இதோ இன்னொரு ‘மழைநீர் மனிதர்’ திருவாரூர் வரதராஜன்!

இந்தத் தண்ணீரைக் குடிப்பதால் தன்னுடைய 71 வயதுக்கு இதுவரையிலும் அவர் ஒருமுறை கூட மருத்துவரிடம் சென்று ஒரு பைசா செலவளித்தது இல்லை என்கிறார்.
இதோ இன்னொரு ‘மழைநீர் மனிதர்’ திருவாரூர் வரதராஜன்!
Published on
Updated on
2 min read

இதோ இன்னொரு ‘மழைநீர் மனிதர்’ திருவாரூரைச் சேர்ந்த வரதராஜன்; மழை பெய்யும் போதே அதைச் சேமித்தால் பின்னாட்களில் குடிநீருக்காக வருத்தப்படத் தேவையில்லை என்கிறார் இவர். வீட்டு மாடியில் விழும் மழைநீரைச் சேமித்து தனது வீட்டுக்கு ஒரு ஆண்டுக்குத் தேவையான குடிநீரை சேகரித்து விடுகிறார் வரதராஜன். இதற்காக வீட்டிலேயே ஆராய்ச்சி நிறுவனம் அமைத்திருக்கிறார் இவர்.

இவரது வீட்டில் அமைத்திருக்கும் மழைநீர் சேகரிப்பு மாதிரிகளைப் போலவே கிட்டத்தட்ட 2548 வீடுகளில் தனது சுய ஆர்வத்தின் விளைவாக மழைநீர் சேகரிப்புக் கலன்களை இவர்  அமைத்துக் கொடுத்திருக்கிறார். இந்த முயற்சி 100 ஆண்டுகளானாலும் மக்களுக்குப் பயன் தரக்கூடியது என்கிறார் தற்போது 71 வயதாகும் வரதராஜன். மழைநீர் சேமிப்பால் மக்களுக்கு நல்ல சுத்தமான குடிநீர் கிடைக்கிறது... உதாரணமாக இந்தத் தண்ணீரைக் குடிப்பதால் தன்னுடைய 71 வயதுக்கு இதுவரையிலும் அவர் ஒருமுறை கூட மருத்துவரிடம் சென்று ஒரு பைசா கூட செலவளித்ததே இல்லை என்கிறார்.

அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு கடந்த 12 ஆண்டுகளாக இந்தப் பணியில் ஈடுபட்டு வரும் வரதராஜன் அனைவருக்கும் சுத்தமான குடிநீர் கிடைக்க வேண்டும் என்பது தான் தன்னுடைய ஆசை என்கிறார். உலக சுகாதார நிறுவனம் ஒவ்வொரு சராசரி மனிதனும் ஒருநாளைக்கு சராசரியான 3 லிட்டர் சுகாதாரமான சுத்தமான குடிநீரைக் குடிக்க வேண்டும் என்கிறது, ஆனால் இந்தியாவில் குடிநீராகப் பயன்படுத்த மழைநீரைத் தவிர நல்ல தண்ணீரே இல்லை எனும் நிலை தான் இப்போது நிலவுகிறது. மழைக்காலத்தில் வெள்ளத்தால் அவதிப் படுவது, வெயில் காலத்தில் வறட்சியில் நீரின்றித் தவிப்பது இப்படித்தான் கடந்து கொண்டிருக்கிறது இந்தியாவின் குடிநீர் தட்டுப்பாட்டுப் பிரச்னை. இதற்கொரு தீர்வு வேண்டுமானால் மக்கள் தங்களுக்குள் விழிப்புணர்வை அடைந்து மழைநீரை வீணாக்காமல் சேமித்து வைத்து ஆண்டுக் கணக்கில் குடிநீராகப் பயன்படுத்துவது தான் நல்லது என்கிறார் திருவாரூர் வரதராஜன்.

மறைந்த முதல்வர் ஜெயலலலிதா 2004 ஆம் ஆண்டு வாக்கில் மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த கடுமையான சட்டமெல்லாம் இயற்றி ஒவ்வொரு வீட்டிலும் மழைநீர் சேமிப்பு தொட்டி அமைத்து பராமரிப்பது அவசியம் என வலியுறுத்தினார். அவரது நோக்கம் என்னவோ நல்ல நோக்கம் தான் ஆனால் அதைச் செயலாக்குவதில் நடந்த முறைகேடுகளால் மக்கள் தங்களுக்குத் தாங்களே கெடுதல் செய்து கொண்டவர்களானார்கள். இனி வரும் காலங்களில் இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் குடிநீருக்கு மிகப்பெரிய தட்டுப்பாடு நிலவப்போகிறது. அத்தகைய சூழல்களைச் சமாளிக்க மக்கள் கண்டிப்பாக மழை நீரைச் சேமித்து வைத்துக் கொண்டு பயன்படுத்துவது ஒன்று மட்டுமே நல்ல பலனை அளிக்க முடியும், எனவே மழைநீர் சேமிப்புத் திட்டத்தை மிகக் கடுமையாக கடைப்பிடிக்க வேண்டும் என்கிறார் வரதராஜன். அது மட்டுமல்ல மழைநீர் சேமிப்புக்கு அரசே மானியம் வழங்க வேண்டும் எனும் கோரிக்கையையும் முன் வைக்கிறார்.
 

Source & Image courtsy: Thanthi T.V

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com