ஜப்பான் இளவரசியின் திருமண ஒத்தி வைப்புக்கான காரணம்?!

ஜப்பான் இளவரசி மேக்கோ தனது பல்கலைக்கழகத் தோழரான சாமானிய இளைஞர் ஒருவரை திருமணம் செய்து கொள்ளப் போவதாக கடந்த ஆண்டு அறிவித்திருந்தார்
ஜப்பான் இளவரசியின் திருமண ஒத்தி வைப்புக்கான காரணம்?!

ஜப்பான் இளவரசி மேக்கோ தனது பல்கலைக்கழகத் தோழரான சாமானிய இளைஞர் ஒருவரை திருமணம் செய்து கொள்ளப் போவதாக கடந்த ஆண்டு அறிவித்திருந்தார். இந்தத் திருமணத்தின் காரணமாக மேக்கோ தனது இளவரசிப் பட்டத்தை இழக்கும் படியாகலாம் எனவும் கூறப்பட்டது. ஆனால் அதைப் பற்றியெல்லாம் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் மேக்கோ மற்றும் கொமுரோ திருமணம் குறித்த அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியானது. தற்போது இந்தத் திருமணம் 2020 ஆம் ஆண்டுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஜப்பான் ஊடகங்கள் அறிவித்துள்ளன. 

காரணம் இளவரசியின் திருமணத்திற்கு முன்பாகத் தம்பதிகள் இருவரும் ஜப்பானின் மரபார்ந்த பெருமைகளைப் பற்றி மேலும் பல விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் எனவும், அதைப்பற்றியெல்லாம் அறிந்து கொள்வதற்கு முன்பாக திருமண பந்தத்தில் இணைவது அத்தனை பொறுப்பான செயலாக இருக்கக் முடியாது எனவும். மணமக்கள் இருவரும் தங்களது நாடு குறித்த மேலும் அதிகமான விஷயங்களைத் தெரிந்து கொள்வதோடு, ஒரு அரச குடும்பத்துப் பெண்ணை மணக்க இருக்கும் சாமானிய இளைஞனும், சாமானியனை மணப்பதால் தனது அரச கெளரவங்களிலிருந்து இறங்கி வர முற்பட்டுள்ள இளவரசியும் தங்களது எதிர்கால வாழ்வில் இந்தத் திருமணத்தால் ஏற்பட உள்ள மாற்றங்களைப் பற்றி மன முதிர்ச்சியுடன் எதிர் கொண்டு இல்லறத்தைத் துவங்க வேண்டும். அப்போது தான் அந்த பந்தம் என்றென்றைக்குமாக நீடிக்க முடியும். எனவே மேற்கண்ட காரணத்துக்காகத் தான்  இத்திருமணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதே தவிர திருமணத்தை முற்றிலும் நிராகரிக்கும் அல்லது தவிர்க்கும் எண்ணமெல்லாம் அரச குடும்பத்துக்கு இல்லை என மேக்கோவின் அரண்மனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அரச குடும்பத்தின் தரப்பில் இப்படிக் கூறப்பட்டாலும் கூட பொது மக்களிடையே, மணமகனின் சாமானியத் தன்மை தான் திருமணத்தை ஒத்து வைத்திருப்பதற்கான முதல் காரணம் எனப் பேச்சு அடிபடுகிறது. ஏனெனில் இளவரசி மேக்கோ ஜப்பானியப் பேரரசர் அகிஷினோவின் மூத்த பேத்தி. தங்களது அந்தஸ்துக்கு இந்த வரன் ஒத்து வரக்கூடியதல்ல என்பதால் தான் அரசகுடும்ப வட்டாரத்தில் இத்திருமணம் குறித்த பலத்த எதிர்ப்பு எழுப்ப்படுகிறது என ஜப்பானிய ஊடகங்கள் கிசுகிசுக்கின்றன. சில ஊடகங்கள் அரச குடும்பத்தை நெருக்கும் கடன் சுமையாலும் கூட திருமணம் ஒத்தி வைக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறுகின்றன. எது உண்மையோ? ஆனால் அரச குடும்ப வட்டாரத்திலிருந்து வந்த செய்தி கூறுவது என்னவென்றால்? திருமணம் ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறதே தவிர நிறுத்தப்படவில்லை என்கிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com