இதென்ன ட்ராகன்? தெரிந்து கொள்ள தொடர்ந்து படிக்கவும்!

இனிப்பு குறைவாகவும், சத்துள்ளதாகவும் கருதப்படும் டிராகன் பழத்தின் சுவை சிலருக்குப் பிடிக்கவில்லை
இதென்ன ட்ராகன்? தெரிந்து கொள்ள தொடர்ந்து படிக்கவும்!


இனிப்பு குறைவாகவும், சத்துள்ளதாகவும் கருதப்படும் டிராகன் பழத்தின் சுவை சிலருக்குப் பிடிக்கவில்லை என்றாலும், இன்று உலகம் முழுவதும் உடல் ஆரோக்கியத்திற்காக  விரும்பிச் சாப்பிடும் பழமாக டிராகன் பழம் பிரபலமாகி வருகிறது.

இந்தப் பழம் முற்றிலும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி ஆவதாக சிலர் கருதுகிறார்கள். இந்த டிராகன் பழம் பெரும்பாலான சூப்பர் மார்க்கெட்டுகளில் இடம் பெற்றிருப்பதைப் பார்த்த கர்நாடகாவின் பெலகாவியை சேர்ந்த விவசாயி மகாதேவ் கோலேகர், இதைப்பற்றி இணையதளத்தில் தகவல்களைச் சேகரித்தபோது, இந்தியாவிலேயே பல மாநிலங்களில் இது குறைந்த நிலப்பரப்பில் நீர் அதிகம் தேவையின்றி விளைந்துவரும் தாவரம் என்பது தெரிய வந்தது.

ஏற்கெனவே பத்தாண்டுகளுக்கு முன்பே  குடகு மாவட்டத்தில் தனியார் தோட்டமொன்றில் டிராகன் பழம் பயிரிடப்பட்டு விற்பனை  செய்யப்படுவதும் தெரிந்தது.   மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களுக்கும் சென்று டிராகன் பழம் விளைவிக்கும் பண்ணைகளைப் பார்வையிட்டு விவசாயம் செய்யும் முறைகளையும் கண்டறிந்தார்.

பின்னர் அவரே கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திரா  மாநிலங்களில் 30 - க்கும் மேற்பட்ட டிராகன் பழத் தோட்டங்களை உருவாக்கினார். தொடர்ந்து கர்நாடகாவில் பல இடங்களில் டிராகன் பழத் தோட்டங்கள் உருவாகின. தும்கூரில் உள்ள மத்திய வேளாண்துறை பரிசோதனை மையம், இந்த பழங்களைப் பற்றி ஆய்வு செய்தபோது,  தகுந்த கவனிப்பும், பராமரிப்பும் இருந்தால் சுலபமாக வளரக் கூடியது என்றும் தேவையான அளவு பழங்களைத் தரும் தாவரம் இது என்றும் உறுதி செய்தது.

ஓர் ஏக்கருக்கு நான்கு முதல் ஐந்து லட்சம் ரூபாய் முதலீடு செய்து, 450 கல் தூண்களை அமைத்து 1800 செடிகளைப்  பயிரிடலாம். இவை வளர்வதற்கு சூரிய வெளிச்சம் மிகவும் தேவை. இத்தாவரங்களை பூச்சிகளோ, நோய்களோ தாக்கும் அபாயமும் மிகக் குறைவு. மற்ற பழ தாவரங்களைப் போலன்றி  15 மாதங்களுக்குள்ளாகவே பழங்கள்  காய்க்கத் தொடங்கும். 3 ஆண்டுகளில் முழுமையான அளவில் பழங்களை அறுவடை செய்யலாம். ஓர் ஏக்கருக்கு சுமார் 5 டன் பழங்கள் உற்பத்தியாகின்றன.

மே மற்றும் செப்டம்பர் மாதங்களில்  அறுவடையாகும் இந்தப் பழங்களை விவசாயிகள் நேரடியாகவே சூப்பர் மார்க்கெட்களுக்கு விற்பனை செய்கின்றனர். மார்க்கெட்டில் கிலோ 80 முதல் 100 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இந்தியாவிலேயே விளையும் டிராகன் பழம் வெள்ளை மற்றும் சிவப்பு தோலுடன் கிடைக்கின்றது. இறக்குமதி செய்யும் பழங்களை விட சுவையும், இனிப்பும் அதிகம் என்பதால் உள்ளூர்த் தேவைகளுக்கு ஏற்ப பயிரிடத்தொடங்கினால் இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று  கருதுகிறார்கள்.

விவசாயிகளும், விஞ்ஞானிகளும் இது லாபமளிக்க கூடிய தாவரம் என்று கருதினாலும், எதிர்கால மார்க்கெட் நிலவரத்தைப் பார்க்கும்போது, மக்களிடமும், மார்க்கெட்டிலும் தேவையான அளவில் டிராகன்  பழத்திற்கு வரவேற்பு அதிகரிக்கவில்லை என்பது தெரிந்தது. அதனால் தவறான வாக்குறுதிகளை நம்பி, நர்சரி ஏஜெண்டுகள் பணத்திற்காக ஆசைப்பட்டு விற்பனை செய்யும் டிராகன் பழச் செடிகளை வாங்கி, அதிக அளவில் முதலீடு செய்யாதீர்கள் என்று வேளாண்துறை மையம் எச்சரித்துள்ளது. கவர்ச்சியும், சத்துகளும்  கொண்ட இந்தப் பழத்தைப் பற்றியும், பயிரிடும் முறைகளைப் பற்றியும் மேலும் ஆராய்ச்சிகள் நடந்து  வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com