பிளாஸ்டிக் பைகளுக்கு விடை கொடுப்போம்- தினமணி நடுப்பக்க கட்டுரை!

தேநீர்க் கடைகளில் செம்பு, பித்தளை, அலுமினிய குவளைகளையும், பாக்குமட்டையால் செய்யப்பட்ட பொருள்களையும் பயன்படுத்தலாம். கேரளத்தில் மக்கக்கூடிய காகிதப் பைகளில் பால் அடைத்து விற்பனை செய்யப்படுகிறது.
பிளாஸ்டிக் பைகளுக்கு விடை கொடுப்போம்- தினமணி நடுப்பக்க கட்டுரை!

ஒரு காலத்தில் கடைகளுக்கு பொருள்களை வாங்கச் செல்வோர் மஞ்சள் துணிப் பைகளையும், சிற்றுண்டிகளை வாங்கச் செல்லும்போது, சாம்பார், சட்டினி உள்ளிட்டவற்றை வாங்குவதற்காக பையுடன் சில்வர் பாத்திரங்களையும் எடுத்துச் சென்றனர். ஆனால், இன்று நிலைமை தலைகீழாக உள்ளது. உணவகங்களில் சாப்பாட்டுக்கு இலைகளை பயன்படுத்துவது என்பது அரிதாகிவிட்டது.

பல உணவகங்களில் நெகிழியால் (பிளாஸ்டிக்) மெருகூட்டப்பட்ட இலைகளையும், மெலிதான நெகிழித் தாள்களையும் இலையாக பயன்படுத்துவதை கண்கூடாக பார்க்க முடிகிறது. உணவுப் பொட்டலம் வாங்க வருவோரும் அனைத்தையுமே நெகிழிப் பைகளில் ஸ்டைலாக வாங்கிச் செல்லவே விரும்புகின்றனர்.

இந்த நெகிழிப் பைகளில் சூடான உணவுப் பொருள்கள் கட்டப்பட்டால், அது நெகிழிப் பையுடன் வேதி வினைபுரிந்து புற்று நோயை உருவாக்கும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டாலும் பயனில்லை.

தமிழகத்தில் நகர்ப்புறங்களிலும், கிராமப்புறங்களிலும் சேகரிக்கப்படும் குப்பைகள் மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரிக்கப்படுகிறது. மக்கும் குப்பையை தொடர்ந்து ஓரிடத்தில் சேகரித்து வைக்கும்போது அதிலிருந்து மீத்தேன் வாயு உருவாகிறது.

இந்த வாயுவானது எளிதில் தீப்பற்றி எரியும் தன்மை கொண்டது என்பதால், குப்பை மேடுகளில் தீ விபத்து ஏற்பட்டால், அது தொடர்ந்து எரிந்து அந்தப் பகுதியையே புகை மண்டலமாக மாற்றுகிறது.

இதேபோன்று சென்னை, விழுப்புரம், சேலம், திருநெல்வேலி உள்பட தமிழகத்தின் பல்வேறு பெரிய நகரங்களில் குப்பைக் கிடங்குகளில் ஏற்பட்ட தீ விபத்தையும், அதனால் மக்கள் பட்டு வரும் இன்னல்களையும், குப்பைக் கிடங்குகளை வேறு இடங்களுக்கு மாற்றக் கோரி, அவர்கள் நடத்தும் போராட்டங்களையும் நாம் ஊடகங்கள் வாயிலாக அறிகிறோம்.

நெகிழிப் பொருள்களில் 10 சதவீத பொருள்களே மீண்டும் பயன்படுத்தப்படுகின்றன. 90 சதவீத பொருள்கள் எரிக்கப்படுகின்றன.

மக்கும் குப்பையுடன் மக்காத குப்பையான நெகிழிப் பைகள், ரப்பர், கண்ணாடி, உலோகங்கள், வேதிப் பொருள்கள் உள்ளிட்டவையும் சேர்ந்து எரியும்போது, இந்தக் குப்பையில் இருந்து வரும் புகையை மனிதன் சுவாசித்தால், சுவாசக் கோளாறு, கண் எரிச்சல், புற்று நோய் உள்பட பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன.

உலகம் முழுவதும் கடலில் ஓர் ஆண்டில் 8 மில்லியன் டன் அளவுக்கு நெகிழிக் குப்பைகள் கொட்டப்படுகின்றனவாம். இது ஒவ்வொரு நிமிடத்துக்கும் ஒரு லாரி குப்பையை கடலில் கொட்டுவதற்கு சமமாகும். இதே நிலை நீடித்தால் வரும் 2030-ஆம் ஆண்டில் இந்த குப்பையின் அளவு இரு மடங்காகவும், வரும் 2050-ஆம் ஆண்டில் நான்கு மடங்காகவும் உயரும்.

தற்போது கடலில் 150 மில்லியன் டன்னுக்கும் அதிகமான நெகிழிக் குப்பை உள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் நெகிழிப் பொருள்களின் பயன்பாடு 20 மடங்காக அதிகரித்துள்ளது என்று உலக பொருளாதார பேரவை அமைப்பு வெளியிட்டுள்ள தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோல, மத்திய தரைக்கடல் பகுதியில் ஆயிரம் டன்னுக்கும் அதிகமான நெகிழிக் குப்பை மிதப்பதாகவும், இந்தக் கடலில் வாழ்கின்ற மீன்கள், பறவைகள், ஆமைகள், திமிங்கலங்களின் வயிற்றிலிருந்து பிளாஸ்டிக் துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன்,வட ஐரோப்பிய கடற்கரையோரங்களில் வளர்ந்த சிப்பி வகை உயிரினங்களின் வயிற்றிலும் மிகச் சிறிய பிளாஸ்டிக் துகள்கள் காணப்படுவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 15,342 டன்னுக்கும் அதிகமான நெகிழிக் குப்பை உருவாவதாகவும், இதில் 9,205 டன் குப்பை மறுசுழற்சி செய்யப்படுவதாகவும், 6137 டன் குப்பை அப்படியே விடப்படுவதாகவும் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறைக்கான இணை அமைச்சர் அனில் தவே கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

நெகிழிப் பொருள்கள் தயாரிக்கப்படும்போதும், அவை மறு சுழற்சி செய்யப்படும்போதும் வெளியேறும் வாயுக்கள் நச்சுத்தன்மை உடையவை என்பதால் அந்தத் தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக நெகிழிப் பைகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகம் ஏற்படுகிறது.

கால்வாய்களில் நெகிழிப் பைகள் அடைத்துக்கொள்வதால் நீர் வழிகள் அடைக்கப்பட்டு, மழைக் காலங்களில் வெள்ளப் பெருக்கு போன்ற அபாயங்கள் ஏற்படுகின்றன.

நெகிழி உறைகள் சுற்றப்பட்டு வரும் உணவுப் பொருள்களான சாக்லேட், பால்கோவா போன்றவற்றில் நெகிழி வேதிப் பொருளான பென்சீன் வினைல் குளோரைடு கலந்து விடுகிறது. இது சிறுவர்களுக்கு புற்று நோயை ஏற்படுத்துவதாக மருத்துவத் துறையினர் கூறுகின்றனர்.

எனவே, ஒருமுறை பயன்படுத்தியபின் தூக்கி எறியப்படும் நெகிழிப் பொருள்களை பயன்படுத்துவதை நாம் தவிர்க்க வேண்டும். ஒருமுறை பயன்படுத்தப்படும் வகையில் உருவாக்கப்படும் நெகிழிப்பைகள் தீமையையே தருகின்றன.

இதற்கு மாற்றாக இலை, சணல், காகிதப் பை, துணிப் பை உள்ளிட்டவற்றை பயன்படுத்தலாம்.

தவிர்க்க முடியாத நேரத்தில் 40 மைக்ரான் தடிமனுக்கும் மேற்பட்ட தடித்த நெகிழிப் பைகளை பயன்படுத்த வேண்டும். இவை மறுசுழற்சி செய்ய பயன்படக்கூடியவை. இதனால் 40 மைக்ரானுக்கும் குறைவான புதிய நெகிழிப் பைகளின் உருவாக்கம் குறையும்.

தேநீர்க் கடைகளில் செம்பு, பித்தளை, அலுமினிய குவளைகளையும், பாக்குமட்டையால் செய்யப்பட்ட பொருள்களையும் பயன்படுத்தலாம். கேரளத்தில் மக்கக்கூடிய காகிதப் பைகளில் பால் அடைத்து விற்பனை செய்யப்படுகிறது. இதே தொழில்நுட்பத்தை தமிழகத்திலும் பின்பற்ற அரசு உடனடியாக முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com