காதலுக்கு முன் அதென்ன டேட்டிங்?

இன்றைய யுவதிகள் யுவன்கள் காதலில் விழுவதற்கு முன்னால் அதற்குரிய சிறிய முன்னோட்டத்தை
காதலுக்கு முன் அதென்ன டேட்டிங்?

இன்றைய யுவதிகள் யுவன்கள் காதலில் விழுவதற்கு முன்னால் அதற்குரிய சிறிய முன்னோட்டத்தை ஓட்டிப் பார்ப்பதுதான் டேட்டிங். மனத்துக்கு பிடித்த ஒருவருடன் ஒரு மாலை நேரத்தையோ அல்லது இரவு உணவினையோ பகிர்ந்து கொண்டே அவர்கள் மனத்துக்குள் நுழையும் விருப்பத்தைத் தெரிவிப்பதுதான் இந்த டேட்டிங்கின் நோக்கம்.

டேட்டிங்கிற்கு தமிழ்ப் பதம் என்ன? கவிஞர் மகுடேஸ்வன் களவளாவல் என்பது சரியாக இருக்கும் என்று ஒரு கட்டுரையில் எழுதியிருக்கிறார். வசதி கருதி டேட்டிங் என்றே இங்கே குறிப்பிடலாம்.

டேட்டிங் செல்ல முடிவெடுத்த பின் இருபாலரும் உடை விஷயங்களில் கவனம் எடுப்பார்கள். அடுத்தது சந்திக்கும் நேரம் மிகவும் முக்கியம்.

சொன்ன நேரத்துக்கு சரியாக அங்கிருப்பது அதைவிட முக்கியம். முதல் சந்திப்பிலேயே காத்திருக்க வைக்கக் கூடாது என்பது டேட்டிங் கோட்பாடுகளுள் ஒன்று.

அடுத்ததாக டேட்டிங்கிற்கு முக்கியமான தேவை ரம்யமான சூழலுள்ள ஓர் இடம். பார்க் பீச் போன்று கூட்டம் அதிகமுள்ள இடத்திற்கு டேட்டிங் சென்றால் அது (டைம்) வேஸ்டிங் ஆகிவிடும்.

எனவே அமைதியான அதே சமயம் அழகான இடத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அது பெரும்பாலும் ரெஸ்டாரண்டாக இருப்பது நலம். 

டேட்டிங்கின் போது சில விதிமுறைகள் உள்ளன. அந்த பொழுதுக்கான உணவு மற்றும் அனைத்துச் செலவுகளையும் ஆண் தான் பொறுப்பேற்க வேண்டும். 

தேவை மற்றும் விருப்பம் சார்ந்து உணவுக்கு முன்னால் ஜோடிகள் சிறிதளவு ஒயின் பருகுவார்கள்.

அந்த வைனை ஆர்டர் செய்யும் ஆண் மிகவும் பழமையான விலை மதிப்புள்ள ஒயினை தன் பிரியத்துக்குரியவளுக்கு வாங்கித் தருவதிலிருந்து அவனது பண பலம் அவளுக்குத் தெரிந்துவிடும்.

அதன்பின் இருவரும் உணவு அருந்திக் கொண்டே தங்களுக்கு பிடித்த விஷயங்களைப் பற்றி பேசுவார்கள். 

டேட்டிங்கில் ஒருவரைப் பற்றி மற்றவர்கள் தெரிந்து கொள்வது முக்கியம் என்பதால் உரையாடுவார்கள். அப்போது நீள நீளமாக பேசி நேரத்தை விரயம் செய்ய மாட்டார்கள். அறிவுரைகள் அறவே ஆகாது.

முதல் சந்திப்பிலேயே குடும்பக் கதைகளின் தேவையிருக்காது. நண்பர்கள், முன்னால் காதலர்கள், சினிமா, உணவு, குடும்பம், எதிர்காலம் என எதைப் பற்றியும் அவர்கள் பேச்சு இருக்கலாம்.

குறைவாகவும் அதே சமயம் ஒருவரைப் பற்றி மற்றவர் கூறும் புகழ் உரைகளும்தான் பெரும்பாலும் இருக்கும்.

டேட்டிங் சென்றதும் ஒருவர் மீது மற்றவருக்கு ஈர்ப்பு ஏற்பட்டு காதலாக மாறுவதற்கான சாத்தியம் இருக்கும் எனத் தோன்றினால் அந்தப் பெண் அந்த பில் பணத்தை தான் செலுத்துவதாகக் கூறி மறைமுகமாக தனது சம்மதத்தை தெரிவிப்பாள். இது தான் வெற்றியடைந்த டேட்டிங்.

பிடித்திருக்கிறது, ஆனால் முடிவு செய்ய முடியவில்லை என்ற நிலையில் இருவரும் அந்த பில்லை பகிர்ந்து தருவது ஒருவகை. இது அப்படியும் நகரலாம் அல்லது அந்த இரவுடன் அந்த நபரை மறந்தும் விடலாம்.

டேட்டிங்கின் போது அந்த ஆண் தனக்கு ஏற்றவனாக இருக்க முடியாது என்று பெண் முடிவெடுத்துவிட்டால், அந்த பில் முழுவதுவம் அவன்தான் கட்டவேண்டும். அதற்குப் பின் ஒருவரை ஒருவர் சந்திப்பதை தவிர்த்து விடுவார்கள்.

இதுதான் டேட்டிங்கின் பொது நிகழ்வுகள். சினிமாவில் காண்பிக்கப்படும் டேட்டிங் எல்லாம் மிகையாகச் சொல்லப் பட்டவை.

ஜோடிகள் அடுத்தடுத்த டேட்டிங்கில் காதலைத் தெரிவிப்பது, முத்தமிடுவது, கட்டி அணைப்பது லிவ் இன்னில் வாழ்வதா அல்லது திருமண உறவில் செட்டில் ஆவதா என்றெல்லாம் எதிர்காலம் குறித்து முடிவு செய்வார்கள்.

திருமணம் ஆன பின் பிரச்னை ஏற்பட்டால் பரஸ்பர ஒப்புதலுடன் டிவோர்ஸ் செய்து கொள்ளவும் சில டேட்டிங் தம்பதிகள் தயங்குவதில்லை. 

டேட்டிங் முதல் திருமணம் வரை ரிலேஷன்ஷிப்பிற்கு மதிப்பு கொடுப்பவர்களும் இருக்கிறார்கள். இது அவரவர் மனநிலை வாழ்நிலை சூழல் பொருத்து.

டேடிங் சரியா தவறா என்று இன்றும் டிபேட் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அவரவர் வாழ்க்கை என்று இதை புறந்தள்ளிச் செல்ல முடியாது.

இது சமூகம் கால காலமாக நிறுவி வைத்துள்ள சில அடிப்படை விதிகளின் மீறல்களாகவும் கலாச்சார அதிர்வினை ஏற்படுத்தும் ஒரு தீய செயலாகவும் கருதப்பட்டுவருகிறது. அவர்களை கன்சர்வேடிவ் என்று புறம் தள்ளும் இளைஞர்கள் என் வானம் என் வாழ்க்கை என சுய மைய வாழ்க்கை வாழவே விரும்புகிறார்கள்.

கல்யாணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் அதைப் போய் இப்படி நுனிப் புல் மேயலாமா என்று இந்த இளசுகளிடம் கேட்டால் ஸோ வாட் என்கிறார்கள். ஒரு சந்திப்பில் எப்படி ஒருவரைப் பற்றித் தெரிந்து கொள்ள முடியும் என்று கேட்டாலும், பெற்றோர்கள் பெண் பார்க்கும் படலத்தை ஏற்பாடு செய்வதைப் போலத்தான் இது என்று பதில் சொல்கிறார்கள்.

முன்னது வீட்டுக்குள் பெரியவர்கள் முன்னிலையில் நடக்கும் நிகழ்வு இதுவோ அவரவர் மனம் கவர்ந்தவரை சந்திக்க அவர்களே செய்து கொள்ளும் ஏற்பாடாம். சென்னையில் இந்த டேட்டிங் கலாச்சாரம் வந்து கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு மேலாகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com