அந்த கருக்களை காத்திருப்பில் வைப்பது எந்த விதத்தில் நியாயம்? என்று புரியவில்லை. சட்டத்தில் மாற்றம் செய்வதற்கு முன் சம்பந்தப்பட்ட நபர்களைக் கணக்கில் எடுத்துக் கொண்டிருக்க வேண்டாமா? இந்த சூழலில் தங்களது கருக்களை இந்தியாவிலுள்ள மருத்துவமனைகளை நம்பி ஒப்படைத்து விட்டு குழந்தைக்காக தவமிருந்து கொண்டிருக்கும் பல நூறு பெற்றோர்களை சட்டத் திருத்தம் என்ற பெயரில் அரசு இயந்திரம் தண்டித்திருக்கிறது என்று தான் கருத வேண்டியுள்ளது. ஏனெனில் அவர்களது சொத்தென்று அவர்கள் கருதத்தக்கதான மனித கருக்களை எப்படிப் திரும்பப் பெற்றுக் கொள்வது என அறிய முடியாத சோகத்தில் ஆழ்த்தியுள்ளது இந்தப் புதிய சட்டத்திருத்த மசோதா.
திருத்தப் பட்ட இந்திய வாடகைத்தாய் சட்ட விதிகளின் படி இனி இந்தியாவில் இருந்து மனிதக் கரு ஏற்றுமதி என்பது தடை செய்யப்பட்ட ஒன்று. அதே போல அயல்நாட்டுத் தம்பதிகளும் முன்னைப்போல சுற்றுலா விசாவில் இந்தியாவுக்கு வந்து வாடகைத்க தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டு செல்ல முடியாது. இந்தியாவில் வாடகைத் தாய் முறையில் அயல்நாட்டினர் குழந்தை பெற விரும்பினால் மருத்துவ விசாவில் மட்டுமே அனுமதிக்கப்படுவர். இன்னமும் அதற்கான முறையான சட்ட விதிகள் வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை என்பது மற்றுமொரு குழப்பமான விஷயம்.
பொதுவாக அயல்நாடுகளில் குழந்தை பெற்றுக் கொள்ள இயலாத ஓரினச் சேர்க்கையாளர்கள் மற்றும் விபத்தால் அல்லது இயற்கையாகவே கருவை உருவாக்கும் தகுதி இழந்த தம்பதியர் இந்தியாவுக்கு வந்து வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டு செல்லும் முறை இங்கு இதுநாள் வரை நடைமுறையில் இருந்தது. இனி அது செல்லுபடியாகாது. குழந்தைப்பேறில்லாத தம்பதிகள் மருத்துவ விசாவில் வந்து வாடகைத் தாய் முறையில் குழந்தைப் பெற்றுக் கொள்வது என்பது பாதுகாப்பான மாற்றம் எனினும் முன்னரே பின்பற்றப்பட்ட முறைகளின் மூலம் எஞ்சியுள்ள அல்லது மீதமுள்ள கருக்களை என்ன செய்வது எப்படி அவற்றை உரிமையாளர்களிடம் ஒப்படைப்பது என்பது குறித்த ஒரு தெளிவான அறிவிப்பை அரசு வெளியிட்டால் தனியார் மருத்துவமனை ஆய்வகங்களில் திரவ நைட்ரஜனில் மிதந்து கொண்டிருக்கும் மனித கருக்கள் தொடர்பான குழப்பம் ஒரு முடிவுக்கு வரும். அதோடு அதன் உடைமையாளர்களின் பரிதவிப்பும் குறையும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.