பள்ளி மாணவர்களின் இரக்க சிந்தனையில் உருவான சைக்கிள் ஏர் கலப்பை பரிசு வென்ற கதை!

அவர்களது ஒரே நோக்கம் தங்களது பள்ளியின் தோட்டக்காரரை சிரமத்திலிருந்து காக்க வேண்டும். அவருக்கு நேரும் பொருளற்ற நேர விரயம் தவிர்க்கப்பட வேண்டும் என்பது மட்டுமே!
பள்ளி மாணவர்களின் இரக்க சிந்தனையில் உருவான சைக்கிள் ஏர் கலப்பை பரிசு வென்ற கதை!

குழந்தைகள் வீட்டிலிருக்கையில் துறு துறுவென  ஏதாவது வெட்டி வேலை செய்து கொண்டிருந்தார்கள் என்றால் அவர்கள் மீது கோபப்படாதீர்கள். சில நேரங்களில் அது 100%  அருமையான அறிவியல் கண்டுபிடிப்புகளாக மாறவும் வாய்ப்புகள் உண்டு. இதோ இந்த ஹரியானா பள்ளி மாணவர்களின் கண்டுபிடிப்பு கூட முதலில் அப்படித்தான் பிறரால் கேலி பேசப்பட்டது... ஆனால் இன்றோ அது அவர்களது பள்ளியின் சிறு தோட்டத்தைப் பராமரிக்கும் வலிமையான கண்டுபிடிப்பு மட்டுமல்ல அந்தப் பள்ளியின் எளிய தோட்டக்காரரின் அனாவசியமான நேர விரயத்தையும் உழைப்பு விரையத்தையும் கூட குறைத்துள்ளது.

இந்தக் கண்டுபிடிப்பைச் சாத்தியப்படுத்தி இருப்பவர்கள் ஹரியானாவில் உள்ள செயிண்ட் கபீர் உண்டு உறைவிடப் பள்ளியின் 8 ஆம் வகுப்பு மாணவர்கள். இந்த மாணவர்கள் தங்களது பள்ளி நேரத்தில் தினமும் காலை முதல் மாலை வரை பள்ளியின் தோட்டக்காரர் படும் கடும் சிரமத்தைக் கண்டனர். ஒற்றை ஆளாக பள்ளியின் சிறு தோட்டத்தை உழவும், களை நீக்கவும் அவர் மிகவும் சிரமப் பட்டுக் கொண்டிருந்தார். பள்ளிக்கு சிறு தோட்டம் என்பதால் அதனை உழவும், களைகளை நீக்கவும் டிராக்டர் போன்ற விலை அதிகமான உபகரணங்கள் தேவை இல்லை, அதே சமயம் தங்களது தோட்டக்காரரின் சிரமமும் குறையவேண்டும்.. அதற்கு என்ன செய்யலாம்? என்று யோசித்தனர். அப்போது தோன்றிய ஐடியா தான் பைசைக்கிள் ஏர்கலப்பை. காயலான் கடையில் இருந்து பழைய சைக்கிள் ஒன்றை மிகச் சல்லிசான விலைக்கு வாங்கினார்கள். முன் பகுதி சக்கரமும், ஹேண்டில் பாருடனும் கூடிய அதன் முகப்புப் பகுதியை மட்டும் தனியாகப் பிரித்து எடுத்துக் கொண்டு அதன் அடிப்பகுதியில் சிறிய கலப்பையை இணைத்து முதல் முயற்சியைத் தொடங்கி நிலத்தை உழுது பார்த்தனர். மண்ணின் கடினத் தன்மைக்கு ஏற்ப ஒரே விதமான கலப்பையல்லாமல் இரு வேறு விதமான கலப்பைகளை அதனுடன் இணைத்து உழுது பார்த்தனர், இந்த முயற்சி மிக நல்ல பலனையே அளித்தது. இந்தக் கருவி பார்ப்பதற்கு சிறுவர்கள் உருட்டி விளையாடும் சைக்கிள் டயர் விளையாட்டை நினைவூட்டினாலும் கூட அதனால் கிட்டிய பலனால் இன்று அந்தப் பள்ளியின் தோட்டக்காரருக்கு நேர விரயம் மிச்சமானதோடு சிக்கனத்துக்கு சிக்கனமும் கைகூடியது.

பள்ளியின் தோட்ட வேலையை எளிமையாக மாற்ற அவர்கள் வேறு சில ஆலோசனைகளையும் வைத்திருந்தனர். அதாவது இன்னொரு தோட்டக் காரரை பணிக்கு அமர்த்திக் கொள்வது, அல்லது சிறிய டிராக்டர் ஒன்றை வாங்குவது அல்லது சைக்கிளுக்கு பதிலாக உழுவதற்கும், களையெடுப்பதற்கும் பழைய ஸ்கூட்டர் பயன்படுத்துவது. ஆசிரியர் ஸ்மிதா அகர்வாலுடன் தீர ஆலோசித்த பின் மேற்கண்ட முயற்சிகளில் எதுவொன்றை முன்னெடுத்தாலும் அதற்கு நிச்சயம் பொருட்செலவு அதிகம். அதே பழைய சைக்கிள் என்றால் செலவு மிக மிகக் குறைவு. பள்ளியின் தோட்டக்காரரின் வேலையும் மிக எளிதாகி விடும். மிஞ்சிய நேரத்தில் அவர் இன்னும் அதிக சிரத்தையுடன் தோட்டத்திலுள்ள செடி கொடி, மரங்களைக் கவனித்துக் கொள்வார். அதோடு கூட தோட்டக்காரர் என்றால் தோட்டத்தைக்  கவனிப்பது மட்டும் தான் வேலையென்று கட்டளையிட்டு விட வேண்டியதில்லை. அவர் ஏதாவது வாசிக்க வேண்டும் அல்லது பகுதி நேர வேலையாக வேறு ஏதாவது முயற்சிகள் செய்ய வேண்டும் என தீர்மானித்தாலும் அது அனைத்துமே தற்போது சாத்தியமாகி இருக்கிறது. அதற்கு காரணம் இந்த மாணவர்களும் அவர்களது கண்டுபிடிப்பும் மட்டுமே!

இப்போது இந்த சைக்கிள் ஏர்கலப்பை கொண்டு 800 சதுர அடிகள் கொண்ட சிறு தோட்டத்தில் உழவு செய்ய முடியும். அது மட்டுமல்ல வீட்டுத் தோட்டத்தைப் பராமரிக்கவும் இது போதும். இதற்கு எரிபொருள் தேவையில்லை. பராமரிப்புச் செலவும் மிக மிகக் குறைவு. பழைய சைக்கிளை 600 ரூபாய் கொடுத்து சைக்கிள் ரிப்பேர் கடைகளில் இருந்து பெறலாம். அதிக பொருட்செலவும் இல்லை. வேலை நேரத்தை மிச்சப் படுத்தும். ஹரியானா பள்ளி மாணவர்கள் இம்மாதிரியான ஒரு உபகரணத்தை கண்டுபிடித்த ஆரம்ப நாட்களில் அவர்களைப் பாராட்டுவதற்கெல்லாம் ஆட்கள் இல்லை. பலரும் இவர்களை கேலி செய்துள்ளனர். ஆனால் மாணவர்கள் தங்களது பள்ளி மற்றும் ஆசிரியை உதவியுடன் தெரு நாடகங்கள் மூலம் பல்வேறு கிராம மக்களிடையே தங்களது கண்டுபிடிப்பைத் தொடர்ந்து பிரபலப்படுத்திக் கொண்டே இருந்தார்கள். அந்த முயற்சி வீணகவில்லை. டிசைன் ஃபார் சேஞ்ச் எனும் லாப நோக்கற்ற தன்னார்வ சேவை அமைப்பு நடத்திய ‘I CAN AWARDS 2012'  போட்டியின் பரிசுக்குரிய 20 பிரதான கதைகளில் ஒன்றாகத் தேர்வு செய்யப்பட்டது. இந்தப் போட்டியில் இதே போன்று தன்னையும் தன்னைச் சார்ந்த சமூகத்தையும் ஆரோக்கியமான வழியில் சிந்திக்கத் தூண்டும் கருத்துகள் கொண்ட மாணவர்களின் 728 கதைகள் பங்கு பெற்றன. அவற்றில் சைக்கிள் ஏர்க்கலப்பை கண்டுபிடுப்பானது முதல் 20 பிரதானக் கதைகளில் ஒன்றாகத் தேர்வானது அம்மாணவர்களின் தொடர் முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றியே!

மாணவர்களின் சைக்கிள் ஏர்கலப்பை வேலை செய்யும் முறையைக் காண...

I CAN AWARDS போட்டியின் விருதுக் குழுவில் பரிசளிக்கும் பங்குதாரர்களில் ஒன்றான டிஸ்னி நிறுவனம் இந்த மாணவர்களின் கண்ட்டுபிடிப்பிலிருந்த புதுமையைக் கண்டு வியந்து போய் அவர்களைப் பாராட்டி ஊக்குவிக்கும் வண்ணம் அவர்களது பள்ளி வளாகத்திலேயே மாணவர்களின் எதிர்காலக் கண்டுபிடிப்பு முயற்சிகளை வெற்றிகரமாக நடத்துவதற்கு வசதியாக ஆக்டிவிட்டி செண்ட்டர் ஒன்றை நிறுவித் தந்துள்ளனர்.

இதில் பாராட்டப்பட வேண்டிய இன்னொரு விசயம்... இங்கு மாணவர்களின் முதல் நோக்கம் போட்டியில் கலந்து கொண்டு தங்களது கண்டுபிடிப்புக்கான பரிசைப் பெறுவதற்காக மட்டுமே அவர்கள் இதை நிகழ்த்தவில்லை. அவர்களது ஒரே நோக்கம் தங்களது பள்ளியின் தோட்டக்காரரை சிரமத்திலிருந்து காக்க வேண்டும். அவருக்கு நேரும் பொருளற்ற நேர விரயம் தவிர்க்கப்பட வேண்டும் எனும் இரக்க உணர்வில் தான் செயிண்ட் கபீர் பள்ளி ஆசிரியையும் தங்களது வழிகாட்டியுமான ஸ்மிதா அகர்வால் துணையுடன் இதைத் தொடங்கினர். Feel- Imagine- Do- share எனும் நான்கு எளிய ஃபார்முலாவின் அடிப்படையிலான மாணவர்களின் இந்த செயல்பாடு தான் அவர்களுக்கான வெற்றியை உறுதிப் படுத்தியது. 

தமிழகப் பள்ளி மாணவர்களிடமும் இது போன்ற அருமையான கண்டுபிடிப்பு ஐடியாக்கள் இல்லாமலிருக்க வாய்ப்பில்லை. ஆனால் அதை ஸ்மிதா அகர்வால் போன்ற திறமையான அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட ஆசிரியர்கள் கண்டுபிடித்து வெளிக்கொணர வேண்டும். பெற்றோர்களும் 24 மணி நேரமும் தங்களது பிள்ளைகள் படித்துக் கொண்டே இருக்க வேண்டும். பாடத்திட்டப் புத்தகங்கள் அனைத்தையும் தலைகீழ் மனப்பாடம் செய்ய வேண்டும் எனும் அர்த்தமற்ற ஆசையை மூட்டை கட்டிக் கொண்டு போய் மெரீனாவில் வீசி விட்டு தங்களது குழந்தைகள் சுயமாகச் சிந்தித்து எதையாவது சொல்ல முற்பட்டால் அந்த யோசனைகளை முளையிலேயே கிள்ளி எரியாமல் காது கொடுத்து கேட்பவர்களாக மாற வேண்டும்.

உலகின் சாதனையாளர்கள் இப்படித்தான் உருவானார்கள்...உருவாக்கப்பட்டார்கள். எனவே நமது குழந்தைகளும்  I CAN CHANGE விருதுகளைப் பெறும் அளவுக்கு நாம் அவர்களை ஊக்குவிப்போமாக என்று உறுதியேற்போம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com