கூகுள் நிறுவன வேலையை விட்டுவிட்டு சமோசா விற்கிறார் எம்பிஏ பட்டதாரி! என்ன காரணம்?

மும்பையில் உள்ள நர்சிமோன்ஞ்சி கல்லூரியில் எம்பிஏ படித்துவிட்டு கூகுள் நிறுவனத்தில்
கூகுள் நிறுவன வேலையை விட்டுவிட்டு சமோசா விற்கிறார் எம்பிஏ பட்டதாரி! என்ன காரணம்?

மும்பையில் உள்ள நர்சிமோன்ஞ்சி கல்லூரியில் எம்பிஏ படித்துவிட்டு கூகுள் நிறுவனத்தில் வேலை செய்தவர் முனாஃப் கபாடியா. ஒரு நாள் அவர் பார்த்துக் கொண்டிருந்த கூகுள் நிறுவன வேலையை விட்டுவிட்டார். அடுத்து அவர் செய்த, வேலை சமோசா விற்பனை.

இன்று மும்பையில் அவருடைய 'தி போஹ்ரி கிச்சன்' பிரபலமாகிவிட்டது. அங்கு தயாரிக்கப்படும் உணவு வகைகளை பிரபல நடிகர்கள், அரசியல் தலைவர்கள் உட்பட பலர் விரும்பிச் சாப்பிடுகின்றனர். போர்ஃப்ஸ் பத்திரிகையின் 30 வயதுக்குட்பட்ட சாதனையாளர்களில் ஒருவராக முனாஃப் கபாடியாவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

'சொந்தத் தொழில் நமக்கு ஆகாது. ஏதாவது ஓர் இடத்தில் வேலை செய்து பிழைக்க வேண்டியதுதான்' என்று பல இளைஞர்கள் நினத்துக் கொண்டிருக்கும்போது, முனாஃப் கபாடியாவுக்கு சொந்தத் தொழில் தொடங்கும் ஆர்வம் எப்படி வந்தது? எந்த ஒரு தொழிலையும் - குறிப்பாக ஓர் உணவகத்தைத் தொடங்கி நடத்துவது எப்படி? என்பது பற்றியெல்லாம் மனம் திறந்து பேசுகிறார்:
"என் அம்மா நஃபிசா மிக அருமையாகச் சமைப்பார்கள். வேலை முடிந்து வீட்டுக்கு வந்து சிறிது நேரம் டிவி பார்க்கலாம் என்று நான் உட்கார்ந்தால், ரிமோட்டைக் கையில் வைத்துக் கொண்டு பிடித்தமான சேனல்களில் மூழ்கிக் கிடப்பார் அவர். அதிலும் சமையல் நிகழ்ச்சிகளை விரும்பிப் பார்த்துக் கொண்டிருப்பார். அவரை உருப்படியான வேலைகளில் ஈடுபடுத்த வேண்டும் என்று நான் நினைத்தேன். அவருடைய சமையல் திறமையைப் பயன்படுத்தி ஒரு தொழிலைத் தொடங்கினால் என்ன என்று யோசித்தேன்.

எங்களுடைய போஹ்ரா சமூகத்துக்கென்று சிறப்பான பல உணவு வகைகள் உண்டு. ஆனால் அது பெரும்பாலான உணவகங்களில் கிடைக்காது. அந்த உணவு வகைகளை மிகவும் சுவையாகச் சமைக்கும் என் அம்மாவின் துணையோடு ஓர் உணவகத்தைத் தொடங்கலாம் என்று முடிவு செய்தேன். ஆனால் அதற்காக உடனே ஓர் இடத்தைப் பிடித்து, முதலீடு செய்து தொடங்க வேண்டும் என்று நான் திட்டமிடவில்லை.

எனக்குத் தெரிந்த நண்பர்கள், நண்பர்களின் நண்பர்கள் என 50 பேரை மட்டும் வார இறுதிநாளான சனி, ஞாயிறுகளில் வீட்டிற்கு உணவு உண்ண அழைத்தேன். ஆனால் அதற்குப் பணம் தர வேண்டும் என்றும் சொல்லிவிட்டேன். முதலில் 50 பேர் வந்தார்கள். ஒவ்வொருவரிடமும் ரூ.700-ஐ அவர்கள் சாப்பிட்ட உணவுக்காக வசூல் செய்தேன். சாப்பிட்டு முடித்ததும் என் அம்மாவை அவர்கள் மனம் நிறைந்து பாராட்டினார்கள். இப்படித்தான் தொடங்கியது எனது சொந்தத் தொழில் பயணம்.

2015- இல் தொடங்கப்பட்ட எங்களுடைய "போஹ்ரி கிச்சன்' இப்போது ஆண்டுக்கு 50 லட்சத்துக்கு மேல் லாபத்தைத் தந்து கொண்டிருக்கிறது. ஒரு சாப்பாட்டின் விலை ரூ.1500. பலவிதமான உணவு வகைகளைத் தயாரித்துப் பரிமாறுகிறோம்.

இப்படி ஓர் உணவகத்தைத் தொடங்க நினைப்பவர்கள் முதலில் இலாப நோக்கத்தோடு தொடங்கக் கூடாது. நாம் தயாரிக்கும் உணவுக்கான செலவு தொகையும் நமது உழைப்புக்கான குறைந்த கூலியும் கிடைத்தால் போதுமானது என்ற எண்ணத்துடன் தொடங்க வேண்டும்.

நம் வீட்டில் வந்து சாப்பிடும் உறவினர்கள், நண்பர்களிடம் உணவு எப்படி இருந்தது என்று கருத்து கேட்கக் கூடாது. அப்படி கேட்டால் நன்றாக இல்லையென்றாலும், பிடிக்கவில்லை என்றாலும் கூட , நன்றாக இருக்கிறது என்று கூறிவிடுவார்கள். எனவே பணம் கொடுத்து சாப்பிடுபவர்களிடம்தான் உணவின் தரத்தைப் பற்றிக் கேட்க வேண்டும். அவர்கள்தான் உண்மையைச் சொல்வார்கள்.

நம் உணவகத்தில் தயாராகும் உணவுகளைப் பற்றிய நமது கருத்தும், அங்கு உண்பதற்கு வருகிற வாடிக்கையாளர்களின் கருத்தும் வேறு வேறாக இருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன. எனவே வாடிக்கையாளர்களின் கருத்தை கவனமாகக் கேட்டு அவர்கள் சொல்லும் குறைகள் உணவில் இருந்தால் அவற்றை உடனே திருத்திக் கொள்ள வேண்டும்.

உணவகத்தைப் பற்றிய விளம்பரங்கள் மிக முக்கியம். சமூக ஊடகங்களின் பயன்பாடு அதிகரித்துவிட்ட இக்காலத்தில், உணவுகளை புகைப்படம் எடுத்து, அவை பற்றிய விவரங்களையும் இணைத்து சமூக ஊடகங்களில் உலவவிட்டேன். மேலும் எங்கள் உணவகத்துக்கு வந்து சாப்பிட்டவர்களில் பலர், தாங்களாகவே சமூக ஊடகங்களில் எங்களுடைய உணவுகளின் தரத்தைப் பற்றி பதிவிட்டார்கள். அது எங்களுடைய உணவகத்தைப் பற்றி பலர் தெரிந்து கொள்ள காரணமாகியது. இதில் முக்கியமானது என்னவென்றால், நாம் வெளியிடும் விளம்பரத்தில் நமது உணவுகளின் தரத்தைப் பற்றி எந்த வகையிலும் மிகைப்படுத்திச் சொல்லக் கூடாது. அது நம்மீதான நம்பிக்கையைத் தகர்த்துவிடும். எந்த ஒரு தொழிலுக்கும் அதைப் பற்றி நல்ல நம்பிக்கை அவசியம்.

எந்த ஒரு தொழிலைத் தொடங்கி நடத்தும்போது எல்லா வேலைகளையும் நாமே செய்துவிட முடியாது. நம்மால் செய்ய முடியாத வேலைகள் இருக்கவே செய்யும். அந்த வேலைகளைச் செய்ய பொருத்தமானவர்களை நாம் சேர்த்துக் கொள்ள வேண்டும். அவர் பார்ட்னராக இருக்கலாம். வேலையாளாக இருக்கலாம். நம்மைவிட விஷயம் தெரிந்தவராக இருப்பது அவசியம். வாடிக்கையாளர்களுடன் தனிப்பட்ட தொடர்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். வாடிக்கையாளரின் போன் நம்பர்,

ஈ மெயில், ஐடி போன்றவற்றை வாங்கி வைத்துக் கொண்டு அவ்வப்போது தொழில் தொடர்பான செய்திகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். உணவகத்தைத் தொடங்கி நடத்தும் போது நாம் எப்போதும் உணவின் தரத்தில் கவனமாக இருக்க வேண்டும். சுவை குறையக் கூடாது. என் அம்மாதான் தலைமைச் சமையல்காரர் என்றாலும், பலரை வேலைக்குச் சேர்த்து, எப்படி சுவையாகச் சமைப்பது என்பதைக் கற்றுக் கொடுத்திருக்கிறோம்' என்கிறார் முனாஃப் கபாடியா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com