உங்கள் பிரச்னை எதுவாக இருந்தாலும் அதற்கு தீர்வு இதோ

குடும்ப வாழ்க்கையிலும், பணி புரியும் அலுவலகத்திலும் அன்றாடம் நாம், சிறியதும், பெரியதுமான பல பிரச்னைகளைச் சந்திக்கிறோம்.
உங்கள் பிரச்னை எதுவாக இருந்தாலும் அதற்கு தீர்வு இதோ

குடும்ப வாழ்க்கையிலும், பணி புரியும் அலுவலகத்திலும் அன்றாடம் நாம், சிறியதும், பெரியதுமான பல பிரச்னைகளைச் சந்திக்கிறோம். பணப் பிரச்னையிலிருந்து, மனப் பிரச்னை வரை இதில் அடங்கும். அவற்றில் சிலவற்றிற்கு உடனடித் தீர்வு தேவையாக இருக்கும். சிலவற்றை சில காலம் தள்ளிப் போடலாம். ஆனால், தீர்வு காணப்படாத பிரச்னைகள், சுமை போன்றவை. தீர்வு தள்ளிப் போடப்படும் சிறிய பிரச்னைகள்கூட, பெரிய அளவில் வளர்ந்து, தீர்வு எல்லைக்கு அப்பால் நகர்ந்து விடும் வாய்ப்புகள் அதிகம்.

வாழ்க்கையே பிரச்னையா போச்சு' என்று நம்மில் பலர் புலம்புவதை கேட்கிறோம். இம்மாதிரி நபர்கள், பெரும்பாலும் சுய நம்பிக்கையை இழந்தவர்களாக இருப்பார்கள். ஏனென்றால், நமக்கு மட்டும் தெரிந்த நம் பிரச்னைகளுக்கு நாம்தான் தீர்வு காண வேண்டும் என்பதை இவர்கள் அறிந்திருந்தாலும், அதற்குரிய முடிவுகளை எடுக்க அஞ்சி பதுங்குவது, சுய நம்பிக்கை இழப்பிற்கான முக்கிய அறிகுறியாகும். 

ஒவ்வொரு பிரச்னைக்கும் நிச்சயமாக ஓர் ஊற்றுக் கண் இருக்கும். பிரச்னைகள் என்பவை நம் தவறுகளால் உருவாக்கப்பட்டதாக இருக்கலாம். அல்லது, பிறரால் ஏற்படுத்தப்பட்டிருக்கலாம். ஒவ்வொரு வினைக்கும் அதே வலிமையோடு கூடிய எதிர் வினை இருக்கும். அறிந்தோ, அறியாமலோ நாம் ஒருவருக்கு பிரச்னை ஏற்படுத்தியிருந்தால், அதே வேகத்தோடு அது சார்ந்த மற்றொரு பிரச்னை நம்மைத் தாக்கும் என்பது இயற்கையின் நியதி. நாம் பிறருக்கு எந்தவிதப் பிரச்னைகளையும் ஏற்படுத்தாமல் இருந்தாலே, நம்மை நோக்கி பிரச்னைகளை நகர விடாமல் தடுக்கலாம். 

பிரச்னைகள் என்பது அனைவரையும் தாக்கும் ஓர் ஆயுதம் என்றாலும், அதை எதிர்கொள்ளும் ஆயத்தம் மற்றும் சாமர்த்தியத்தை வளர்த்துக் கொள்வதில்தான், நம் வாழ்க்கையின் வெற்றி தோல்விகள் அடங்கி இருக்கின்றன எனலாம். 

நாம் சந்திக்கும் பிரச்னைகள் அனைத்தும், வெவ்வேறு உருவில், அதற்குரிய வலிமை பெற்றிருக்கும் என்பதால், அவற்றுக்கான தீர்வுகளும் ஒரே மாதிரியாக இல்லாமல், பிரச்னையின் தன்மைக்கு ஏற்ப, சூழ்நிலைக்கு ஏற்றவாறு வெவ்வேறு விதமாக அமையும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஒரு பிரச்னைக்கான தீர்வை மற்றொரு பிரச்னைக்குப் பயன்படுத்தினால், அது மற்றுமொரு பிரச்னைக்கு வித்திட்டு விடும் அபாயம் உண்டு என்பது அனுபவப்பூர்வமான உண்மையாகும். 

நாம் சந்திக்கும் பல பிரச்னைகளுக்கு மற்றவரை குறை சொல்வதையே நம்மில் பலர் வழக்கமாக கொண்டிருக்கிறோம். உதாரணமாக, அலுவலகத்தின் ஊதிய மற்றும் பதவி உயர்வு வாய்ப்புகள் நழுவிப் போனால், அந்த பிரச்னைக்கு உயர் அதிகாரியின் காழ்ப்புணர்ச்சிதான் காரணம் என்று மற்றொருவர் மீது பழியைப் போடுவோம். 

ஒரு பணியில் சேர்ந்தால், இடமாற்றம் என்பது பெரும்பாலும் இருக்கும். அம்மாதிரி பணி இடமாற்றங்களை பலர் ஒரு பிரச்னையாக நினைத்து, அதை பூதாகாரபடுத்தி, தங்களுக்கும், தங்களை சேர்ந்தவர்களுக்கும் டென்ஷனை ஏற்படுத்திக் கொள்வார்கள். ஆனால், சிலர், பணி இடமாற்றங்களை, தங்களுக்கு கிடைத்த அரிய வாய்ப்புகளாக கருதி, தங்களை சார்ந்திருப்பவர்களையும் அதற்கு தயார்ப் படுத்துவார்கள் . பதவி உயர்வு வாய்ப்புகள் எழும்பொழுது, பெரும்பாலான நிறுவனங்கள், ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பணிபுரிந்த அனுபவ சாலிகளுக்குத்தான் முன்னுரிமை அளிக்கிறார்கள். ஆகவே, நிகழ்காலத்தில் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு என்பது, நமக்கு நாமே எதிர்காலப் பிரச்னைகளை உருவாக்கிக் கொள்கிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

நிறுவனத்தின் ஆள் குறைப்பு கொள்கையால், திடீர் பணி நீக்கம் செய்யப்படுவது என்பது எதிர்பாராத ஒரு நிகழ்வாகும். இது ஒரு வாழ்வாதார பிரச்னைதான். ஆனால், அதையே நினைத்து நொடிந்து விடாமல், அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்று யோசிப்பதுதான், பிரச்னையைத் தாண்டும் முதல் கட்டமாகும். 

நண்பர் ஒருவருவருக்கு ஐ.டி. நிறுவனத்தால் பிங்க் ஸ்லிப் (Pink slip) வழங்கப்பட்ட மறுநாளே, சுற்றம், சூழல், நண்பர்கள் அனைவருக்கு அதை அறிவித்து, மேற்கட்ட நடவடிக்கைகளுக்கான ஆலோசனைகளை கேட்டறிந்தார். அவர்களுடைய ஆலோசனையின் அடிப்படையில், தனக்கு ஏற்கனவே நன்கு தெரிந்த கலையான சமையல் கலைக்கு மாறியதால், பிரச்னை இருந்த இடம் தெரியாமல் மறைந்து விட்டது எனவும் அவர் என்னிடம் தன் தெளிவான எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார். 

ஒரே சமயத்தில் பல பிரச்னைகளைச் சமாளிக்க வேண்டி இருக்கிறதே என்று சிலர் புலம்புவதைக் கேட்டிருக்கிறோம். கூர்ந்து கவனித்தால், அது ஒரே ஒரு பிரச்னையாகத்தான் இருக்கும். அதை பல பாகங்களாக பிரித்து, பல பிரச்னைகளாக நோக்குவதும் ஒரு வகை பிரச்னைதான். உதாரணமாக, அலுவலகத்தில் லீவு கிடைக்காதது, மனைவியின் ஏச்சு பேச்சுகளுக்கு ஆளாவது, குடும்ப திருமணத்திற்கு செல்ல முடியாததால் சுற்றம் சூழலிடம் பெயர் இழப்பு ஆகியவை பல பிரச்னைகளாகப் பேசப்பட்டாலும், அதில் பதுங்கியிருப்பது, அலுவலகத்தில் லீவு கிடைக்காமை என்ற ஒரே பிரச்னைதான். அதைச் சரி செய்தால், அதை சார்ந்த மற்ற பிரச்னைகள் அனைத்தும் தானாக விலகி விடும். ஆகவே, பிரச்னை விலக, முழு கவனமும், ஒரே தீர்வை நோக்கி நகர்த்தப்பட வேண்டும். 

ஒவ்வொரு பிரச்னையும் பிறக்கும்போதே, அதற்கான தீர்வுடன்தான் பிறக்கிறது எனலாம். நாம் சந்திக்கும் பிரச்னையைத் தாண்ட, தீர்வு என்ற உடன் பிறப்பைக் கண்டு அறிவதற்கு நிதானமான யோசனை தேவை. சில அவசரப் பிரச்னைகளைத் தாண்ட, வேகமும் தேவைப்படும். ஒரு பிரச்னைக்கு பல தீர்வுகள் இருப்பது போல் தோன்றினாலும், பிரச்னையிலிருந்து நிரந்தர விலகலுக்கு ஏற்ற சரியான தீர்வை தேர்ந்தெடுப்பதில்தான் நம் திறமை அடங்கி இருக்கிறது. சில தீர்வுகளை அடையாளம் காண, தொலை நோக்குப் பார்வை அவசியம். 

ஒரு பிரச்னையைக் கடப்பதற்கு, ஒன்றுக்கு மேற்பட்ட தீர்வுகளை (alternate solutions) கண்டு அறிவது நன்மையை பயக்கும். ஏனென்றால், ஒரு தீர்வு, முற்றிலும் அல்லது பகுதி அளவில், தேவையான நிவாரணத்தை அளிக்கவில்லையானால், மற்றொரு தீர்வை முயற்சி செய்து, பிரச்னையை கடக்க முயலலாம். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com