உஷார்... நாம் அருந்தும் பழச்சாறுகளில் கிருமிகள் மற்றும் ரசாயனக் கலப்படம் இருந்தால்?!

பழச்சாறு வாங்கத் தேர்ந்தெடுக்கும் போது, 100 % அவை சர்க்கரை சேர்க்கப் படாத தூய்மையான பழச்சாறுகளாக இருந்தால் நல்லது, அப்படியில்லா விட்டால் குறைந்த அளவு சர்க்கரையும் அதிக அளவு பழச்சாறும் இருக்குமாறு
உஷார்... நாம் அருந்தும் பழச்சாறுகளில் கிருமிகள் மற்றும் ரசாயனக் கலப்படம் இருந்தால்?!
Published on
Updated on
3 min read

இன்று சந்தையில் பலவிதமான பிராண்டுகளில் பழச்சாறுகளும், குளிர் பானங்களும் விற்பனைக்கு கிடைக்கின்றன. அவற்றில்  எது நமது உடல்நலனுக்கு உகந்தது? எது நமது ஆரோக்கியத்தை கெடுக்கக் கூடியது என்று நாம் யோசிப்பதே இல்லை. வீட்டுக்கு உறவினர்கள் வந்தாலும் சரி, நண்பர்களோடு பார்ட்டி என்றாலும் சரி, குடும்ப விழாக்கள், விசேஷங்கள் என்றாலும் சரி நாம் உடனே நமது வாங்க வேண்டிய பொருட்கள் லிஸ்டில் சேர்ப்பது பதப்படுத்தப்பட்ட ரெடிமேட் பழச்சாறுகளையும், குளிர்பானங்களையும் தான். எப்போதும், எந்தச் சூழ்நிலையிலும் நாம் வாங்கத் தயங்காத இந்தப் பழச்சாறுகளை ஒவ்வொரு முறையும் சோதித்து தான் வாங்குகிறோமா? என்றால் பெரும்பாலும் இல்லை என்றே பதில் கிடைக்கக் கூடும். நம்மில் வெகு சிலருக்கே ‘பெஸ்ட் பிஃபோர் யூஸ்’ எனும் அந்த ‘எக்ஸ்பையரி  டேட்’ வாக்கியத்தை வாசித்தறியும் பொறுமை இருக்கிறது. மிகப் பலரும் செய்வது காலாவதியான பழச்சாறுகளை அருந்தி ஃபுட் பாய்ஸன் ஆன பிறகு மருத்துவரிடம் கப்பம் கட்டிய பிறகே, தாம் அருந்திய பழச்சாறுகளில் கிருமித் தொற்று இருப்பதையும், ரசாயனக் கலப்படம் இருப்பதையும் அறிந்து கொள்கிறார்கள். இதை எப்படித் தடுப்பது?

ஆலோசனை தருகிறார்கள் ஃபுட் சேஃப்டி ஹெல்ப்லைன்.காம் நிறுவனர் செளரப் அரோராவும், அரிகா ரிசர்ச்( ஃபார்மஷூட்டிகல் டெஸ்டிங், ஃபுட் டெஸ்டிங்& ஹெர்பல் டெஸ்டிங்) மையத்தின் வைஸ் பிரசிடெண்ட் பவன் வாட்ஸும். அவர்களது ஆலோசனையின் படி நாம் ஒவ்வொரு பழச்சாறு மற்றும் குளிர்பானம் வாங்கும் ஒவ்வொரு முறையும் கீழ்க்காணும் சில முக்கிய அம்சங்களை கவனத்தில் கொண்டு செயல்பட்டோமானால் மோசமான குளிர்பானங்களை, காலாவதியான பழச்சாறுகளை அருந்தும் ஆபத்தில் இருந்து சாமர்த்தியமாக தப்பலாம்.

  • பழச்சாறு வாங்கத் தேர்ந்தெடுக்கும் போது, 100 % அவை சர்க்கரை சேர்க்கப் படாத தூய்மையான பழச்சாறுகளாக இருந்தால் நல்லது, அப்படியில்லா விட்டால் குறைந்த அளவு சர்க்கரையும் அதிக அளவு பழச்சாறும் இருக்குமாறு தயாரிக்கப் பட்ட ஒன்றை வாங்குவதே நல்லது.
  • பழ மூலக்கூறுகளே இல்லாமல் வெறுமே பழங்களைப் போல சுவையூட்டப்பட்ட குளிர்பானங்களை அருந்துவதை பெரும்பாலும் தவிர்த்து விடுவது நல்லது. ஏனெனில் அவை உங்களின் தாகத்தை குறைக்கப் போவதில்லை என்பதோடு அதில் எந்த விதமான சத்துக்களும் இல்லை என்பதும் நிஜம். இவ்வகை  சுவையூட்டப் பட்ட குளிர்பானங்களில் வெறும் தண்ணீரும், சர்க்கரையும் மட்டுமே உள்ளன. இவற்றை அருந்துவதற்குப் பதிலாக நாம் வெறும் தண்ணீரையே அருந்தலாம்.
  • பழங்களின் ஆயுள் மிகக் குறைவு என்பதால் பழங்கள் வெகு எளிதில் கெட்டு விடும் தன்மை கொண்டவை. அது மட்டுமல்ல, பழங்கள் உரிய நேரத்தில் பழச்சாறுகளாக்கி அருந்தப்படாமல் அந்த செயல்முறையில் சற்று தாமதம் ஏற்பட்டாலும் தயாரிப்பின் போதோ அல்லது பதப்படுத்தப்படும் போதோ எளிதில் கிருமித் தொற்று ஏற்பட வாய்ப்புண்டு. எனவே அப்படி சந்தேகம் தோன்றும் பட்சத்தில் அத்தகைய பழச்சாறுகளை கடையில் வாங்கி அருந்துவதை விட வீட்டிலேயே சுத்தமான முறையில் தயாரித்து அருந்துவதே பாதுகாப்பானது. 
  • தகுந்த முறையில் பேக்கேஜ் செய்யப்படாத பழச்சாறுகளில் எளிதில் பூஞ்சை மற்றும் பாக்டீரியாக்களின் தொற்று இருக்கும். பழச்சாறு தயாரிப்பாளர்கள் அதிவேக கன வெப்ப தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பழச்சாறுகளை பயன்படுத்துவதால் அவற்றில் கேடு விளைவிக்கக் கூடிய பாக்டீரியாக்களோ, ஈஸ்டுகளோ, பூஞ்சைகளோ இருக்க வாய்ப்பில்லை. இந்த தொழில்நுட்பம் பழச்சாறுகளின் ஆயுளை 9 முதல் 12 மாதங்கள் வரை கூட நீட்டித்து விடுகிறது. ஆனால் இவற்றால் பழங்கள் கெட்டுப் போகாமல் இருக்கலாமே தவிர நமது ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க அளவில் கெடுதல்களை விளைவிக்க அவை தயங்குவதே இல்லை.
  • பதப்படுத்தப் பட்ட பழச்சாறுகள் உணவுத்தொற்றுகளை குறைத்தாலும் சமீப காலங்களில் பழச்சாறுகள் தயாரிப்பில் பெருகி வரும் ‘கோல்டு பிரஸ்டு’ தொழில்நுட்பமானது மிகுந்த கட்டுப்பாடுகளைக் கொண்டதாக உள்ளது. இத்தகைய தொழில்நுட்பத்தில் தயாராகி வரும் பழச்சாறுகளை அவர்கள் லேபிளில் குறிப்பிட்டிருப்பதைப் போல குறைவான வெப்ப நிலையில் வைத்துப் பாதுகாக்கவில்லை என்றால் அவை வெகு சீக்கிரத்தில் கெட்டு விடும். கூடுமான வரை இவற்றைத் தவிர்ப்பது நல்லது. சில நேரங்களில் அத்தகைய பழச்சாறுகளை வாங்க நேர்ந்தாலும் அவற்றை சில்லர்கள் மற்றும் குளிர்சாதனப் பெட்டிகளில் வைத்து மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
  • ஃப்ரெஷ் ஜூஸ்களைப் பொறுத்தவரை மற்றொரு கவனிக்கத் தக்க அம்சம் அவற்றில் நீடிக்கும் பூச்சிக் கொல்லி மருந்துகள் உள்ளிட்ட ரசாயனக் கலப்பின் சதவிகிதங்களை நாம் அறிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். ஏனெனில் அத்தகைய பானங்கள் தயாரிப்பின் போது பழங்கள் நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமலிருக்க பூச்சிக் கொல்லி மருந்துகள் அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தப் படுகின்றன என்பது ஒரு பொதுவான குற்றச்சாட்டு. எனவே பதப்படுத்தப் பட்ட பழச்சாறுகள் வாங்கும் போது, எப்போதுமே அந்த பாட்டில்களின் லேபிள்களில் ஃபிக்ஸ்டு பேஸ் ஆபரேட்டர் (FBO)  உரிமம் உள்ளதா என்பதை சோதித்த பின்னரே பழச்சாறுகள் வாங்குவது என முடிவு செய்து கொள்வது நல்லது.
  • ஒவ்வொரு முறை மொத்தமாகப் பழச்சாறுகள் வாங்கும் முன்பும், அவை பேக் செய்யப்பட்டு வரும் உறைகள் மற்றும் பாட்டில்களில் ஏதேனும் சேதம் உண்டா என்று சோதிக்க வேண்டும். ஏனெனில் இத்தகைய சேதங்கள் வெகு எளிதில் பூஞ்சை மற்றும் பாக்டீரியா தொற்றை உண்டாக்கி விடத் தக்கவை. எனவே சேதமுடன் இருக்கும் பழச்சாறு பாக்கெட்டுகள் மற்றும் பாட்டில்களை புறக்கணித்து விடுவதே உத்தமம்.
  • கடைசியாக பழச்சாறு வாங்கும் ஒவ்வொருமுறையும், அவற்றின் உடல் பகுதியில் ஒட்டப்பட்டிருக்கும் லேபிளில், அந்தப் பழச்சாறுகள் அல்லது குளிர்பானங்களைத் தயாரிக்க பயன்படுத்திய மூலப் பொருட்கள் மற்றும் பயன்படுத்திய பொருட்களின் நியூட்ரிசனல் மதிப்புகள், அதில் சேர்க்கப்பட்டுள்ள சர்க்கரை அளவு, செயற்கை நிறமூட்டிகளின் அளவு, சுவையூட்டிகளின் அளவு உள்ளிட்ட விவரங்கள் அச்சிடப்பட்டிருக்கும் பகுதியைத் தெளிவாக வாசித்து அறிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். பெரும்பாலானோர் இவற்றை கவனிப்பதில்லை என்பதால் தான் மோசமான பழச்சாறு மற்றும் குளிர்பான தயாரிப்பாளர்கள் அவற்றைக் காட்டி தப்பித்து விடுகின்றனர்.

மேற்கண்ட இந்த ஆலோசனைகளை எல்லாம் பயன்படுத்திப் பார்த்து உங்களுக்குத் தேவையான, பிடித்தமான குளிர்பானத்தையோ அல்லது பழச்சாறையோ அருந்தி நலமுடன் வாழுங்கள்! 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com