நம்பிக்கையே அழகு! ரேஷம் கானின் வாழ்க்கை சொல்லும் பாடம்

அவர் ஒரு அழகான இளம் பெண். வர்த்தகம் படிக்கும் மாணவி. மாடலாகி புகழ் பெற வேண்டும்
நம்பிக்கையே அழகு! ரேஷம் கானின் வாழ்க்கை சொல்லும் பாடம்
Published on
Updated on
2 min read

அவர் ஒரு அழகான இளம் பெண். வர்த்தகம் படிக்கும் மாணவி. மாடலாகி புகழ் பெற வேண்டும் என்ற கனவுகளை உடையவர். அதை நோக்கி ஒவ்வொரு அடியும் எடுத்து வைத்துக் கொண்டிருந்த சமயத்தில் தான் அவர் வாழ்க்கையில் அந்த கோர சம்பவம் நடந்தது. கடந்த ஜூன் மாதத்தில் அவர் முகத்தில் ஆசிட்டை வீசியெறிந்தான் ஒருவன்.

அவள் பெயர் ரேஷம் கான். லண்டனில் பிறந்து, வாழும் முஸ்லிம் பெண். அவரின் 21-ம் பிறந்த நாள் அன்று லண்டனில் அவருடைய உறவினர் ஜமீல் முக்தாருடன் காரில் பயணம் செய்யும் போது ஜான் தாம்லின்  என்றவன் கார் ஜன்னல் வழியாக அவர்களை ஆஸிட் வீசி தாக்கினான். இருவருக்கும் முதலில் என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்ள முடியவில்லை. ஆசிட்டின் தீவிரத்தால் துடித்தனர். இருவரும் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இருவரில் படுகாயம் அடைந்தவர் ஜமீல்.

அதன் பின் தீவிர சிகிச்சைக்குப் பிறகு ரேஷம் வீடு திரும்பினார். ஆனால் அவர் அழகு? பெண்களுக்கு உயிரை விடவும் பெரிதாக நினைப்பது அவர்களின் தோற்றத்தைத் தான். ஆனால் இதுபோன்று கொடூரச் செயல்களால் தங்களின் இயல்பை இழந்தவர்கள் மனநிலையில் பெரிதும் பாதிப்படைவார்கள். ஆனால் ரேஷம் சோர்ந்துவிடவில்லை. இழப்பு அதிகம்தான் என்றாலும் எல்லாவற்றையும் சரி செய்துவிடலாம் என்று முடிவு செய்தார். ஏற்கனவே டிவிட்டரிலும் ஃபேஸ்புக்கிலும் இயங்கிக் கொண்டிருந்தவர் ரேஷம் ஆன்லைன் என்று தனக்கொரு புதிய வலைத்தளத்தை தொடங்கினார். அதில் அவர் I am more than just my looks, whether that be glam or scarred என்று பதிவிட்டுள்ளார்.

தன்னைப் பற்றி பல விஷயங்களை அதில் அவர் கூறியிருக்கிறார். அதுவும் ஆசிட் வீச்சுக்குப் பிறகான மனநிலையை பதிவு செய்தார். சில நாட்கள் மன அழுத்தத்துடனும், சில நாட்கள் நம்பிக்கையுடனும் காலம் கடத்தி வருகிறார் ரேஷம். முகத்தை சீர் செய்யும் சிகிச்சை ஒரு புறம் நடந்து கொண்டிருக்க, தன்னை இந்நிலைக்கு உள்ளாக்கியவனை சட்டரீதியாக அணுக உள்ளதாகக் கூறியிருக்கிறார். நவம்பர் மாதம் ஸ்நாரெஸ்புரூக் கிரவுன் நீதிமன்றத்தில் இந்த வழக்குக்காக அவர் ஆஜராகவுள்ளார்.

இதை மதரீதியான பிரச்னையாக அணுக வேண்டாம் என்றும் அவர் தனது ஃபேஸ்புக் பதிவில் பகிர்ந்திருந்தார். படிப்படியாக குணமாகிவந்த வருவதை வலைத்தளத்தில் பகிர்ந்த கொண்டார். ஆஸிட் வீச்சு பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிப்பதற்கு அரசோடு ரேஷம் கான் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

ஜான் தாம்லின்
ஜான் தாம்லின்

ரேஷம் என்ற பெயரில் தயாரிக்கப்பட்ட ‘உரிமம் இல்லாமல் ஆஸிட் விற்பதை தடை செய்யுங்கள்’ என்ற மனுவில் இதுவரை ஐந்து லட்சம் பேருக்கு அதிகமானோர் கையெழுத்திட்டுள்ளனர்.

ஈத் பெருவிழா அன்று தனது சமீபத்திய புகைப்படத்தை பேஸ்புக்கில் வெளியிட்டார் ரேஷம். அவருடைய அசாத்தியமான தைரியமும் எது நடந்தாலும் தளராத மனதும் தான் மீண்டும் அவரை பழைய நிலைக்கு கொண்டு வந்துள்ளது. தனது ஒரு பக்க முகம் மட்டுமே புகைப்படத்தில் தெரியும் படி எடுத்த ரெஷம் விரைவில் முற்றிலும் குணமானதும் முகத்தை நேராக கேமராவுக்குக் காண்பிப்பேன் என்று கூறியுள்ளார் ரேஷம். 

மருத்துவமும் சுற்றியுள்ள நண்பர்களும் சமூக வலைத்தளங்கள் மூலம் அவருக்குக் கிடைத்த ஆதரவும், சிகிச்சைக்கான நிதி உதவியும் ரேஷமின் கனவுகளை மீண்டும் கட்டமைக்க உதவி செய்துவருகின்றன. விரைவில் அவர் பூரண குணம் அடைவார் என்று வாழ்த்துகின்றனர் அவருக்காக பிரார்த்தனை செய்யும் பல்லாயிரணக்கான பதிவர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.