தீப்பாய்வது எப்படி ஹீரோயிஸமாக முடியும்? ஒரு ராஜபுதனப் பெண்ணின் கேள்வி!

ராணி பத்மினி தீப்பாய்ந்ததை என்னால் துணிச்சலான காரியமாகவோ, அல்லது அவரது தைரியத்தின் அடையாளமாகவோ கருத முடியவில்லை. ஏனெனில், ஒரு பெண், வாழ்வின் கடினமான தருணங்களில் தற்கொலை செய்து கொள்ள
தீப்பாய்வது எப்படி ஹீரோயிஸமாக முடியும்? ஒரு ராஜபுதனப் பெண்ணின் கேள்வி!

முகமதிய மன்னர்கள் இந்துப் பெண்களை அபகரிக்கத் திட்டமிடுகையில் எல்லாம் ஒன்று அந்தப் பெண்களை குடும்பத்தினரே கெளரவக் கொலை செய்வார்கள் அல்லது ராஜபுதனத்தில் நிகழ்ந்ததைப் போல பெண்கள் கூட்டாகத் தீப்பாய்ந்து மடிவார்கள். இது தான் இந்திய சரித்திரம் பலவேறு காலகட்டங்களிலான தனது பயணம் நெடுகிலும் நமக்குச் சொன்ன நிதர்சனம். இந்தப் பழக்கத்தின் பிறிதொரு வடிவமே ‘சதி எனும் உடன்கட்டை ஏறும் வழக்கம்’. ராஜபுத்ர ஷத்ரிய வம்சங்களைப் பொறுத்தவரை தீப்பாய்வதை மிகப்புனிதமான விஷயமாகத்தான் இப்போதும் அணுகுகிறார்கள். தற்போது அதற்கெல்லாம் சட்டத்தில் அனுமதி இல்லை. அது இந்திய அரசால் தடை செய்யப்பட்ட வழக்கங்களில் ஒன்றென ஆகிவிட்டது. ஆயினும் பல்வேறு சர்ச்சைகள் மற்றும் நடிகை தீபிகா படுகோனுக்கு விடுக்கப்பட்ட பல்வேறு விதமான காட்டுமிராண்டித் தனமான கொலை மிரட்டல்கள் எல்லாவற்றையும் தாண்டி கடந்த வாரத்தில் வெளியான ‘பத்மாவத்’ திரைப்படம் மீண்டும் வட இந்தியப் பெண்களிடையே குறிப்பாக ராஜபுதனப் பெண்களிடையே ‘ஜாஹர்’ என்று சொல்லப்படக் கூடிய கூட்டுத் தீப்பாய்தலை ஊக்குவிக்கிறதா? என்பதான ஒரு விமர்சனக் குற்றச்சாட்டும் அத்திரைப்படத்தின் மீது வைக்கப்படுகிறது. இது குறித்து இணையத்தில் வெளியாகியிருந்த பல்வேறு கருத்துகளில் சித்தூர் ராணி பத்மினி கூட்டுத் தீப்பாய்ந்த அரண்மனைக் கோட்டை வளாகத்திலேயே வசிக்கும் பெண்மணியொருவரின் கருத்து வழக்கமான ராஜபுதனப் பெண்களின் மனநிலையிலிருந்து சற்று வித்யாசமாக இருந்தது.

பத்மாவத் திரைப்படம் பற்றியும் சித்தூர் ராணி பத்மினி குறித்தும் அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் விதமாக;

ராணி பத்மினி தீப்பாய்ந்ததை என்னால் துணிச்சலான காரியமாகவோ, அல்லது அவரது தைரியத்தின் அடையாளமாகவோ கருத முடியவில்லை. ஏனெனில், ஒரு பெண், வாழ்வின் கடினமான தருணங்களில் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுப்பதை எப்படி துணிச்சலுக்கு உதாரணமாகக் கூற முடியும்? தனக்கு வரும் கஷ்டங்களை எதிர்கொண்டு வெல்வது தானே வெற்றியாக இருக்க முடியும். நான் இந்தக் கோட்டை வளாகத்தில் தான் பிறந்தேன். இங்குள்ள ஒற்றை அறை தான் எனது வீடு. எனக்கு 3 வயதான போது போலியோ தாக்குதலால் எனது கால்கள் செயலிழந்து இயக்கத்தை நிறுத்திக் கொண்டன. அதனால் பிற்காலத்தில் யாரும் மணந்து கொள்ள முன்வரவில்லை. என் பெற்றோர் என்னை வற்புறுத்தி எனது 18 வயதில் காடு கேளாத, வாய் பேச முடியாத ஒருவருக்குத் திருமணம் செய்து வைத்து விட்டனர். திருமணத்திற்கு ஒப்புக் கொள்ள நான் விதித்த ஒரே நிபந்தனை. மணமான பின்னும் நான் எனது கல்வியைத் தொடர வேண்டும் என்பதே. அதற்கு ஒப்புக் கொண்டு எனக்குத் திருமணம் நடத்தப்பட்டது. ஆனால், அடுத்த ஆண்டே எனது கணவர் மற்றொரு பெண்ணையும் மணந்து கொண்டதால், நான் அவரிடமிருந்து விவாகரத்துப் பெற விண்ணப்பித்தேன். இதையறிந்து எனது பெற்றோரும், உறவினரும்... வேண்டாம் அப்படிச் செய்யாதே, உனக்கு அதன் பிறகு வேறொரு கணவன் வாய்க்கவே மாட்டான் என்றார்கள். எனக்கு மகாக் கோபம் வந்தது. என் வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்து முடிக்க கணவன் என்ற பெயரில் ஒருவன் இருந்தே ஆகவேண்டுமென்பதில்லை. என்னால் எனது சுயகால்களில் நிற்க முடியும் என்று உள்ளுக்குள் முடிவெடுத்ததோடு அதை அவர்களுக்கான பதிலாகவும் திரும்பச் சொன்னேன்.

பத்து வருடங்களுக்குப் பிறகு தற்போது காயத்ரிக்கு, கணினி மையமொன்றில் பகுதி நேர வேலை கிடைத்தது, கூடுதலாக தன் கையால் தயாரித்த பர்சுகள் மற்றும் சித்திரக் கைவேலைப்பாட்டுடன் கூடிய கைக்குட்டைகள் முதலிவற்றை விற்று வரும் வருமானத்தில் தனது பெற்றோர் மற்றும் இரு மூத்த சகோதரர்களின் வாழ்க்கையைப் பார்த்துக் கொள்கிறார் காயத்ரி. காயத்ரியைப் பொருத்தவரை தைரியமென்றால் அதன் பொருள் ‘நான்கு சுவர்களுக்குள் இருந்து வெளியேறி விட்டு விடுதலையாகிப் பறப்பது’ மட்டுமே!

காயத்ரி சொல்ல முற்படுவது, ‘ராணி பத்மினி அலாவுத்தீன் கில்ஜியின் படைகளை எதிர்த்துப் போராடி வீர மரணம் அடைந்திருந்தால் அதுவே அவளது தைரியமாகக் கருதத்தக்கது என்பதாகவே இருந்தாலும், அவரே தனது நோக்கத்தை அடுத்த நொடியில் மறுக்கவும் செய்கிறார். நான் மட்டுமல்ல, பத்மாவத் திரைப்படத்தை எதிர்த்து தீக்குளித்துப் போராடத் தயாராக இருந்த கர்ணி சேனா அமைப்பைச் சார்ந்த பெண்கள் அனைவருமே கூட சிறு பிராயம் முதல் ராணி பத்மினி தீப்பாய்ந்த வீர வரலாற்றைக் கேட்டே வளர்ந்தவர்கள் தான். அந்தக் காலத்தில் ராஜபுத்ரப் பெண்கள் முக்காடு இல்லாமல் வெளியில் வர அனுமதிக்கப்படவில்லை. திருமணமாகாத இளம்பெண்கள் அந்நிய ஆண்களின் எதிரில் தோன்றவும் தடை இருந்த காலம் அது. அத்தகைய சூழலில் ராணி பத்மினிக்கு தீப்பாய்ந்து தனது பெண்மையைக் காத்துக் கொள்வதைத் தவிர வேறு வாய்ப்புகளே இருந்திருக்காது. எனவே அவள் அதை மட்டுமே செய்திருக்க முடியும். என்றும் சொல்லிக் கொள்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com