இந்த வாய்ப்பு கிடைத்தது எனது வாழ்நாள் சாதனை!

தமிழகத்தில் மறக்கப்பட்டு வரும் கோலத்தை திருச்சி ஸ்ரீரங்கத்தில் வாழ்ந்து வரும் மங்களம் சீனிவாசன்
இந்த வாய்ப்பு கிடைத்தது எனது வாழ்நாள் சாதனை!
Published on
Updated on
2 min read

தமிழகத்தில் மறக்கப்பட்டு வரும் கோலத்தை திருச்சி ஸ்ரீரங்கத்தில் வாழ்ந்து வரும் மங்களம் சீனிவாசன் முகநூல் மூலமாக உலகம் முழுக்க வாழும் தமிழ் குடும்பங்களுக்குக் கொண்டு போய் சேர்க்கிறார். கோலத்துடன் நின்று விடாமல் தனது வட்டத்தை ரங்கோலி, தஞ்சாவூர் ஓவியம் என்று விரிவாக்கி தனது இல்லத்தையும், முகநூலையும் ஒரு கலைக்கூடமாக மாற்றியுள்ளார். இதுகுறித்து அவர் நம்முடன் பகிர்ந்து கொண்டவை:

'பிறந்தது ஸ்ரீரங்கத்தில். வளர்ந்தது நெய்வேலியில். அப்பா நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் கணக்காளராக வேலை செய்து வந்தார். அம்மா அருமையாகக் கோலம் போடுவார். கோலத்தில் அவர்தான் எனது குரு. நெய்வேலியில் கிடைக்கும் வெண்நிற மணலைத்தான் கோலமாவாகப் பயன்படுத்துவோம். ஐம்பது புள்ளி, எண்பது புள்ளி கோலம் என்று போட்டி போட்டுக் கொண்டு போடுவோம். அப்படித்தான் கோலத்தைக் கற்றுக் கொண்டேன். எனது மாமா மகனைத் திருமணம் செய்து கொண்டதால் ஸ்ரீரங்கத்தில் நிரந்தரவாசியாகி விட்டேன். கணவர் 'பெல்' நிறுவனத்தில் பணிபுரிகிறார். 

கோயில்களுக்குப் போவதில் எனக்கு அத்தனை விருப்பம். நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஸ்ரீரங்கத்தைச் சுற்றியுள்ள எல்லா கோயிலுக்கும் சென்று வழிபட்டு வருவேன். கோயிலில் கோலம் போடுவேன். வில்வ, வன்னி மரக் கன்றுகளை கோயிலில் நட்டு வருவேன். இவைதான் எனது அன்றாட வேலைகளாக இருந்தன. 

'தமிழ்நாடு அரசின் கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம் எனது வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்தியது. எனக்கு கோலம் வரைய வரும் என்றாலும் ஓவியம் வரைய வராது. இந்தக் கழகம் ஓர் ஆண்டு ஓவியப் பயிற்சி வகுப்புகளை உதவித் தொகை வழங்கி நடத்தியது. நூறு பெண்கள் இந்த பயிற்சி வகுப்பில் சேரலாம். சுமார் இரண்டாயிரம் பெண்கள் மனு செய்திருந்தனர். தேர்வு வைத்து தெரிவு செய்யப்பட்டவர்களில் நானும் ஒருத்தி. 

46-ஆம் வயதில் நான் மீண்டும் மாணவியானேன். சிரத்தையுடன் ஓவிய நுணுக்கங்களை கற்றுக் கொள்ளத் தொடங்கினேன். முதல் ஏழுமாதம் மனித உடல் கூறுகளை வரைவதை அக்கு வேறு ஆணி வேறாகச் சொல்லிக் கொடுத்தார்கள். பென்சில் கொண்டுதான் வரைய வேண்டும். மை கொண்டு வரையத் தொடங்கியது எட்டாம் மாதத்தில். பிறகு தஞ்சாவூர் ஓவியம் வரைவது குறித்து பயிற்சிகள் தரப்பட்டன. 

இந்த அடிப்படை பயிற்சிகள் என்னுள் ஒளிந்திருந்த கலைத் திறனைப் பட்டை தீட்டி வெளியே கொண்டு வந்தன. இப்போது மனித உருவத்தை அல்லது சிக்கலான ஓவியத்தை எந்தக் கோணத்திலும் என்னால் சரியாக வரைய முடியும். இந்த தன்னம்பிக்கையை அந்த பயிற்சி வகுப்புகள் தந்தன. 

வீட்டில் விழாக் காலங்களில் பல வண்ணப் பொடிகளைக் கொண்டு ஓவியம் வரைவேன். வருகிறவர்கள் பாராட்டுவார்கள். என்னைப் பற்றி அறிந்த ஒரு விழா அமைப்பாளர், 'மாதம் இருபதாயிரம் தருகிறேன்... விழா சமயங்களில் பொருத்தமான கோலங்களை போட்டுத் தர வேண்டும் என்று அணுகினார். அப்போது வியாபார ரீதியாக இயங்க மனம் இடம் தரவில்லை. அதனால் அந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை.

'தஞ்சாவூர் ஓவியத்தில் நகாசு வேலைகள் அதிகம். தவிர ஓவியம் வரையும் துணியை சலவைக் கல் அளவுக்கு வழுவழுப்பாகக் கொண்டு வந்த பிறகுதான் ஓவியம் வரையத் துவங்க வேண்டும். உழைப்பு அதிகம். நான் பயன்படுத்தும் தங்கத்தில் உருவாகும் மெல்லிய தகடுகள் (foil) அசலானவை. மாசு குறைந்த தங்கத் தகடுகளை பயன்படுத்துவதில்லை. தஞ்சாவூர் ஓவியத்திற்கு ஆரம்ப வேலைகளுக்காக உதவியாளர்கள் இருக்கிறார்கள். ஒரு நாளைக்கு பன்னிரண்டு மணி நேரம் ஓவியங்களுக்காகச் செலவிடுகிறேன். தஞ்சாவூர் ஓவியங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. பலரும் தங்கள் குலதெய்வத்தை வரையச் சொல்லி ஆர்டர்கள் செய்கிறார்கள். அவர்கள் தரும் படத்தை அடிப்படையாக வைத்து வரைந்து சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பி ஒப்புதல் பெற்ற பின் ஓவியத்தை பூர்த்தி செய்வேன். எனது ஓவியங்களைப் பார்த்து திருப்தி அடைந்த காஞ்சி மடம் ஆதிசங்கரருக்குப் பின் அவதரித்த எழுபத்திரண்டு சங்கராச்சாரிகளின் படங்களை வரையச் சொல்லியிருக்கிறார்கள். இந்த வாய்ப்பு கிடைத்ததை எனது வாழ்நாள் சாதனை என்று சொல்லலாம். இந்த அரிய வாய்ப்பு நான் வணங்கும் அகிலாண்டேசுவரி அருளால் கிடைத்திருக்கிறது என்று நம்புகிறேன்.

கோலம், ரங்கோலி ஓவியம் எனது ஆத்ம திருப்திக்காக வரைகிறேன். அதை நான் வணங்கும் கடவுள்களுக்கு கலை வழிபாடாகக் கருதுகிறேன். 2013 -இல் எனது மகள்களான பார்கவி, ஐஸ்வர்யா 'மை மாம்ஸ் ஆர்ட் கேலரி' என்ற முகநூல் பக்கத்தைத் தொடங்கினார்கள். எனது கலைப் படைப்புகளின் படங்களை அதில் பதிவேற்றம் செய்தார்கள். இது மட்டும் நடந்திருக்காவிட்டால், என்னைப் பலருக்கும் தெரியாமல் போயிருக்கும். பெற்ற தாய்க்கு மகள்கள் உரிய விதத்தில் உதவினார்கள். எனது முகநூலைப் பார்த்தவர்கள் என்னைத் தொடர்பு கொள்கிறார்கள். சுமார் ஒரு லட்சம் பேர்கள் இந்த முக நூல் பக்கத்தைத் தொடர்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

வண்ணக் கோலப் பொடியில் ஜரிகை வேலைக்காக பயன்படுத்தும் தங்க நிறப் பொடியை சரியான வண்ணம் வரும் விதத்தில் உருவாக்குவதில் சிக்கல் உள்ளது. பல ஆண்டுகளாக பரீட்சித்துப் பார்த்து, எலுமிச்சை நிற மஞ்சள், காவி, ஆரஞ்சு, அடர் சிவப்பு நிறங்களை உரிய விகிதத்தில் கலந்து தங்கத்தின் உண்மையான பகட்டினை பொடியில் கொண்டு வந்திருக்கிறேன். இது எனக்குத் தொழில்ரீதியாகக் கிடைத்த வெற்றி. கோலம், ரங்கோலி, தஞ்சாவூர் ஓவியங்களில் கின்னஸ் சாதனை நிகழ்த்த வேண்டும். அதற்கான வேலைகளில் இறங்கியுள்ளேன்' என்கிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com