கோடி மரம் நட்டவருக்கு... தேடி வந்த பத்மஸ்ரீ!

ஒரு கோடி மரங்களை நட்ட  ஒருவரைப்   பற்றி  கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அவர்தான் தாரிப்பள்ளி ராமையா... எழுபது வயதாகும் ராமையா,
கோடி மரம் நட்டவருக்கு... தேடி வந்த பத்மஸ்ரீ!

"எத்தனை மரங்கள் நட்டிருக்கிறீர்கள்?''  என்ற கேள்வியை யாரிடமாவது கேட்டால் , "மரம் ஏதும்  நடவில்லை''  என்றுதான் அநேகமாக பதில் வரும். 
ஒரு சிலர்  ஒன்றிரண்டு மரங்களை  நட்டதாகக் கூறலாம். ஒரு கோடி மரங்களை நட்ட  ஒருவரைப்   பற்றி  கேள்விப்பட்டிருக்கிறீர்களா? 
அவர்தான் தாரிப்பள்ளி ராமையா... எழுபது வயதாகும் ராமையா, இப்படி மரங்களை நடும் மோகம் கொண்டு  சிறு வயது முதலே அலைவதினால்... அவரது சொந்த கிராமமான ரெட்டிப்பள்ளியில் அவருக்கு  கிராம மக்கள்  இட்ட பெயர் என்ன தெரியுமா? மனநிலை சரியில்லாதவர்.  ராமையாவை  யாராவது தேடி வந்தால், "யாரு... மனநிலை சரியில்லாதவரா?''  என்றுதான்  கேட்பார்களாம்.  
இப்படி  கிராமத்தவர்கள்  தன்னைக் கிண்டல் செய்வதை  கொஞ்சம் கூட  சட்டை செய்யாமல் மரம் நடுவதை ராமையா தொடர்ந்து செய்து வந்தார். பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்படும் வரை,  அந்த கிராம மக்களுக்கு  ராமையா  மனநிலை சரியில்லாதவராகவே  தென்பட்டிருக்கிறார்.  ராமையாவுக்கு  பத்மஸ்ரீ  விருது  
அறிவிக்கப்பட்டதும்  கிராம மக்கள்  மலைத்துப் போய்விட்டார்கள். 
காலை எழுந்ததும் படிப்பு  என்பது ராமையாவுக்குப்  பொருந்தாது. காலை எழுந்ததும்  சட்டைப் பையில் விதைகள்... சைக்கிள்  முழுக்க  மரக்கன்றுகளை வைத்துக் கொண்டு ... கிராமத்தைச் சுற்றிலும்  இருக்கும்  பொட்டல், புறம்போக்கு நிலங்களில் தரிசாகக் கிடக்கும்  இடங்களைத் தேர்ந்தெடுத்து  மரக்கன்றுகளை நடுவார். நட்டதுடன்  விட்டுவிடாமல்  அவை வளர்கிறதா?  என்று தினமும் நீர் ஊற்றி கண்காணிப்பார். குளம்,  வாய்க்கால் பகுதிகளில் 
விதைகளை நடுவார். இந்த பணியினை கடந்த ஐம்பது ஆண்டுகளாக கொஞ்சமும் சலிப்பில்லாமல் செய்து வருகிறார் ராமையா.
ராமையா நடும் மரங்களில்  சர்வதேசப் புகழ் பெற்ற  செம்மரங்களும்  சந்தன மரங்களும் உண்டு.  தேக்கு, வேப்ப,  ஆல மரங்களும் உண்டு. "செம்மரங்களுக்கு சந்தன மரங்களுக்கு  எல்லா நாடுகளிலும் கிராக்கி இருப்பதால்  அரசாங்கமே செம்மரங்களை  அதிக அளவில்  வளர்த்து  வருமானத்தைப் பெருக்கலாம். ஆனால் செய்வதில்லை''   என்கிறார் ராமையா.  பசுமையின்பால் ராமையாவுக்கு இருக்கும் ஆர்வத்தை உணர்ந்த கர்நாடகா பல்கலைக்கழகம் சுற்றுப்புறச்சூழலில்  முனைவர் பட்டம் வழங்கி  பாராட்டியது.
ராமையா படித்தது  பத்தாம் வகுப்பு என்றாலும்,  மரங்கள்  குறித்த நூல்கள், கட்டுரைகள்  பலவற்றைப் படித்து  தனது பசுமை அறிவை  வளர்த்துக் கொண்டுள்ளார். திருமணங்களுக்குச்  செல்லும் போது  மணமக்களுக்கு ராமையா பரிசாக  வழங்குவது  மரக்கன்றுகளைத்தான்.   
"ஒரு  சின்னஞ்  சிறு  விதையில் ஒரு பரிணாம  வளர்ச்சி மறைந்து கிடக்கிறது... விதை விரிந்து மரமாகும்போது  இந்த பூமியின் பாதுகாப்பு  உறுதி செய்யப்படுகிறது.....மரக்கன்றுகளை  நடுங்கள்... அவை உங்களைக் காப்பாற்றும்''  என்று  ராமையா  சுமார் ஐம்பது ஆண்டுகளாகச் சொல்லி வருவதை  இனியாவது  நமது  சமூகம்  காது கொடுத்துக் கேட்குமா?
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com