சொந்தமா, சின்னதா தொழில் தொடங்கி கணிசமா நாலு காசு சம்பாதிக்கனும்னா முதல்ல இவரைப் பிடிங்க பாஸ்!

படித்தவரா?, படிக்காதவரா? என்பதில் எங்களுக்கு பாகுபாடு இல்லை. உண்மையில் அவருக்கு தொழில் தொடங்க ஆர்வம் இருக்கிறதா? என்பதை மட்டும்தான் பார்க்கிறோம். ஐடிஐயில் படித்தவர்களுக்கும் உதவுகிறோம்.
சொந்தமா, சின்னதா தொழில் தொடங்கி கணிசமா நாலு காசு சம்பாதிக்கனும்னா முதல்ல இவரைப் பிடிங்க பாஸ்!

"சொந்தமா, சின்னதா ஒரு தொழில் தொடங்கி, நாமும் கணிசமா நாலு  காசு சம்பாதிக்கணும் என்ற எண்ணம் பெரும்பாலானவர்களுக்கு உண்டு. அதற்கு சரியான வழிகாட்டியில்லாமல் வாய்ப்புகளை இழந்தவர்கள் பலர். அப்படியே தட்டுத் தடுமாறி தொழில் தொடங்கினாலும்; எத்தனை பேர் தொடர்ந்து தங்கள் தொழிலைத் தக்க வைத்துக் கொள்கிறார்கள் என்றால் அதற்கும் விடையில்லை. இது எல்லாவற்றையும்விட முக்கியமானது தொழில் தொடங்க தேவையான மூலதனம். அதற்காக நிதியுதவி தேடி வங்கிகளை அணுகி அலுத்துப் போனவர்களே அதிகம். அப்படி அலுத்து சலித்து வருபவர்களைத் தாங்கி பிடித்து தோள் கொடுத்து நிற்பதுதான் எங்கள் "பாரதிய யுவ சக்தி டிரஸ்ட்'(Byst) என்கிறார் லஷ்மி வி.வெங்கடேசன்.  இந்த ஆண்டு வெள்ளிவிழா ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் மகிழ்ச்சியில் இருக்கும் இவர், முன்னாள் குடியரசு தலைவர் ஆர்.வெங்கட்ராமனின் மகள் ஆவார்.  இது குறித்து அவர் நம்முடன் பகிர்ந்து கொண்டவை:

"1990 -இல் நான் அப்பாவோடு இங்கிலாந்து சென்றிருந்தேன். அங்கே, பக்கிங்காம் அரண்மனையில் மூன்று நாட்கள் மாநில விசிட்டாக தங்கியிருந்தோம்.  அப்போது  இளவரசர் வேல்ûஸ... சந்தித்தோம். அந்த சமயத்தில் இங்கிலாந்தில் இளைஞர்களுக்காக அவர்  1986-லிருந்து  ஒரு திட்டத்தை உருவாக்கியிருந்தார். அதாவது வேலையில்லாத இளைஞர்களுக்கு சிறு தொழில் தொடங்க நிதி உதவி செய்து அவர்கள் தொழில் மேம்பட ஓர் வழிகாட்டியையும் அவருடன் இருக்கும்படி செய்திருந்தார். அதில் சிலர் அடுத்தவேளை உணவிற்கே போராடிக் கொண்டிருந்தவர்கள். இந்த திட்டத்தின் மூலம் பயனடைந்து படிப்படியாக வளர்ந்து நான் சந்திக்கும் போது 100-200 பேருக்கு இவர்கள் வேலை கொடுத்து வந்தார்கள். அது என்னை மிகவும் கவர்ந்தது. இந்தியா திரும்பியதும் அதுபோன்ற திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று நினைத்தேன். 

ஆனால் அப்போது அப்பா அரசு பதவியில் இருந்ததால், அரசு சார்ந்து இல்லாமல் ப்ரைவேட் செக்டராக தொடங்க வேண்டும் என்று நினைத்தேன். அதற்காக  டாடா நிறுவனத்தை அணுகினேன். அந்த சமயத்தில் ஜே.ஆர்.டி டாடா தங்களது ஊழியர்களுக்கு மட்டுமல்லாமல் நாட்டு மக்களுக்காகவும் நிறைய உதவிகள் செய்துவந்தார். அதனால் அவரை அணுகி என் திட்டத்தைப் பற்றி அவரிடம் கூறி ஆலோசனையும், வழிகாட்டுதலும் வேண்டும் என்றேன்.  அதைவிட முக்கியமாக டாடா நிறுவனத்தில் இருந்து பிசினஸை சொல்லிக் கொடுக்கும் வழிகாட்டிகள் வேண்டும் என்றேன்.  அவருக்கு இந்த திட்டம் மிகவும் பிடித்திருந்தது.  உடனே அவர், "நாம சேர்ந்து செய்வோமே'' என்றார். இப்படித்தான் Byst தொடங்கியது. தில்லியில்தான் முதலில் ஆரம்பித்தோம். தற்போது சென்னை உள்பட ஆறு மாநிலங்களில் Byst இயங்கி வருகிறது. 

Byst-யின் தீம் என்னவென்றால் 18- 35 வயதிற்குள் இருக்கும் வேலையில்லாத இளைஞர்களுக்கு ஏதாவது சிறுதொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்து எங்களை அணுகினால் அவர்கள் என்ன  தொழில் தொடங்க நினைக்கிறார்களோ அந்தத் தொழில் குறித்த ஆலோசனை அளித்து தொழில் தொடங்குவதற்கான  நிதியுதவியும் செய்து வருகிறோம்.

உதாரணமாக சென்னையில் அர்ச்சனா என்ற  பெண்மணியைச் சந்தித்தோம். அவர் ஒரு பட்டதாரி.  தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து பின் ஏதோ சூழ்நிலை காரணமாக வேலையை விட்டுவிட்டார்.  அதனால் அவரது குடும்பம் மிகவும் வறுமையில் இருந்தது. அவர், சிறு தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணத்தில் பல வங்கிகளை அணுகி அலுத்துப்போன நிலையில்தான் எங்களை அணுகினார். அவருக்கு Byst மூலம்  நிதி உதவியும், மோகன் சிதன் என்ற வழிகாட்டியையும் அவருக்கு துணையாக கொடுத்தோம். அவர், கேட்டிரிங் தொழில் தொடங்கி, உணவு தயாரித்து ஐடி நிறுவனங்களில் விற்பனை செய்து வருகிறார். தற்போது  அவரிடம் 92 ஊழியர்கள் பணிபுரிகிறார்கள். ஆண்டிற்கு 2.2.கோடி ரூபாய் வருமானம் ஈட்டி வருகிறார்.

அதுபோன்று  தெரு ஓரங்களில் சமோசா விற்பவர் ஒருவரை சந்தித்தோம். எட்டாவது வரைதான் படித்த அவருக்கும் நிதியுதவி செய்தோம். ஒரு வழிகாட்டியையும் பக்கபலமாக கொடுத்தோம். இன்று அவர் ஆண்டுக்கு 1 கோடி ரூபாய் வருமானம் ஈட்டுகிறார். வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறார். 

படித்தவரா?, படிக்காதவரா? என்பதில் எங்களுக்கு பாகுபாடு இல்லை. உண்மையில் அவருக்கு தொழில் தொடங்க ஆர்வம் இருக்கிறதா? என்பதை மட்டும்தான் பார்க்கிறோம்.  ஐடிஐயில் படித்தவர்களுக்கும் உதவுகிறோம்.

அதற்காக, ஐடிஐ கல்வி நிறுவனங்களுக்குச் சென்று பேசுகிறோம். "நீ இன்று இங்கே இருக்கிறாய்; நாளை நீ என்ன வேணாலும் ஆகலாம்' என்பதை மோட்டிவேட் செய்கிறோம்.

அவ்வப்போது கிராமங்களுக்குச் சென்று பிசினஸ் ஐடியா போட்டி நடத்துகிறோம். காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்துமட்டும் 1000 ஐடியா வந்தது. அவ்வளவு பேரும் பெண்கள். ரொம்பவும் ஆச்சரியமாக இருந்தது. அதில் சிறந்த 100 ஐடியாக்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குப் பயிற்சியளித்து அவர்களை தொழில் முனைவோராக உருவாக்கியிருக்கிறோம்.

சமீபகாலமாக அசாமிலும் அரசு உதவியுடன் நடத்தி வருகிறோம்.  2 ஆண்டுகளுக்குள் 1000 தொழில் முனைவோரை உருவாக்கியிருக்கிறோம். ஒடிசாவில் மைனிங்கிலிருந்து வேலை இழந்தவர்களுக்கு உதவியிருக்கிறோம். அங்கு 200 தொழில் முனைவோரை உருவாக்கியிருக்கிறோம். இதுவரை, 5,500 மக்களுக்கு தொழில் தொடங்க வாய்ப்பளித்திருக்கிறோம். ஆனால் இதில் எங்களுக்கு திருப்தியில்லை. இதை லட்சங்களில் உருவாக்க வேண்டும் என்பதே லட்சியம்.

இது ஒரு குரு - சிஷ்ய பரம்பரை வகுப்பைச் சார்ந்தது.  பணம் கிடைத்து வழிகாட்டி இல்லை என்றாலும், வழிகாட்டி கிடைத்து பணம் இல்லை என்றாலும் நாம் தொழில் தொடங்குவது சிரமம்.  அந்த வகையில், புதிதாக தொழில் தொடங்கவும் வாய்ப்பு தருகிறோம். செய்து கொண்டிருக்கிற தொழிலை விரிவு படுத்தவும் வாய்ப்பு தருகிறோம். அல்லது   வழிகாட்டியாக இருக்க விரும்புகிறேன் என்று வருபவர்களுக்கும் வாய்ப்பு தருகிறோம்'' என்றார்.

இவரது அமைப்பைத்  தொடர்பு கொள்ள Byst  - 9677040509.

- ஸ்ரீதேவிகுமரேசன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com